Wednesday, December 16, 2009

தலைவர் பிரபாகரன் மரண சான்றிதழ் மர்மங்கள்!

பிரபாகரன் மரண சான்றிதழ் மர்மங்கள்!

''விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனும், உளவுத் துறை தலைவரான பொட்டு அம்மானும் கொல்லப்பட்டது உறுதியாகிவிட்டது. அவர்களின் மரணம் குறித்த ஆவணங்களை சிங்கள அரசு, இந்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதனால் விரைவிலேயே ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்!'' - கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிங்கள மீடியாக்கள் இப்படியரு செய்தியை முக்கியத்துவத்தோடு வெளி யிட்டு வருகின்றன. இத்தனைக்கும் சிங்கள அரசின் அறிக்கையாகவோ, அதிபர் மாளிகையின் செய்தியாகவோ இந்தத் தகவல் வெளியிடப்படவில்லை. 'இலங் கையின் அட்டார்னி ஜெனரல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் மேற்கண்ட தகவலைச் சொன்னதாக'வே சிங்கள மீடியாக்கள் எழுதி வருகின்றன. அந்த அதிகாரி யார் என்று இலைமறை காயாகக் கூட சிங்கள மீடியாக்கள் குறிப்பிடாத நிலையில்... இந்திய மீடியாக்களும் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வரப் போவதாக இதையட்டி ஒரு பரபரப்பைக் கிளப்பத் தொடங்கி இருக் கின்றன.

'ராஜீவ் வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் சிலரிடம் இதுகுறித்துப் பேசினோம். ''18 வருடங்களுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டிருப்பதே காங்கிரஸ் அரசுக்கு பெரிய அவமானம். ஆனாலும், அந்த வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா இப்போதும் முயலவில்லை. ராஜீவ் கொலை வழக்கின் பிரதான குற்றவாளிகளான பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாகச் சொல்லி, அந்த வழக்கை இந்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்தால்... அடுத்த கணமே புலிகள் அமைப்பு மீதான தடையை இந்தியா விலக்கிக்கொள்ள வேண்டிவரும். இதற்கிடையில், ராஜீவ் கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவராகக் கருதப்படும் சந்திராசாமிக்கும் காங்கிரஸ் அரசுக்கும் ஏகப் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் சந்திராசாமி, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்ட பிறகே இந்தியாவுக்குத் திரும்புகிற முடிவில் இருக்கிறார். அதனால் இலங்கை அரசு எத்தகைய ஆதாரங்களை சமர்ப்பித்தாலும் ராஜீவ் கொலை வழக்கு விசாரணை இப்போதைக்கு முடியாது!'' என அடித்துச் சொல்கிறார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டும் நிர்வாகிகள் சிலரோ, ''பிரபாகரனும், பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதாக அரசுரீதியான அறிவிப்பு வெளியாகவில்லை. பொட்டு அம்மானின் உடல் கையில் சிக்காத நிலையில் எந்த ஆதாரத்தை சிங்கள அரசு இந்தியாவிடம் கொடுத்திருக்க முடியும்? சிங்கள அரசு ராணுவத்துக்கு தொடர்ந்து அதிக அளவில் ஆள் எடுத்து வருவதும், கோடிக்கணக்கான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதும் சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. அதனால்... புலிகளுடனான போர் முடிந்துவிடவில்லை என்றும் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்டோர் உயிரோடு இருப்பதாகவும் அவர்கள் மத்தியில் பேச்சு கிளம்பத் தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய எண்ணம் பெரிதாகப் பரவி விடாதபடி தடுக்கவே சிங்கள அரசு பிரபாகரன், பொட்டு அம்மான் மரணச் சான்றிதழை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதாக ஒரு செய்தியை சிங்கள மீடியாக்கள் மூலம் பரப்புகிறது. ஃபொன்சேகாவின் அதிரடிகள் பொறுக்காமல் அடுத்தடுத்தும் இந்திய, இலங்கை அரசுகள் என்னென்ன நாடகங்களை நடத்தப் போகின்றனவோ...'' என்கிறார்கள் இவர்கள்.

- இரா.சரவணன்


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails