முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிந்து விட்டது ஈழத் தமிழர் பலம் என்றே சிங்கள இனவாதமும் அதன் துணை சக்திகளும் வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தி மகிழ்ந்தன.
வன்னிப் பேரவலத்திலிருந்து தமது உறவுகளைக் காப்பாற்றத் திரண்டு எழுந்த தமிழர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும அகிம்சைப் போரைத் தொடுத்தனர். விடுதலைப் புலிகளை களத்தில் தோற்கடித்த்துவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் செயலிழந்து விடுவார்கள் என்ற சிங்களத்தின் கணிப்பு புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களால் பொய்யாகிப் போனது. சிங்கள தேசம் அடுத்த திட்டத்தினுள் நுழைந்தது. தேசியத் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார் என்று படம் போட்டுக் காட்டி வித்தை செய்தது. அதை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் ஒட்டுக் குழுக்கள் மட்டுமே. ஈழத் தமிழர்களின் இதய நம்பிக்கையை எந்த சக்தியினாலும் நொருக்கிவிட முடியவில்லை.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும் முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்படுத்தப்பட்ட மூன்று இலட்சம் உறவுகளையும் விடுவிக்கத் தமது போராட்டத்தைப் புலம்பெயர் தமிழர்கள் தீவிரப்படுத்தினார்கள். சிங்கள தேசம் அரங்கேற்றிய அத்தனை சதிகளையும் முறியடித்து புலம்பெயர் தமிழர்கள் வெகுண்டெழுந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளை இருபத்தொரு நாடுகளின் உதவியுடன் அழித்துவிட முடிந்த மகிந்த ராஜபக்ஷவால் புலம்பெயர் தேசங்களில் போர்க் கோலம் பூண்டு திரண்டு எழுந்த தமிழர் படையை நெருங்க முடியவில்லை. அசைக்க முடியாத பெரும் சக்தியாக எழுந்த தமிழர் படையைக் கண்டு சிங்களம் அச்சம் கொண்டது. சதிகாரர் கூட்டத்தால் புலம்பெயர் தமிழர்கள் குறி வைக்கப்பட்டார்கள்.
பல சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டன. தப்பிச் சிறைப்பட்ட போராளிகளையும் தளபதிகளையும் ஆயுதக் கருவிகளாக்கியது சிங்கள அரசு. கிழக்கில் கருணா போலவே வடக்கிலும் ஒரு கருணா தயாராக்கப்பட்டார். சும்மா சொன்னால் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் காலம் கனியும்வரை காத்திருந்தார்கள். அதற்காக மாவீரர் தினத்தைக் குறி வைத்து வேகமாகச் செயற்பட்டார்கள். மௌனிக்க வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது மாவீரச் செல்வங்களுக்கு விளக்கேற்றவோ அவர்கள் கல்லறைகளில் மலர் தூவி அழவோ முடியாமல் தவித்து நிற்க… புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தேசியக் கடமைக்காகத் திரண்டனர்.
உலகம் முழுவதும் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்வுகள் நடந்தேறிய மண்டபங்கள் எல்லாம் வரலாறு காணாத தமிழர் கூட்டங்களால் நிறைந்து வழிந்ததனால் அதன் ஏற்பாட்டாளர்களே திக்குமுக்காடிப் போய்விட்டார்கள். புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியைத் தடுக்கத் தயாராகியிருந்த சதிக் கரங்களை உசுப்பிவிட்டது சிங்கள தேசம். விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தபால் தலையில் சிங்களத்தால் சிறை பிடிக்கப்பட்ட தளபதி ஒருவரின் பெயரில் அறிக்கை ஒன்றும், ஒளித்தட்டு ஒன்றும் உருவாக்கப்பட்டு இணையத் தளங்களுக்கும் ஒரு சில தமிழர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. தளபதி ராம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் சிங்கள அரசின் கொடூரங்கள் பற்றி ஒற்றைவரிச் செய்தி கூட எழுதப்பட்டிருக்கவில்லை.
தமிழீழம் -சிறிலங்கா என்ற தேசங்களைக் குறிக்கும் சொற்கள் தவிர்க்கப்பட்டு இலங்கை அரசு என்றும் இலங்கைத் தீவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷவினால் தயாரிக்கப்பட்ட இந்த மாவீரர் தின அறிக்கை பாரிஸ் லாசப்பல் கடைத் தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத வேளையில் விரைந்து விநியோகம் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்கள். பாவம்… அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை இது. சிங்களத்தின் சதியாளர்களின் வழக்கமான பாணியாக விநியோகிக்கப்பட்ட இந்த துண்டுப்பிரசுர அறிக்கையும் ஒளித் தட்டும் வர்த்தகர்களால் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இத்தனை காலமும், ஈழத் தமிழர்களை சுட்டெரிக்க ஏவப்பட்ட அத்தனை துரோகங்களும் அவர்களைப் புடம் போட்டதே தவிர பொசுக்கிவிடவில்லை.
தமிழ்த் தேசிய உணர்வு கொண்டு… விடுதலை வேட்கையோடு விடுதலைப் புலிகளுடன் இணைந்து தாய்நாட்டை மீட்கப் புறப்பட்ட ஈழத் தமிழர்களது வைராக்கியத்தை இந்தத் துரோக நெருப்புக்களால் சுட்டெரிக்க முடியவில்லை. மாறாக… விடுதலை வேண்டும் அந்த இதயங்களில் கோபக் கனலை மூட்டி வேகப்படுத்தியதே தவிர சோர்வுக்குள் தள்ளவில்லை. சிங்களஅரசின் ஏவல் பிசாசுகளாக்கப்பட்ட இந்தத் துரோகக் கூட்டங்கள் தம் சொந்தத் தமிழர்களின் துயரங்கள் தீர என்ன செய்தார்கள்? டக்ளசாலும், கருணாவாலும்… ஆனந்தசங்கரியாலும்… பிற ஒட்டுக் குழுக்களாலும் ஈழத் தமிழர்களுக்காக எதைச் சாதிக்க முடிந்தது? தப்புத் தாளங்கள் போடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் எதைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது?
மனிதாபிமானம் மிக்க உலக நாடுகளே கண்டிக்கும் தமிழின அழிப்பைத் தடுக்க முடிந்ததா? முள்வேலி முகாம் மக்களின் அவலங்களைப் போக்க முடிந்ததா? மீள் குடியேற்றம் என்ற பெயரில், அந்த மக்கள் அநாதைகளாக்கப்பட்டு… அடையாள அட்டைகளில் குறிக்கப்பட்டுள்ள வெகுகாலமாகத் தொடர்பே இல்லாத பிறந்த கிராமங்களில் நிர்க்கதியாய் விடப்படும் கொடுமைகளை எதிர்க்க முடிந்ததா? மனித இனமே வெட்கப்படும் இழிநிலை வாழ்க்கை வாழ்ந்து… சிங்கள அரசு வீசி எறிவதைப் பொறுக்கும் இவர்களால் ஈழத் தமிழர்கள் எதையும் பெறப் போவதில்லை.
சிங்கள தேசத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, மௌனிக்க வைக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் ஒற்றைப் பலமாக புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவதை எந்த சக்தியினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நடைபெற்று முடிந்த மாவீரர் தின எழுச்சி உலகிற்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது. எங்கள் தேசம் விடியும்வரை… எங்கள் மக்கள் விடுதலை பெறும்வரை நாங்கள் ஒன்றாக… எங்கள் தேசியக் கொடியின்கீழ்… எங்கள் தேசியத் தலைவரின் ஆணையை ஏற்றுப் போராடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. அதற்காக இணைந்த எங்கள் கரங்களைப் பிரித்து விடவும் முடியாது என்பதை மாவீரர் தின அணிவகுப்பின் மூலம் சிங்கள அரசுக்கும் அதன் எடுபிடித் துரோகிகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-சி.பாலச்சந்திரன்
நன்றி:ஈழநாடு
source:tamilspy
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment