போன அக்டோபரோடு ஐயாவுக்கு 84 முடிந்து 85 ஆரம்பமாகிவிட்டது! பழுத்த சிந்தனைகளோடு, பக்குவமாக வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியவர் - இப்போது பகீர் குற்றச்சாட்டில் சிக்கி, பெரிசு முதல் சிறிசுகள் வரை அத்தனை பேரையும் அலறிப் போய் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்! சுதந்திரப் போராட்ட வீரர்... காங்கிரஸ் மூத்த தலைவர்... உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர்... ஆந்திர மாநிலத்தின் முதல் குடிமகன் என்ற ஆளுநர்... இத்தனை அடையாளங்களையும் மழுங்கடித்து, மூன்று பெண்களோடு சல்லாபித்த சூப்பர் சீனியர் என்ற திகைப்பான அடையாளத்தோடு தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயண் தத் திவாரி! டிசம்பர் 25--ம் தேதி பத்து மணி வரைக்கும் எல்லாமே நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது! சரியாக 10 மணிக்கு 'கவர்னர் திவாரியின் படுக்கை அறைக் காட்சிகள்' என்று ஆந்திராவின் 24 மணி நேர செய்தி சேனலான 'ஏ.பி.என்'-னில் (அமோதா பிராட்காஸ்டிங் நெட்வொர்க்) ஒளிபரப்பத் தொடங்கியதும்தான் எல்லாமே தலைகீழானது! அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹைகோர்ட்டில், 'ஒளிபரப்பாகும் காட்சிகளை உடனே நிறுத்த வேண்டும்' என்று கவர்னர் மாளிகையிலிருந்து தடையுத்தரவுக்கு மனுப் போடப்பட்டது. அதையடுத்து அந்தக் காட்சிகள், நீதிமன்றம் வழங்கிய தடையால் நின்றது. ஆனால், அதற்குள் டெல்லி வரை கில்லியடிக்கத் தொடங்கிவிட்டது விவகாரம். ஜனநாயகத்தின்கர்ப்பக் கிரகமாக விளங்கும் கவர்னர் மாளிகையின்முன்பு பொதுமக்களும், மகளிர் அமைப்புகளும் திமு திமுவெனத்திரள... சந்திரபாபு நாயுடு உள்ளிட் டோரின் அரசியல் கட்சிகளும் வரிசையாக வரிந்துகட்ட... 'வயோதிகம் காரணமாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று டோட்டல் ரிவர்ஸாக ஒரு காரணம் சொல்லி கவர்னர் நாற்காலியிலிருந்து இறங்கி விட்டார் 85 வயது என்.டி.திவாரி! இந்த வெடியைக் கொளுத்திய ஏ.பி.என். சேனல் ஆரம்பிக்கப்பட்டதே கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதிதான்! 'ஆந்திரஜோதி' பத்திரிகையின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலின் சி.இ.ஓ. வெமுரி ராதாகிருஷ்ணன்! ஆந்திரஜோதி பத்திரிகையின் சீனியர் க்ரைம் நிருபராக இருந்த ராதாகிருஷ்ணன் இப்போது அந்தப் பத்திரிகையின் நிர்வாக இயக்குநராகியிருக்கிறார். கடன் சுமையால் 1999-ம் வருடம் ஆந்திரஜோதி மூடப்பட்டது. 2002-ம் வருடம் அதே பத்திரிகையை தன் நண்பர்கள் உதவியுடன் வாங்கி, மீண்டும் தொடங்கினார் ராதாகிருஷ்ணன். தற்போது செய்தி சேனலையும் தொடங்கிய அவர், பத்திரிகையின் முதலாளி அந்தஸ்துக்கு மாறினாலும் அவருக்குள் எப்போதும் ஒரு துறுதுறு நிருபர் ஒளிந்து கொண்டே இருந்தார். அந்தத் துறுதுறுப்புதான் ராஜ்பவனுக்குள்ளேயே 'கட்டில் பொறி' வைக்கிற ஐடியாவைக் கொடுத்ததாம்! ''எப்படி நடந்தது இந்த ஆபரேஷன்?'' என்ற கேள்வியை ஏ.பி.என்.சேனலின் செய்திப் பிரிவின் தலைவரான சசிகாந்த் முன் வைத்தோம். ''எங்கள் எம்.டி-யிடம் கேட்டுவிட்டு, எங்கள் க்ரைம் டீமை உங்களுடன் பேசச் சொல்கிறேன். க்ரைம் டீம் பேசிய பிறகு மறுபடி என்னுடன் பேசுங்களேன்!'' என்றார் சசிகாந்த். க்ரைம் குழு நம்மோடு பேசியது இதுதான் - ''சரியாகச் சொல்வதானால் மூன்று மாதங்களுக்கு முன்பு ராதிகா என்றொரு பெண் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். ஏதோ புகார் கொடுக்க விரும்புவதாகச் சொன்னார். எங்கள் அலுவலகத்தில் இருக்கும் புகார் பிரிவுக்கு அவரை அனுப்பி வைத்தோம். 'நான் பேப்பரின் ஓனரிடம்தான் பேசுவேன்' என்று விடாப்பிடியாக நின்றார். அப்போது எம்.டி., செய்தி சேனல் தொடர்பான பணிகளில் பிஸியாக இருந்தார். இருந்தும் விஷயத்தைக் கேள்விப்பட்டதும்... அவரே ராதிகாவை அழைத்துப் பேசினார். ராஜ்பவனில் சபல சவாரி நடப்பதாக விளக்கமாக ராதிகா சொன்னபோது எம்.டி. அதிர்ந்துபோனார். தன்னைப் போன்ற மூன்று பெண்களுக்கு கவர்னர் திவாரி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக ராதிகா சொன்ன குற்றச்சாட்டை முதலில் நாங்கள் விளக்கமாக எழுதி வாங்கிக் கொண்டோம். 'தயவுசெய்து அந்தப் பெரிய மனிதனின் முகத்திரையைக் கிழியுங்கள். எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்!' என்று அழுத அவரிடம், எங்கள் டீம் தொடர்ந்து பேசியது. 'நீங்கள் சொல்வதை வைத்து நாங்கள் செய்தி போட்டால்... எங்களுக்கு சட்டப் பிரச்னை வருமே... அசைக்க முடியாத ஆதாரம் தேவை!' என்று எங்கள் எம்.டி. கூறினார் ராதிகாவிடம். அவரோ, 'இதற்கெல்லாம் ஆதாரமா? நான் எங்கே போவது?' என்றார். 'கேமராவுடன் கூடிய செல்போனை துல்லியமாக இயக்கத் தெரியுமா? தரமான செல்போன் வாங்கிக் கொடுத்தால் அதில் காட்சிகளைப் பதிவு செய்ய முடியுமா?' என்று கேட்டபோது... 'வாங்கித் தரவேண்டிய அவசியமே இல்லை, சார். என்னிடமே ஒரு லேட்டஸ்ட் செல்போன் இருக்கு. என்னைப் போல இந்த செக்ஸ் நெருக்கடியில் சிக்கியுள்ள இன்னும் ரெண்டு பொண்ணுங்களிடமும் நல்ல செல்போன் இருக்கு. சொல்லப்போனா எங்களுக்கு அதை பரிசா வாங்கிக் கொடுத்ததே கவர்னர் ஆபீஸ்லதான்!' என்றும் கூறினார் ராதிகா. 'நாங்க ராஜ்பவனில் சௌக்கியமா இருப்ப தாகவும், இங்கே எங்களை பாதுகாப்பா நல்லபடியா நடத்துவதாகவும் மட்டும் எங்க வீட்டுக்குப் பேச அனுமதிப்பாங்க. அதுக்குதான் செல்போன் வாங்கிக் கொடுத்தாங்க' என்றும் ராதிகா சொன்னார்! 'நீங்கள் கூறுகிற மாதிரி ஆளுநர் உங்களை வற்புறுத்தி நடந்துகொள்கிறார் என்பது உண்மையாக இருந்தால், அதை பதிவு செய்து கொண்டு வாருங்கள். அதன் பிறகு உங்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்' என்று தைரியம் கொடுத்து ராதிகாவை அனுப்பி வைத்தார் எங்கள் எம்.டி.! எங்கள் அலுவலகத்துக்கு வந்தபோது ராதிகா முகத்தில் பயமும், ஏதோ ஒரு கேள்விக்குறியும் இருந்தது. ஆனால், எங்களையும், எங்கள் எம்.டி-யையும் பார்த்ததும் ராதிகாவின் முகம் பளிச்சென்றானது. 'போயிட்டு வரேன் அண்ணா. அடுத்து வரும்போது நீங்க கேட்டதைக் கொண்டு வந்துடறேன்' என்று உற்சாகமாகப் போனார். சொல்லி வைத்த மாதிரி பத்தே நாட்களில் கவர்னரின் படுக்கை அறைக் காட்சிகளை படம் பிடித்து வந்து விட்டார் ராதிகா! அந்தக் காட்சிகளில் இருப்பது கவர்னர்தானா என்பதை முதலில் நாங்கள் பல்வேறு சோதனைகள் மூலம் உறுதி செய்து கொண்டோம். அடுத்து அதை வெளியிட்டால் என்னென்ன சட்டப் பிரச்னைகள் வரும் என்பதை எங்கள் சட்டக் குழுவிடம் விவாதித்தோம். மேலும், நாங்கள் புதிதாக ஆரம்பித்த சேனல் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அந்த வீடியோ காட்சிகளை அவசரப்பட்டு ஒளிபரப்பவில்லை. படம் எடுக்கப்பட்ட அறை கவர்னர் மாளிகையில்தான் உள்ளதா என்பதை நாங்கள் தனி குழு அமைத்து உறுதிப்படுத்த முடிவு செய்தோம். ஆந்திர கவர்னர் மாளிகையில் திவாரி கவர்னராக வந்தவுடன் புதிதாகச் சில கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. அங்கு வெளி நபர்களுக்கோ, கவர்னரை சந்திக்க வரும் வி.ஐ.பி-க்களுக்கோ அனுமதி இல்லை. வீடியோ பதிவின் பிரின்ட் அவுட்டை எடுத்து, அதிலிருந்த ஆபாசக் காட்சிகளை மறைத்தோம். ராஜ்பவனில் அந்த மாளிகையில் வேலைபார்க்கும் ஒருவரிடம் அதைக் காட்டி, சில குறுக்குக் கேள்விகளும் கேட்டோம். இவ்வாறு அந்தப் படுக்கை அறை கவர்னர் மாளிகைக்குள் இருப்பதுதான் என்பதை உறுதி செய்து கொண்டோம். அந்த வீடியோவை ஒளிபரப்புவது குறித்து நாங்கள் மேலும் சில ஆலோசனைகளை மேற்கொண்ட சமயத்தில்தான் தெலுங்கானா பிரச்னை, ஆந்திராவை குலுக்க ஆரம்பித்தது. எங்கள் எம்.டி. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும், மக்களுக்கு நடுநிலையான செய்திகள் மட்டுமே போய்ச் சேர வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டுவார். எங்கள் நிருபர் குழு போலவே அவரும் அவருடைய வட்டாரங்களில் தெலுங்கானா பிரச்னையை உன்னிப்பாக கவனித்து வந்தார். அப்போதுதான், தெலுங்கானா பிரச்னையை சரிவரக் கையாளவில்லை என்பதால் கவர்னர் என்.டி.திவாரியை பதவி விலகச் சொல்லி மத்திய அரசு வற்புறுத்துவதாக எங்களுக்கு நம்பகமான ஒரு செய்தி கிடைத்தது. திவாரியின் பதவிக் காலமும் முடிகிற சமயம் இது. ஆனால் திவாரியோ, 'நான் பதவி விலக மாட்டேன். ஆந்திராவின் கவர்னராக நீடிப்பேன். எதுவானாலும் நான் சோனியாவிடம் பேசிக் கொள்கிறேன்' என்று அடம் பிடித்து வந்ததாகவும் எங்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், ஆக, மத்திய அரசே திவாரியை அந்தப் பதவியிலிருந்து அமுக்கிப் போடுவதற்கு சந்தர்ப்பம் பார்ப்பது உறுதியானது. இதற்கு மேலும் கவர்னர் மாளிகையின் படுக்கை அறைக் காட்சிகளை வெளியிடாமல் இருக்க முடியுமா? திவாரி கவர்னர் பதவியில் இல்லாமல் போனால்... அந்த வீடியோ ஆதாரத்துக்கான முக்கியத்துவமே போய்விடுமே..! அதனால்தான் கடந்த 25-ம் தேதியை நாள் குறித்தோம்!'' என்று சொல்லி முடித்தது ஏ.பி.என்.க்ரைம் டீம்! ஆந்திர ராஜ்பவன் பற்றி பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் இப்போது வாய்விட்டுப் பேசப்படும் மற்ற பல விஷயங்களும் நம் காதுக்கு வந்து சேர்ந்தன. ஹைதராபாத்தின் சீனியர் நிருபர்கள் சிலர் நம்மிடம், ''கவர்னர் மாளிகையால் சிபாரிசு செய்யப்படும் எந்த வேலைகளும் மாநில அரசால் நிறைவேற்றப்படுவதில்லை என்பதுதான் சமீபத்து நிலவரம். கவர்னர் சிபாரிசுகளை ஏற்க வேண்டாம் என்று மத்திய அரசே, ஆந்திர அரசுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருந்தது. ஆனாலும், 'கவர்னர் அலுவலகத்தில் சொல்லி உங்கள் வேலையை முடித்துத் தருகிறேன்' என்று விஷயம் தெரியாத பல தொழிலதிபர்களிடம் காசு பார்க்கும் வேலை நடந்துகொண்டேதான் இருந்தது. இப்படிப்பட்ட இடைத் தரகர்களில் சிலர்தான் கவர்னர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பெண்களை பேரமாக்கினார்கள். மஸாஜுக்கு பெயர் போனது ஹைதராபாத்! கவர்னர் மாளிகையில் தங்கும் பல மத்திய அமைச்சர்கள், வி.ஐ.பி-க்கள் எல்லோருமே மஸாஜ் செய்து கொள்வதுண்டு. இப்படி உ.பி-யிலிருந்து இங்கே வந்து தங்கிய ஓர் அமைச்சர்தான் முதலில் மஸாஜ் செய்யத் தன்னோடு ஒரு பெண்ணை வைத்துக்கொண்டார். அதன் பின், என்ன நடந்ததோ... அந்தப் பெண்ணை நிரந்தரமாக கவர்னர் மாளிகைக்குள்ளேயே தங்க வைத்துவிட்டார்கள். பின்னர் அந்தப் பெண் உ.பி-யிலிருந்து பல அழகிகளை மஸாஜ் தொழிலாளர்கள் என்ற பெயரில் அடிக்கடி அழைத்துவர ஆரம்பித்திருக்கிறார்.
இது போதாதென்று, கவர்னரிடம் காரியம் சாதிக்க நினைத்த வேறு சிலர், 20 வயதுக்கும் குறைவான பெண்களை கவர்னர் மாளிகையில் 'கெஸ்ட்'களாக தங்க வைக்க ஆரம்பித்தார்கள். தலையே இப்படி ஆடுவதில் துளிர்த்துப்போன ராஜ்பவன் ஊழியர்கள் சிலரும் இது போன்ற லீலைகளில் பின்னியெடுக்க ஆரம்பித்தார்கள். விபசாரம், மஸாஜ் தொழிலில் இருக்கும் பெண்கள் போக, அங்கே அரசுப் பணியில் இருந்த சில ஊழியர்களையும் மிரட்டி தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். கிட்டத்தட்ட கவர்னர் மாளிகையின் மாண்பு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது, இந்த ரகசிய பதிவுக் காட்சிகள் ஒளிபரப்பானதும் முதலில் பொங்கியெழுந்தது மகளிர் அமைப்புகள்தான். அதன் பிறகுதான் தெலுகு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு களத்தில் இறங்கினார். நாயுடு விட்ட அறிக்கைகள்தான் திவாரியை பதவி விலக வைத்தது!'' என்கிறார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள். கவர்னர் மாளிகையில் இருந்து 'மீட்கப்பட்டுள்ள' சில பெண்களை தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதாகச் சொல்லும் ஒரு மகளிர் அமைப்பிடம் பேசினோம். அமைப்பின் பெயரையோ, சம்பந்தப்பட்ட பெண்களின் அடையாளத்தையோ வெளியிட விரும்பாத அந்த அமைப்பினர், ''சொன்னால் நம்பக்கூட முடியாது. அந்த மனிதர் சதாசர்வ காலமும் படுக்கையறையில்தான் பொழுதைக் கழித்திருக்கிறார் என்பது இந்தப் பெண்கள் மூலம் தெரிய வருகிறது. ராதிகா உட்பட குறிப்பிட்ட மூன்று பெண்களை அவர் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு தாத்தாவுக்கு உதவி செய்யப் போகிறோம், அவருக்கு கைகால் அமுக்கி விடப் போகிறோம் என்றுதான் இவர்கள் படுக்கை அறைக்குள் போயிருக்கிறார்கள். ஆனால், அவரோ தொடக்கூடாத இடமெல்லாம் அவர்களை தொட வைத்து முழு நிர்வாணமாக தனது உறுப்புகளை மஸாஜ் செய்யச் சொல்லியிருக்கிறார். அடுத்தடுத்த கட்டமாக அவர் முன்னேறியது பற்றியெல்லாம் சொல்லவே நா கூசுகிறது. எழுதவும் உங்கள் பேனா கூசிவிடும்!'' என்று அதிர்ச்சியை வெளியிட்டார்கள். கவர்னர் மாளிகை தரப்போ, ''கவர்னர் முதுமை காரணத்தால்தான் ராஜினாமா செய்தார். சேனலில் ஒளிபரப்பான காட்சிகள் எல்லாமே உருவாக்கப்பட்டவை. அவை கவர்னர் மாளிகையில் எடுக்கப்பட்டவையே அல்ல. அந்த சேனல் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறோம்!'' என்று மட்டுமே சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், ''ஆந்திராவில் அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் தெலுங்கானா பிரச்னையை திசை திருப்பவே இப்படி ஒரு வீடியோ பதிவை அந்த சேனல் வெளியிட்டிருக்கிறது... இதற்கு பின்னால் அரசியல் இருக்கிறது!'' என்ற பேச்சும் அலையடிக்கிறது. ஆந்திராவில் சுரங்கத் தொழில் செய்யும் சில அரசியல் சார்ந்த கோடீஸ்வரர்களின் கரங்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும்... மாநிலத்தில் நிலையற்ற ஆட்சி அமைந்தாலோ, கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துவிட்டாலோ தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்பதால்தான் ஆளுநருக்கே குண்டு வைக்கும்படியாக இதில் சுறுசுறுப்பு காட்டிச் செயல்பட்டார்கள் என்று கூறும் சிலர், ''இந்தப் பின்னணியெல்லாம் வீடியோ பதிவை வெளியிட்ட சேனலுக்கு முதலில் தெரியுமோ தெரியாதோ... ஆனால், மத்திய அரசில் தொடர்புடைய சிலருக்கு முன்கூட்டியே இது பற்றித் தெரியும்!'' என்று மர்மப் புன்னகை பூக்கிறார்கள். இதெல்லாம் எந்தளவுக்கு சரி என்று விளக்கம் கேட்டு 'ஏ.பி.என்.' சேனலில் செய்திப் பிரிவு தலைவர் சசிகாந்த்தை நாம் மீண்டும் தொடர்பு கொண்டோம். ''தெலுங்கானா பிரச்னையை திசை திருப்ப நினைத்திருந்தால்... அந்த வீடியோ ஆதாரங்களை பல நாட்களுக்கு முன்பே நாங்கள் வெளியிட்டிருக்கலாமே? அதோடு, இந்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பான பிறகும் தெலுங்கானா பிரச்னை திசை மாறிவிட்டதா என்ன? சொல்லப் போனால், தெலுங்கானா பிரச்னை காரணமாக இத்தனை பெரிய செக்ஸ் அசிங்கம் அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெறாமல் அமுங்கிப் போய்விட்டது!'' என்றார் அவர்! | ||||
|
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment