நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பு நெட் பார்ப்பதால் 1 மணி நேர வேலை அவுட்
புதுடெல்லி : பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் பேஸ்புக், ஆர்க்குட் போன்ற இணையதளங்களில் மூழ்கி விடுவதால் வேலை பெரிதும் பாதிக்கப்படுவதாக அசோசேம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி, பெங்களூர், சென்னை, இந்தூர், மும்பை, புனே, சண்டிகர் மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் உள்ள சுமார் 4,000 ஊழியர்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆய்வின் விவரம் வருமாறு:
ஊழியர்கள் அலுவலக நேரங்களில் சராசரியாக தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் வரை பல்வேறு இணையதளங்களை பார்ப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக பாதிக்கும் மேற்பட்டோர், பேஸ்புக், ஆர்குட், ட்விட்டர், லிங்க்டுஇன் மற்றும் மைஸ்பேஸ் உள்ளிட்ட இணையதளங்களையே விரும்பி பார்க்கின்றனர். இதில் 77 சதவீதம் பேர் ஆர்குட் இணையதளத்தில் மூழ்கி விடுகின்றனர். இதனால் வேலை பாதிக்கிறது. இருந்தாலும் அலுவலக நேரத்தில் இணையதளத்தை பார்ப்பது தவறு இல்லை என 83 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நண்பர்கள் மற்றும் வெளியூரில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கும், வேறு வேலை தேடுவதற்கும் இந்த இணையதளங்கள் பாலமாக செயல்படுவதே இதற்கு முக்கிய காரணம். இதனால் ஊழியர்களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 7 மணி நேரமாகக் குறைந்துள்ளதால், வேலை உற்பத்தித் திறன் 12.5 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற இணையதளங்கள் புதிது புதிதாக வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் அலுவலக வேலை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், சில முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் இதுபோன்ற இணையதளங்களை பார்ப்பதற்கு தடைவிதிக்கும் சாப்ட்வேர்களை பொருத்தி உள்ளன. இவ்வாறு அசோசேம் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment