மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
தூதுக்குழுவை அனுப்பி இலங்கையுடன் பேச வேண்டும்
சென்னை, அக்.17: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
'இலங்கை இனி சிங்கள நாடு, சிங்களர்களுக்கு அடிமையாக வாழ கற்று கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்களுக்கு இங்கு இடமில்லை' என்று இலங்கை போர்ப்படை தளபதி பொன்சேகோ பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதையே புத்தமத குருக்களும் கூறியுள்ளனர்.
அவர்களின் இந்த பிரகடனம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கு விடப்பட்ட சவால். தமிழர் உரிமைக்காக போராடும் பிரபாகரன், எங்கள் முன்னால் மண்டியிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு தமிழினத்தை மண்டியிடச் செய்வதுதான் அர்த்தம்.
விடுதலைப்புலிகள் என்ற பூச்சாண்டியைக் காட்டி, தமிழர்களின் தன்மானத்தை மழுங்கடிக்க செய்யும் எந்த முயற்சியிலும் யாரும் ஈடுபட வேண்டாம். இது ஒரு இனத்தின் தன்மான பிரச்னை.
தளபதி பதவில் இருந்து பொன்சேகோவை நீக்க நாம் குரல் எழுப்ப வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஏற்பட இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இந்த முயற்சியில் முதல்வரும், தமிழக அரசும் ஈடுபட வேண்டும்.
இலங்கை அதிபருடன் நம் பிரதமர் நேரடியாக பேச வேண்டும். இந்தியாவில் இருந்து உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பி, இலங்கை தலைவர்களை சந்தித்து, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கவும், போரை நிறுத்தச் செய்யவும், மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment