கொழும்பு, அக்.17-
"இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்ய முடியாது. போர் நிறுத்தம் செய்தால், விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக அமைந்து விடும்'' என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று தெரிவித்தார்.
பிரதமர் அறிவுரை
இலங்கையில் விடுதலைப்புலிகளின் நிர்வாக தலைநகரமாக கருதப்படும் கிளிநொச்சி பகுதியை ராணுவம் முற்றுகையிட்டு உள்ளது. இந்த போரில் அப்பாவி தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போர் மேகம் சூழ்ந்துள்ளதால் ஐ.நா. மற்றும் சர்வதேச நிவாரண அமைப்புகளையும் இலங்கை அரசு அங்கு இருந்து வெளியேற்றி விட்டது.
எனவே, இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக் கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. வருகிற 29-ந் தேதிக்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படா விட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, `இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை கூடாது. பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் அறிவுறுத்தினார்.
ராஜபக்சே அறிக்கை
ஆனால், இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. விடுதலைப் புலிகள் மீதான போரை நிறுத்த முடியாது என்று அதிபர் ராஜபக்சே நேற்று அறிவித்தார். இது குறித்து, இலங்கை ஒலிபரப்பு கழகம் சார்பாக ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
போர் நிறுத்தம் கிடையாது
இலங்கை ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசால் (இலங்கை அரசு) போர் நிறுத்தத்தை அறிவிக்க முடியாது. போர் நிறுத்தம் குறித்து நாங்கள் பரிசீலிக்கவே இல்லை.
போர் நிறுத்தத்தை அறிவித்தால், இன்னும் அதிகமான அளவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டங்களை வகுப்பதற்கு கால அவகாசம் அளிப்பது போல ஆகிவிடும். கிளிநொச்சி புறநகர் பகுதியை ராணுவம் நெருங்கி விட்டது. எந்த சமயத்திலும் அந்த நகரை கைப்பற்றி விடுவோம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக தலைவர்களுக்கு உறுதி
இலங்கை, இறையாண்மை மிக்க நாடு. வன்னி பகுதியில் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கை அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை விடுதலைப் புலிகள் தொடங்கி இருக்கின்றனர். எனவே, அவர்களின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று இந்திய அரசை இலங்கை கேட்டுக்கொள்கிறது.
இலங்கையில் அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக தலைவர்களுக்கு ஒன்றை உறுதியாக கூறிக் கொள்கிறேன். வன்னி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் இலங்கை அரசு வழங்கும்.
இவ்வாறு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை
முன்னதாக, இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் நேற்று முன்தின இரவு அளித்த பேட்டியில், "இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதியிலோ அல்லது விடுதலைப் புலிகள் ஆக்கிரமித்துள்ள பகுதியிலோ வசிக்கும் அப்பாவி தமிழர்கள் ஒருவர் கூட பலியாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
இலங்கை மந்திரி லட்சுமணன் யபா அபயவர்த்தனா கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்காக, விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்தாது'' என்று தெரிவித்தார்.
ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளும், `இந்திய அரசியல்வாதிகளின் நெருக்குதலுக்கு பணிந்து, விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நழுவ விடக்கூடாது' என்று தெரிவித்து உள்ளனர்.
தூதர் பேட்டி
இதற்கிடையே, இலங்கை தூதர் ஜெயசிங்கே டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த வேண்டுகோளை பத்திரிகைகள் மூலமாக அறிந்தேன். இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்ற அவரது அறிவுரையை இலங்கை அரசு தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளும்'' என்றார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=444893&disdate=10/17/2008
No comments:
Post a Comment