இந்து அமைப்புகள் மீது பிரதமர் கடும் தாக்கு:கிறிஸ்தவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் |
|
ஒரிசா மற்றும் கர்நாடகத்தில் கிறிஸ்தவர் மீதான தாக்குதல் நமது அடிப்படை கலாசாரத்துக்கே ஆபத்தானது. மத சகிப்புத்தன்மை வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு கடுமையாக தாக்கிப் பேசினார். தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். இக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஒரிசா,கர்நாடகம்,அசாம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடந்த வன்முறைகள் நியாயமான உணர்வுள்ள அனைவருக்கும் வேதனையளிப்பதாக உள்ளது. இந்த வன்முறைகள்,கலவரங்கள் எல்லாம் செயற்கையாக தூண்டிவிடப்பட்டவை. மதத்தின் பெயரில் கலவரங்களை,வன்முறைகளை தூண்டி விடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேநேரத்தில் இரு தரப்புக்கும் இடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில் அரசு நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும். மக்களிடையே அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர். மத நல்லிணக்கத்துக்கு,ஒருமைப்பாட்டுக்கு, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நமது அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது அவசியம். நமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளும் வகையில் நமது அரசியல் ஜனநாயக நடவடிக்கை அமைய வேண்டும். ஜனநாயக ரீதியில் தீர்வு காண்பதைவிடுத்து நாம் ஆத்திரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்றார் பிரதமர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தற்செயலாக நடந்தவை அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிவரும் வகுப்புவாத சக்திகளை குறுகியகால அரசியல் லாபத்துக்காக நாம் ஊக்கப்படுத்தக் கூடாது என்றார் பிரதமர். சாமானிய மக்களின் உரிமையை நிலை நிறுத்துவதிலும் நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பதிலும் அரசியல் வேண்டாம். நமது ஜனநாயகத்தையும் பண்முகத்தன்மையையும் காப்பதில் ஒவ்வொரு அரசியல் தலைவருக்கு பொறுப்புண்டு. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் தீய சக்திகளை எதிராக போராட வேண்டும். சாமானிய மக்கள் அனைவரும் அமைதியையும் மத நல்லிணக்கத்தையுமே விரும்புகின்றனர் என்றார் மன்மோகன். தீவிரவாதம்: தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இதில் சமரசத்துக்கே இடமில்லை. அதேநேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான எண்ணத்தையோ ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது என்றார். கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள்,முதல்வர்கள்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்ட விவாதப் பட்டியலில் முதலில் தீவிரவாதம் இடம்பெறவில்லை. ஆனால் தீவிரவாதம் குறித்த விவாதமும் இடம் பெற வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்பட பாஜக ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்கள் வலியுறுத்தியதை அடுத்து தீவிரவாதம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223908472&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment