|
இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நடுக்கள வீரருமான சௌரவ் கங்கூலி தற்போதைய ஆஸ்ட்ரேலிய தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். "ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன், இதனை நான் சக வீரர்களிடமும் தெரிவித்து விட்டேன். ஆஸ்ட்ரேலிய தொடர்தான் எனது கடைசி தொடர்" என்று கங்கூலி பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார். வெற்றிபெறும் ஒரு இன்னிங்சுடன் நான் செல்வேன் என்று நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறுகையில் தெரிவித்தார். 36 வயது நிரம்பிய கங்கூலி 109 டெஸ்ட் போட்டிகளில் 6,888 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 சதங்கள் அடங்கும். 49 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் அணித் தலைவராக இருந்தார். இந்தியாவை பொறுத்தவரை அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தது கங்கூலிதான். இந்த 49 டெஸ்ட் போட்டிகளில் 21 போட்டிகளை வெற்றி பெற்றுள்ளார் கங்கூலி. இதுவும் இந்திய கேப்டன்கள் வரிசையில் ஒரு சாதனையே. தனது முதல் இரண்டு டெஸ்ட்களில் சதங்களுடன் துவங்கிய கங்கூலி தனது சராசரியை இதுவரை 40க்கும் கீழ் இறங்கவிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய அணித் தேர்வுக் குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கங்கூலி முடிவிற்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு, தனது கிரிக்கெட் வாழ்வை அவர் உயர்ந்த நிலையில் முடித்துக் கொள்ள முடிவெடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது என்றார். மேலும் சுதந்திர மனோ நிலையுடன் தான் ஆட விரும்புவதாக கங்கூலி தன்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார் என்று கூறிய ஸ்ரீகாந்த் இப்போது அவர் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றார். ஓரு அணித் தலைவராகவும், வீரராகவும் இந்தியாவிற்கு கங்கூலி நிறைய பெருமைகளை சேர்த்துள்ளார் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 272 போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்து குறைந்த போட்டிகளில் இந்த ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை கங்கூலி வைத்துள்ளார். மொத்தம் 311 ஒரு நாள் சர்வதேச போட்டிகளை விளையாடியுள்ள கங்கூலி 11,363 ரன்களை 41.02 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 147 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவை தலைமையேற்று நடத்தியுள்ளார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 100 கேட்ச்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள 3-வது வீரர் கங்கூலி. சச்சினும், ஜெயசூரியாவும் இதனை ஏற்கனவே சாதித்துள்ளனர். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருடன் கங்கூலி துவக்க வீரராக களமிறங்கியபோது இருவரும் இணைந்து மொத்தமாக 136 இன்னிங்ஸ்களில் 6,609 ரன்களை குவித்துள்ளனர். டிசம்பர் 2006-இல் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றது முதல் இலங்கை தொடருக்கு முந்தைய தென் ஆப்பிரிக்க தொடர் வரை டெஸ்ட் போட்டிகளில் 1,571 ரன்களை 50.67 என்ற சராசரி விகிதத்தில் அவர் பெற்றுள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இதுதான் அவர் எடுத்த ஒரே இரட்டை சதமும் ஆகும். முன்னாள் வீரர்களான கபில்தேவ், பிஷன் சிங் பேடி ஆகியோர் கங்கூலியின் கிரிக்கெட் வாழ்வை புகழ்ந்து கூறியதோடு, அவரது இந்த முடிவை வெகுவாக வரவேற்றுள்ளனர். |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223387265&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment