| | பெங்களூர் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்த நிலையில்,ஒரு தேவாலயம் திடீரென தீப்பற்றி எரிந்தது.இதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மேஜை,நாற்காலிகள்,புத்தகங்கள் எரிந்து சாம்பலானது.இது விஷமிகளின் நாசவேலை என்று கிறிஸ்தவர்கள் புகார் கூறுகின்றனர்.ஆனால் போலீஸர் இதை மறுத்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பெங்களூர் ஊரக மாவட்டம், ஆனேக்கல் தாலுகா, அத்திபெலே காவல் சரகத்தில் எடவனஹள்ளி கிராமம் உள்ளது. இங்கு ஒசூர் சாலையில் புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது.
கர்நாடகத்தில் கடந்த மாதம் பரவலாக கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து தேவாலயங்கள், கிறிஸ்தவ பிரார்த்தனை மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல புனித அந்தோணியார் தேவாலயத்திலும் போலீஸர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் பூட்டப்பட்டிருந்த புனித அந்தோணியார் தேவாலயத்துக்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அப் பகுதியில் பணியில் இருந்த போலீஸர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் உள்ளூர் மக்கள் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றியதில் தேவாலயத்துக்குள் பிரார்த்தனை பகுதியில் இருந்த மேசை, நாற்காலி, சில இசைக் கருவிகள், புத்தகங்கள், பாதிரியார் அணியும் ஆடைகள் உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் கிடைத்தும் எடவனஹள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயம் முன்பு குவிந்தனர். "இது தீ விபத்து அல்ல; விஷமிகளின் திட்டமிட்ட சதி" என்று கூறி போராட்டம் நடத்த முயன்றனர். உடனே அங்கு விரைந்த பெங்களூர் ஊரக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.மகேஷ், தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய என்ஜினியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். "மின்கசிவால்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும், விஷமிகளால் தேவாலயம் தீவைக்கப்படவில்லை. தேவாலயத்துக்கு ஒரே நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. அங்கு போலீஸர் பாதுகாப்பில் இருந்ததால் விஷமிகள் நுழைய வழியே இல்லை என்றும் மறுப்புத் தெரிவித்தனர்". இது குறித்து தேவாலயத்தின் பாதிரியார் சந்தோஷ் மற்றும் பெங்களூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அடால்ஃப் வாஷிங்டன் கூறுகையில்,"தேவாலயத்தில் பற்றியிருந்த தீயை அணைத்த பிறகு உள்ளே சென்றுபார்த்தோம். அப்போது, அலமாரியில் இருந்த புத்தகங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்டு மற்றும் பூந்தொட்டிகள் கீழே சிதறிக்கிடந்தன. தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பொருள்கள் சிதறுவதற்கு வாய்ப்பில்லை. எனவே விஷமிகள்தான் இச் செயலில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறினர். இது தொடர்பாக விசாரிக்க தடயவியல் நிபுணர்களின் உதவியை போலீஸர் நாடியுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. | |
No comments:
Post a Comment