Sunday, October 19, 2008

கிளிநொச்சி அருகே கடும்போர் ஏராளமான சிப்பாய்கள் பலியானதாக இலங்கை ராணுவம் ஒப்புதல்


கொழும்பு, அக்.20-

கிளிநொச்சி அருகே நேற்று நடந்த கடும் போரில் ஏராளமான சிப்பாய்கள் பலியானதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

13 கி.மீ. தொலைவில்

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தலைநகராக விளங்குவது கிளிநொச்சி. அந்த மாவட்டத்தை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எனினும் அந்த நகரை நெருங்குவதில் ராணுவத்துக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலான படைகளை ராணுவம் அனுப்பி வைத்தது.

கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக மட்டும் ராணுவத்தின் 57 டிவிசன் துருப்புகள் சென்றுள்ளன. இதனால் அங்கு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள அக்கரையான் குளம் என்ற இடத்தில் ராணுவம் நேற்று கடும் தாக்குதல் நடத்தியது.

விஷவாயு தாக்குதல்

அந்த பகுதியில் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு ராணுவம் முன்னேறி சென்றது. மேலும் விடுதலைப் புலிகளின் 19 பதுங்கு குழிகளையும் ராணுவத்தினர் கைப்பற்றினர். இதையடுத்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறை சமயங்களில் பயன்படுத்தும் கண்ணீர் புகை குண்டுகளைப் போன்றவற்றை ராணுவம் மீது வீசினார்கள்.

விடுதலைப் புலிகள் வீசிய அந்த குண்டுகள் வெடித்தபோது, விஷ வாயு கசிந்தது. அவை அனைத்தும் ரசாயன குண்டுகள் என்பதால் ராணுவ வீரர்கள் செத்து மடிந்தனர். இதனால் ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு பின் வாங்கினர். இறுதியில் 2 கி.மீ. தொலைவை கைப்பற்றியதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராணுவ அமைச்சக அறிக்கை

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், `விடுதலைப் புலிகளின் விஷவாயு தாக்குதல் இருந்தபோதிலும் 19 பதுங்கு குழிகளை கைப்பற்றினோம். இந்த தாக்குதலில் ஏராளமான வீரர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கரையான் குளத்தில் மெதுவாக முன்னேறிய உடனேயே, விஷவாயு தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே, அவர்கள் தரப்பில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை. எனினும், ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

கடற்படை தளம் முற்றுகை

விமானம் மற்றும் கடற்படை தாக்குதல்களை தொடர்ந்து விஷவாயு மூலமாகவும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி இருப்பதால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கிளிநொச்சியைப் போல முல்லைத் தீவு பகுதியிலும் கடுமையான போர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் ஏராளமான விடுதலைப் புலிகள் பலியானதாக ராணுவம் தெரிவித்தது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் கடற்படை தளமான நச்சிகுடா பகுதியை நோக்கி ராணுவம் முன்னேறி வருகிறது. நீண்ட சண்டைக்கு பிறகு இந்த தளத்தை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவித்து இருக்கிறது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=445535&disdate=10/20/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails