Thursday, October 16, 2008

பாராளுமன்றம் இன்று கூடுகிறது காரசார விவாதத்துக்கு கட்சிகள் தயார்

 


புதுடெல்லி, அக்.17-

பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் காரசார விவாதத்துக்கு கட்சிகள் தயார் நிலையில் இருக்கின்றன.

பாராளுமன்ற கூட்டம்

பாராளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகிறது. இந்த கூட்டம் 5 வாரங்கள் நடக்கிறது. நவம்பர் 21-ந் தேதி கூட்டம் நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

அதே நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. குறிப்பாக உள்நாட்டில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகளின் அட்டூழியங்கள், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரான கொள்கை, பொடா போன்ற சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், பங்கு மார்க்கெட் வீழ்ச்சி போன்றவற்றை கையில் எடுத்து பா.ஜனதா பிரச்சினைகளை எழுப்பும்.

ஓட்டுக்கு பணம்

கடந்த ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்த பிரச்சினையை மீண்டும் பா.ஜனதா கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியும் சில பிரச்சினைகளை கையில் எடுக்க தயாராக இருக்கிறது. பா.ஜனதா ஆட்சி நடத்தும் கர்நாடகம், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசா போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பங்கு மார்க்கெட் வீழ்ச்சி, போன்றவை பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தெரிய வருகிறது.

பஜ்ரங்தளம்

அதே நேரத்தில் பஜ்ரங்தளம் அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் வற்புறுத்துவார்கள் என்றும் கருதப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் அமைக்கப்பட இருக்கும் ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு மாயாவதி அரசு நிலம் ஒதுக்க மறுத்த பிரச்சினை பற்றியும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேசுவார்கள்.

கடைசி கூட்டம்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். எனவே இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்தும் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடராக இருக்கும்.

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 6 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது. எனவே இந்த பாராளுமன்ற கூட்டம் முக்கியமான கூட்டம் என்று கருதப்படுகிறது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails