Friday, October 17, 2008

டெஸ்ட்டில் அதிக ரன் - சச்சின் புதிய உலக சாதனை

 



இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண் டாவது டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. இதில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் சாதனை நாயகன் சச்சின். சச்சின் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இது வரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் லாரா, 11,953 ரன்கள் எடுத்து தக்க வைத்திருந்தார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தற்போது அந்த சாதனையை முறிய‌டித்துள்ளார். சச்சின் டெஸ்ட் போட்டிகளில், 12,000 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


முன்னதாக சச்சின் சாதனை படைப்பதற்காக லாரா பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லாரா அளித்திருந்த பேட்டியில், சச்சின், இந்தியாவை இக்கட்டான கால கட்டங்களில் காப்பாற்றியிருக்கிறார் என புகழாரம் சூட்டியிருந்தார்.

சச்சின் சாதனை புரிந்ததை தொடர்ந்து மொகாலி விளையாட்டரங்கே களை கட்டியது. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. சக வீரர்கள், சச்சினுக்கு பெவிலியனில் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். ஆஸி., வீரர்கள் முன்னதாக சச்சினை சாதனை படைக்க விடாமல் தடுப்பதே தங்கள் இலக்கு என்று கூறியிருந்தனர். அவர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்தது.

லாரா 131வது ‌டெஸ்ட் போட்டியில் நிகழ்த்திய சாதனையை, சச்சின் தனது 152வது போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.


டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்து முதல் ஏழு இடங்களை பிடித்த வீரர்கள் :

சச்சின் 152 போட்டிகளில் 12000 என்ற இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் ‌போட்டிகளில் 39 சதமும், 50 அரைசதமும் அடித்துள்ளார். வெ. இண்டீஸ் அணியின் லாரா 11953 ரன்கள் அடித்தார். 34 சதமும், 48 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பார்டர், 156 போட்டிகளில் விளையாடி, 11174 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதமும் 63 அரைசதமும் அடித்துள்ளார். அஸி., வீரர் ஸ்டீவ் வாக் 168 போட்டிகளில் விளையாடி, 10927 ரன்கள் எடுத்துள்ளார், 32 சதமும் 50 அரைசதமும் அடித்துள்ளார். டிராவிட், 127 போட்டிகளில் விளையாடி 10341 ரன்கள் எடுத்துள்ளார், 25 சதமும் 53 அரைசதமும் அடித்துள்ளார். ஆஸி., வீரர் பாண்டிங் , 121 போட்டிகளில் விளையாடி, 10239 ரன்கள் எடுத்துள்ளார், 36 சதமும் 40 அரைசதமும் அடித்துள்ளார். கவாஸ்கர் 125 போட்டிகளில் விளையாடி, 10122 ரன்கள் எடுத்துள்ளார். 34 சதமும் 45 அரைசதமும் அடித்துள்ளார்.

நன்றி : தினமலர்
 
http://thamizcricket.blogspot.com

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails