லாகூர்:பாகிஸ்தானில் கைதான அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் ஐந்து பேரும், பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிட்டதற்காக வருந்தவில்லை. அதற்கு மாறாக தங்களை தூக்கிலிட்டால், தாங்கள் வீரத்தியாகியாகி விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக லாகூர் சர்கோதா மாவட்ட போலீஸ் அதிகாரி உஸ்மான் அன்வர் கூறியதாவது:அமெரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் ஐந்துபேர் பாகிஸ்தானில் கைதாகினர். பயங்கரவாத அமைப்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியதற்காக, அந்த ஐந்து பேரும் சிறிது கூட வருந்தவில்லை. அதற்கு மாறாக, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தங்களின் உயிரைக் கொடுக்க முடியாமல் போய் விட்டதே என, வருத்தம் தெரிவித்தனர்."பயங்கரவாத சதித் திட்டங்களை நிறைவேற்றி அதன் மூலம் உயிர் தியாகம் செய்ய நாங்கள் நினைத்தோம். போலீசார் கைது செய்து விட்டதால், அது நடக்கவில்லை. அதனால், தூக்கில் போட்டாவது எங்களை தியாகியாக்குங்கள்' என்றும் கூறினர்.
கைதான ஐந்து பேருக்கும் எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபணமானால், ஆயுள் தண்டனை பெற நேரிடும். இளைஞர்கள் ஐந்து பேரும் ஆப்கானிஸ்தானுக்கு சென்று, அமெரிக்கப் படைகளுக்கு எதிராக போரிட விரும்பினர். உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமெரிக்காவே காரணம் என, அவர்கள் நினைக்கின்றனர். பாகிஸ்தானில் உள்ள முக்கிய இடங்களை குண்டு வைத்து தகர்க்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.இவ்வாறு போலீஸ் அதிகாரி அன்வர் கூறினார்
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment