Tuesday, October 21, 2008

ஒரிசா கலவரம்: விசாரிக்க துணைத் தலைவரை அனுப்பியது தேசிய சிறுபான்மை ஆணையம்

 

புதுதில்லி, செப். 8: ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் விஎச்பி தலைவர் லட்சுமனானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதையடுத்து கலவரம் மூண்டது தொடர்பாக விசாரிக்க துணைத் தலைவரை அனுப்பியுள்ளது தேசிய சிறுபான்மை ஆணையம்.

ஆணையத்தின் துணைத் தலைவர் மைக்கேல் பி.பின்டோ, ஒரிசா கலவர நிலைமையை நேரில் ஆராய்ந்து விரிவான அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்வார்.

விஎச்பி தலைவர் கொல்லப்பட்டதையடுத்து கிறிஸ்தவ தேவாலயங்கள், பழங்குடி கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து நேரில் விசாரித்து அவர் அறிக்கை கொடுப்பார். அதற்காக அவர், ஒரிசாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டார்.

தனது பயணத்தை முடித்துக் கொண்டு பின்டோ திரும்பியதும், ஆணையத்தின் மற்ற இரு உறுப்பினர்களான பேராசிரியர் ஜோயா ஹாசன், திலிப் பட்கோங்கர் ஆகியோர் ஒரிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார்கள்.

ஒரிசாவில் அண்மையில் நடந்த வகுப்பு கலவரம் தொடர்பான முழு அறிக்கை ஒரு வாரத்தில் தயாராகிவிடும் என்றார் ஆணையத்தின் தலைவர் ஷபி குரேஷி.

அவர் கூறியதாவது: கலவரத்தின்போது தீவைப்பு, சூறையாடல் நடந்த பகுதிகளுக்கு ஆணைய உறுப்பினர்கள் செல்வார்கள். மக்களிடம் நேரடியாக பேசி உண்மையில் என்ன நடந்தது என்பதை கேட்டறிவார்கள். அரசுத் தரப்பில் தரப்படும் அறிக்கை மீது எங்களுக்கு விருப்பம் இல்லை. சரஸ்வதி கொல்லப்பட்டதையடுத்து மூண்ட வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை தரும்படி, தலைமைச் செயலரிடம் கேட்டோம். ஆனால் இதுவரை ஆணையத்துக்கு மாநில அரசின் அறிக்கை வந்து சேரவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது; பதற்றம் மிக்க பகுதிகளில் படைகளை நிறுத்தியுள்ளோம் என்பது போன்ற தகவல்களை வெறும் வார்த்தை அளவில் எங்களிடம் அரசு தரப்பு தெரிவித்தது என்றார் ஆணையத் தலைவர் குரேஷி. 
 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails