Sunday, October 19, 2008

விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த மாட்டோம் இலங்கை ராணுவ செயலாளர் அறிவிப்பு


கொழும்பு, அக்.20-

`விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த மாட்டோம். தோல்வியை தவிர்க்கவே இந்திய அரசியல்வாதிகளின் உதவியை விடுதலைப்புலிகள் நாடி இருக்கின்றனர்' என்று இலங்கை ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் சகோதரருமான கோடபயா ராஜபக்சே தெரிவித்தார்.

மன்மோகன் சிங் வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினர்.

நேற்று முன்தினம் தன்னிடம் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம், "ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரையறைக்கு உட்பட்டு சுமூகமான அரசியல் உடன்பாடு எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

இந்த சூழ்நிலையில் இலங்கை ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் சகோதரருமான கோடபயா ராஜபக்சே நேற்று கூறியதாவது:-

தோல்வியை தவிர்க்க ஆதரவு

இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் பெரிய அளவிலான சேதத்தை விடுதலைப்புலிகள் சந்தித்து வருகின்றனர். அவர்கள் கடைசி கட்டத்தில் இருப்பது தெளிவாக தெரிகிறது. அவர்களுடைய தோல்வியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தோல்வி பயம் காரணமாகவே, தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களிடம் இருந்து அதிகபட்ச ஆதரவை பெற முயற்சிக்கிறார்கள்.

அந்த தலைவர்களைக் கொண்டு, இந்திய அரசு மூலமாக இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். விடுதலைப்புலிகள் எதை விரும்புகிறார்கள்? ஏன் இந்த திடீர் நெருக்கடியை தொடங்கி உள்ளனர்? அவர்களுக்கு வேறு வழியே இல்லை என்பதே இதற்கு காரணம். இத்தகைய நிலைமை அவர்களுக்கு ஏற்படும் என்று எங்களுக்கு முன்பே தெரியும்.

தமிழக அரசியல் தலைவர்கள்

எது எப்படி இருந்தாலும், விடுதலைப்புலிகள் மீதான ராணுவ தாக்குதல் தொடரும். தாக்குதலை தற்போது நிறுத்த முடியாது. ராணுவத்திடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. இந்த பிரச்சினையை எழுப்பி வரும் தமிழக தலைவர்கள் அனைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள்தான் கொலை செய்தனர் என்பதை மறக்கக் கூடாது.

வன்னி பகுதியில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருவதாக விடுதலைப்புலிகள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்பதை தமிழக அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் பிடியில் இருந்து தமிழர்களை காப்பாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம். இந்த உண்மை நிலையை தமிழகத்தில் போராடும் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மீனவர்கள் மீதான தாக்குதல்

உணர்வு பூர்வமான விஷயத்தில் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதை தமிழக தலைவர்கள் நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நல்லெண்ண அடிப்படையிலேயே, எங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிக்க இந்திய மீனவர்களை அனுமதிக்கிறோம்.

எல்லை தாண்டி வரும் அவர்களை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே விசாரணை செய்துவிட்டு விடுவிக்கிறோம். ஆனால், ஆயுதங்களை கடத்துவதற்காக தமிழக மீனவர்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி விட்டு ஏமாற்றி வருகின்றனர். எனவே ராணுவ முகாம்களும், கடற்படை தளங்களும் மிக அருகில் இருப்பதால் இங்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று தமிழக மீனவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கோடபயா ராஜபக்சே தெரிவித்தார்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=445549&disdate=10/20/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails