கொழும்பு,அக்.22-
சிங்கள ராணுவம் கிளிநொச்சியை மேலும் நெருங்கி வருகிறது. கூடுதலாக ஒரு கி.மீ. நிலப்பரப்பை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
மேலும் முன்னேற்றம்
விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர் தாக்குதல் மற்றும் மழையையும் மீறி, கிளிநொச்சியை மேலும் நெருங்கி விட்டதாக இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி அருகே வன்னேரிகுளம் தெற்கு பகுதியில் மேலும் ஒரு கி.மீ. நிலப்பரப்பை கைப்பற்றி இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
மேலும், நாச்சிகுடா, அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ராணுவம் ஊடுருவி சென்று இருப்பதாக கூறியுள்ளது.
தாக்குதல் முறியடிப்பு
வன்னேரிகுளத்தில் விடுதலைப்புலிகளின் 2 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் முயற்சியை ராணுவத்தின் 59-வது படைப்பிரிவு முறியடித்தது. அங்குள்ள ஆண்டான்குளத்தில் விடுதலைப்புலிகளின் 3 பதுங்கு குழிகளும், பீரங்கி மேடையும் அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மந்தன் பகுதியில் அதிகாலை நேரத்தில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். கிளிநொச்சியின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் தீவிர சண்டை நடந்து வருகிறது. இது ஜெயபுரம் மற்றும் மண்ணியன்குளம் பகுதிகளுக்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணிவெடிகள் அகற்றம்
இதற்கிடையே, முல்லைத்தீவில் ஆண்டான்குளம் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 310 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து ராணுவம் அகற்றியது. அக்கராயன்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன 3 ராணுவ வீரர்களின் உடல்கள் நேற்று சிக்கின. அதே பகுதியில் 2 விடுதலைப்புலிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. பல்லவராயன்காடு பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் ஒரு விடுதலைப்புலி உடலும், ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.
கொக்கடிச்சோலை என்ற இடத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 சிங்கள தொழிலாளர்களை ஒரு மர்ம கும்பல் சுட்டுக் கொன்றது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=445831&disdate=10/22/2008
No comments:
Post a Comment