|
|
பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதிசாரி 2008ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோசவோ,இந்தோனேசியா என பல்வேறு கலவரப் பகுதிகளில் அமைதி ஏற்பட மத்தியஸ்தம் செய்து உதவியவர் இவர். பல்வேறு கண்டங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி சர்வதேச மோதல்களுக்குத் தீர்வு ஏற்பட முயற்சி மேற்கொண்டவர். அவரது அரும்பணியைப் பாராட்டி அவருக்கு 2008ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதென நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்தது என்று இந்த கமிட்டியின் தலைவர் ஓல் டான்பால்ட் எம்ஜோஸ் தெரிவித்தார். 71 வயதாகும் அதிசாரிக்கு நோபல் பரிசு கிடைக்கக்கூடும் என்று பத்திரிகைகளில் முன்னதாகவே செய்தி அடிபட்டது. அவரது பாராட்டத்தக்க முயற்சிகளில் ஒன்று இந்தோனேசிய கலவரத்தை தீர்க்க அவர் பாடுபட்டதாகும். தீவிரவாதிகளுக்கும் இந்தோனேசிய அரசுக்கும் இடையேயான மோதலால் 30 ஆண்டுகளாக கலவரம் நீடித்தது. இதில் 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இவரது மேற்பார்வையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பலன் ஏற்பட்டு 2005ல் தீர்வு ஏற்பட்டது. கோசவோ பிரச்னையிலும் தலையிட்டு அது விடுதலை பெற உதவினார். செர்பியா, கோசவோ மற்றும் பிரிஸ்தினா ஆகியவற்றுக்கு இடையே கூட்டு ஒப்பந்தம் ஏற்பட இவரது பேச்சுவார்த்தை உதவவில்லையென்றாலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருதலைப்பட்சமாக விடுதலை பெறுவதாக அறிவித்துக் கொண்டது கோசவோ. தொடக்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அதிசாரி, 1960ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தூதர் பணியில் நுழைந்தார். 36-வது வயதில் அவர் தான்சானியா தூதராக நியமிக்கப்பட்டார். 1994ல் அதிபர் தேர்தல் வேட்பாளராக பின்லாந்தின் சமூக ஜனநாயக கட்சி அவரை நிறுத்தியது. அதில் வெற்றிபெற்று பின்லாந்து வரலாற்றில் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமைக்கு உரியவரானார். ஆஸ்லோவில் டிசம்பர் 10ம் தேதி நடக்கும் விழாவில் அவருக்கு நோபல் பதக்கம் மற்றும் ரூ. 6.40 கோடி பரிசு வழங்கப்படும். |
No comments:
Post a Comment