| | பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டி உள்ளது பலுச்சிஸ்தான் மாநிலம். மிகவும் பின்தங்கிய மாநிலமான இங்கு அடிக்கடி நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகள் நடந்து மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவது வாடிக்கை. கடந்த 1935-ம் ஆண்டு இந்த மாநில தலைநகர் குவெட்டா நகரத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அந்த நகரமே இடிந்து தரை மட்டமானது. இதே போல பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான (ரிக்டர் அளவில் 7.6) நில நடுக்கத்தில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். கடந்த ஆண்டு பலுச்சிஸ்தான் மாநிலத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 100-க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த பலுச்சிஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலையில் 2 முறை மீண்டும், மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. முதல் நில நடுக்கம் அதிகாலை 4.33 மணிக்கு ஏற்பட்டது. அடுத்து 5.10 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதில் ஜியாரத் மற்றும் பிஷின் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஜியாரத் பகுதியில் உள்ள 8 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதால் சேதம் அதிக அளவில் ஏற்பட்டதாக புவியியல் வல்லுனர் காமர்-உஜ்-ஜாமன் சவுத்ரி தெரிவித்தார். லோரலை, குயில்லா அப்துல்லா, சிப்பி, போலன், மஸ்துங், ஜோஹ்ப் ஆகிய பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. 2 முறை பூகம்பம் ஏற்பட்ட போது அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். நில நடுக்கத்தை உணர்ந்த பலர் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். விழித்துக் கொண்ட சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்து, துப்பாக்கியால் சுட்டு பூகம்பத்தை அறிவித்தனர். மசூதிகளில் இருந்த ஒலிபெருக்கிகள் மூலமும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினார்கள். இந்த நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகள் களி மண்ணாலும், மூங்கிலாலும் கட்டப்பட்டவை. அந்த வீடுகள் முழுவதும் தரை மட்டமாயின. பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டது.
170-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியும், நிலச் சரிவில் உயிரோடு புதைந்தும் பலியானார்கள். 100 பேர் பலியானதை பலுச்சிஸ்தான் மாநில வருவாய்த்துறை மந்திரி ஜமாரக் கான் உறுதி செய்தார். இன்னும் நிறையப் பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று மேயர் தில்வார் காக்கர் அச்சம் தெரிவித்து உள்ளார். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவத்தின் நடமாடும் ஆஸ்பத்திரிகள், டெண்டுகள், கம்பளிகள், போர்வைகள் மற்றும் மருந்து பொருட்கள், உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. வீடுகளை விட்டு வெளியே வந்தவர்களும், வீடுகளை இழந்தவர்களும் சாலைகளிலும், திறந்த வெளிகளிலும் படுத்து தூங்கினார்கள். பலர் பயத்தில் தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தனர்.
பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு அரசாங்கம் உடனடியாக ராணுவத்தினரையும், துணை ராணுவப் படையினரையும், மீட்புக் குழுவினரையும் அந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. பல கிராமங்களில் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டு இருந்ததாலும், கிராமங்களை எளிதில் சென்று அடைய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஒதுங்கி இருந்ததாலும், மலைப் பகுதியில் கிராமங்கள் இருந்ததாலும் மீட்புக் குழுவினரால் உடனடியாக அந்த இடங்களைச் சென்று அடைய முடிய வில்லை. பூகம்பம் ஏற்பட்ட 6 மணி நேரம் கழித்துக்கூட அவர்களால் அங்கு சென்று சேர முடியவில்லை. பூகம்பம் ஏற்பட்ட இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
பூகம்பம் நடந்த பிறகு 7 முறை அதன் பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை 4 முதல் 4.3 வரை ரிக்டர் ஸ்கேல் அளவில் இருந்தன. இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பின்னதிர்வுகள் இருக்கும் என்றும், அவை அதிக அளவில்கூட இருக்க வாய்ப்புண்டு என்றும் புவியியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான இங்கு அதிக அளவில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது. அந்த ஆலைகளுக்கோ, இயற்கை எரிவாயு கிணறுகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் உடனடியாக கிடைக்கவில்லை.
| |
No comments:
Post a Comment