சென்னை, அக்.6-
நாட்டின் எந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராட அனைவரும் போராட வேண்டும் என்று கவிஞர் கனிமொழி எம்.பி., கேட்டுக் கொண்டார்.
ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் `ஹார்மோனி இந்தியா' அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நேற்று நடந்தது. இதில் கவிஞர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடப்பது வெறும் ஏழு வார பிரச்சினை மட்டும் இல்லை. ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் கடந்த 35 வருடங்களாக 6 ஆயிரம் பயிற்சி மையங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் 50 ஆயிரம் பேர் முழுநேர தொண்டர்களாக இருந்து வருகின்றனர். எனவே, ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடப்பவை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் நடக்கும் சம்பவங்கள் இல்லை.
மவுனமாக இருக்கக்கூடாது
முதலில், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஜெர்மன் நாட்டில் ïத மக்களின் உழைப்பைச் சுரண்டி ரோடு போட்டார் ஹிட்லர். அதற்காக அவரைப் பாராட்ட முடியுமா? இந்த விஷயத்தில் ஜெர்மனியிலும் குஜராத்திலும் என்ன வித்தியாசத்தைக் காண முடியும்.
2002-ம் ஆண்டு ஒரிசாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற பாதிரியார் வில் அம்பைக் கொண்டு கொல்லப்பட்டார். வகுப்புவாதிகள் குஜராத்தை பயிற்சி மைதானமாக வைத்துள்ளனர். ஒரிசாவிலும், கர்நாடகாவிலும் நடக்கும் வன்முறைகளைப் பார்த்து நாம் மவுனமாக இருந்துவிட்டால் இந்த வன்முறை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். கண் எதிரே நடக்கும் இந்த அட்டூழியங்களை நாம் தொடர்ந்து அனுமதித்தால் எதிர்கால தலைமுறையும் அழியும் நிலை உருவாகும். நாட்டின் எந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டாலும் அதை எதிர்த்தும், நாட்டின் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்திற்காகவும் நாம் போராட முன்வர வேண்டும்.
அரசு சும்மா இருக்காது
தமிழ்நாட்டில் சிறு சம்பவம் நடந்த உடனே முதல்-அமைச்சர் கருணாநிதி கடும் நடவடிக்கை எடுத்தார். ஓட்டுக்காகவோ அல்லது மற்றவற்றிற்காகவோ அரசு இதைச் செய்யவில்லை. மதமாற்றத் தடை சட்டத்தை தூக்கி எறிந்தது இந்த அரசுதான். கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது.
இவ்வாறு கவிஞர் கனிமொழி கூறினார்.
தமிழக முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்ஸாண்டர் பேசியதாவது:-
வன்முறை நடக்காது
இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் பேர்தான் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். சேவை மனப்பான்மையுடன் செயல்படும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மதமாற்றம் செய்வதாகக்கூறி அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என்று கூறுவதைப் போல இந்த கூட்டத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள் கலந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. பத்திரிகையாளர் ராம், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி போன்றவர்கள் இருந்தால் எங்கும் வன்முறை நடக்காது.
இவ்வாறு பி.சி.அலெக்ஸாண்டர் பேசினார்.
பங்கேற்றவர்கள்
இந்த கூட்டத்தில், சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, சி.எஸ்.ஐ. திருச்சபை சென்னை பேராயர் வி.தேவசகாயம், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, `ஹார்மோனி இந்தியா' அமைப்பின் தலைவர் இந்து என்.ராம், இதன்செகரட்டரி ஜெனரல் ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, இஸ்லாமிய அறக்கட்டளை துணைத் தலைவர் ஹபீப் முகமது, இஸ்லாமிய இலக்கிய கழக துணைத்தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கலந்துகொண்டனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=442963&disdate=10/6/2008
No comments:
Post a Comment