வாடிகன், அக்.13-
இந்தியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் நேற்று புனிதர் பட்டம் வழங்கினார். வாடிகனில் நேற்று நடந்த விழாவில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
1986-ல் தூயவர்
கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள குடமலூர் என்ற கிராமத்தில் ஜோசப்-மேரி தம்பதிக்கு மகளாக 1910-ம் ஆண்டு பிறந்தவர் அல்போன்சா. கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக தவ வாழ்க்கை மேற்கொண்ட அவர், பரநங்கனம் என்ற பகுதியில் பல்வேறு சமூக நலச் சேவைகளை செய்தார். உடல்நலக் குறைவு காரணமாக 1946-ம் ஆண்டு இறந்தார்.
இறந்த பின்பும், அவருடைய சமாதியில் ஜெபம் செய்தவர்களுக்கு பல அற்புதங்களை செய்ததாக நம்பப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, கடந்த 1986-ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் இந்தியா வந்தபோது புனிதர் பட்டம் பெறுவதற்கு முதல்நிலை தகுதியான `தூயவர்' (ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்) பட்டத்தை அல்போன்சாவுக்கு வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, அல்போன்சாவுக்கு நேற்று `புனிதர்' பட்டம் வழங்கப்பட்டது.
4 பேருக்கு புனிதர் பட்டம்
இதற்காக வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் இந்திய நேரப்படி நேற்று மதியம் 12 மணிக்கு விழா தொடங்கியது. முதலில் லத்தீன் மொழியில் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்திய நேரப்படி 2.40 மணிக்கு அல்போன்சாவுக்கு `புனிதர்' பட்டம் வழங்குவதாக போப் ஆண்டவர் அறிவித்தார்.
அப்போது பைபிளில் உள்ள சில வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார். மேலும் அல்போன்சாவின் வாழ்க்கைக் குறிப்பையும் அவர் வாசித்தார். புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அல்போன்சா பெயரில் தேவாலயங்கள் தொடங்கலாம்.
அல்போன்சா தவிர இத்தாலியை சேர்ந்த கியாடெனோ எரிகோ, சுவிட்சர்லாந்தை சேர்ந்த மேரி பெர்னார்டு, ஈகுவடார் நாட்டை சேர்ந்த நார்சிசா டி ஜீசஸ் ஆகியோருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. நான்கு பேரில், அல்போன்சாவுக்கு மூன்றாவதாக `புனிதர்' பட்டம் அளிக்கப்பட்டது.
மத்திய மந்திரி தலைமையில் குழு
இந்த விழாவில் இந்தியாவில் இருந்து கத்தோலிக்க பிஷப்புகள், கார்டினல்கள் உட்பட 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பாக மத்திய மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையில் 15 பேர் குழு கலந்து கொண்டது.
புனிதர் பட்டம் அறிவித்தபோது, அல்போன்சாவின் புகழை துதிக்கும் பாடல்கள் அடங்கிய தொகுப்பை கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி செலியா போப் ஆண்டவரிடம் வழங்கினர். அப்போது அவருடன் வாடிகனுக்கு வந்திருந்த கேரளா குழுவினர் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்திக் கொண்டு இருந்தனர்.
கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு கண்டனம்
இந்த விழா முடிந்ததும் இந்திய குழுவினரை போப் ஆண்டவர் சந்தித்தார். அப்போது இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.
அப்போது அவர், "இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் கடினமான தருணத்தில் உள்ள போதிலும், தங்களுடைய முதல் மகளை புனிதர் ஆக்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் அனைவரும், கடினமான தருணத்தில் இருந்து மீள வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை ஆகும். வன்முறையில் ஈடுபடும் அனைவரும் தங்களுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து அன்பு என்னும் நாகரீக வாழ்க்கையை கட்டமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
முன்னதாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் போப் ஆண்டவர் கண்டன அறிக்கை வெளியிட்டார் என்பதும், ரோமில் உள்ள இந்திய தூதரை இத்தாலி அரசு அழைத்து கண்டனம் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் இந்திய பெண்மணி
உலகம் முழுவதும் 10 ஆயிரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், `புனிதர்' பட்டம் பெற்று இருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து `புனிதர்' பட்டம் பெற்ற இரண்டாவது நபர் அல்போன்சா ஆவார். அதே நேரத்தில், முதல் இந்திய பெண்மணி என்ற பெருமை அவரையே சேரும்.
முன்னதாக 1862-ம் ஆண்டில் மும்பையை சேர்ந்த புனித. கான்சலோ கார்சியா என்பவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அவர் போர்த்துகீசிய தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர். மேலும், அல்பேனியாவில் பிறந்து இந்தியாவில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசாவுக்கும் புனிதர் பட்டத்துக்கு முந்தைய நிலையான `தூயவர்' பட்டம் கடந்த 2003-ம் ஆண்டில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் விழாக்கோலம்
அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கேரளா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அங்குள்ள தேவாலயங்கள் அனைத்திலும் மணிகள் ஒலித்தன. சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
அல்போன்சா கன்னியாஸ்திரியாக பணியாற்றிய பரநங்கனம் பகுதியில் அவருடைய பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அங்குள்ள சிறிய தேவாலயம் மற்றும் பள்ளிகளில் அவர்கள் கூடினர். அந்த ஊரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் அல்போன்சா படம் வைக்கப்பட்டு இருந்தது. அவருடைய சமாதியிலும் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
நாகர்கோவிலில் நேரடி ஒளிபரப்பு
நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள தூய அல்போன்சா ஆலயத்தில் நேற்று கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் அல்போன்சா சிறப்பு நவ நாள் ஜெபம் நடந்தது. கூட்டு திருப்பலியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது.
ஆலய வளாகத்தில் 2 டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு, வாடிகன் நகரில் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பு செய்யப்பட்டது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=444029&disdate=10/13/2008
No comments:
Post a Comment