புதுடெல்லி, அக்.8-
ஒரிசாவில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை `டிஸ்மிஸ்' செய்வது பற்றி மத்திய மந்திரிசபை இன்று ஆலோசனை நடத்துகிறது.
பிரதமர் உத்தரவு
ஒரிசாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சாமியார் சுவாமி லட்சுமணானந்தா சரஸ்வதி உள்பட 5 பேர், மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கிறிஸ்தவர்களே காரணம் என்று கூறி, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஒரிசாவை ஆளும் பிஜ× ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசுக்கு மத்திய அரசு அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து வந்தது.
கடைசியாக கடந்த 3-ந் தேதி நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், ஒரிசா நிலவரம் பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீலிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். ஒரிசா கலவரத்தால், பிரான்சு நாட்டுக்கு சென்றிருந்தபோது, தனக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
கவர்னரிடம் அறிக்கை
இதைத்தொடர்ந்து, ஒரிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு சிவராஜ் பட்டீல் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதினார். மேலும், கவர்னர் எம்.சி.பாண்டரேவிடம் ஒரிசா நிலவரம் பற்றி அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வுகளால், ஒரிசா அரசு `டிஸ்மிஸ்' செய்யப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றாற்போல், ஒரிசா விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சில மத்திய மந்திரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இன்று ஆலோசனை
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், ஒரிசா நிலவரம் பற்றி விவாதிக்கப்படுகிறது. ஒரிசாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து சிவராஜ் பட்டீல் எடுத்துரைக்கிறார்.
இக்கூட்டத்தில், ஒரிசா அரசை `டிஸ்மிஸ்' செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
அசாமில் மேலும் ஒருவர் பலி
இதற்கிடையே, அசாமில் உதல்குரி, தர்ரங் ஆகிய மாவட்டங்களில் நீடித்து வரும் வன்முறைக்கு நேற்று மேலும் ஒருவர் பலியானார். அவர் உதல்குரி மாவட்டம் கச்சுபில்லில் மர்ம கும்பலால் கொல்லப்பட்டார். இதனுடன் சேர்த்து, இம்மாவட்டங்களில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவும், கண்டதும் சுட உத்தரவும் தொடர்ந்து அமலில் உள்ளது. ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=443277&disdate=10/8/2008
No comments:
Post a Comment