ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அக்கறையை எடுத்துக்காட்டி, அந்நாட்டு செனற வெளியுறவுக்குழு தயாரித்துள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையில் முரண் பாட்டு அணுகுமுறையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.
மேற்படி அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையின் வட பகுதியில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனி நாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்திய விதம் குறித்து அரசாங்கம் பரவலான விமர்சனத்திற்கு உள்ளான அதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிராந்தியத்தை புனர்நிர்மாணம் செய்வதிலும் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததும் நாட்டில் புதிய அரசியல், பொருளாதார சீரமைப்புக்களை ஏற்படுத்திக்கொள்வதில் இலங்கையுடனான தொடர்புகளை அமெரிக்கா புதுப்பிக்க விரும்புவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
மனிதநேய அம்சங்கள் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய அதேவேளை இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கை, ஒரு விடயத்தை மட்டும் வைத்து கணிப்பிடப்படக் கூடியதல்ல என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. குழுவின் ஜனநாயக கட்சித்தலைவரான செனற்றர் ஜோன் கெரியினாலும், சிரேஷ்ட குடியரசுக்கட்சி செனற்றர் றிச்சட் லூகரினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இரு தரப்பு அறிக்கை, ஒபாமா நிர்வாகம் இலங்கை தொடர்பான அதன் புதிய கொள்கையை அறிவிக்க இருக்கும் இவ்வேளையில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கடும் போக்கான அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையைத் தீவிரப் படுத்திய அதேவேளை, கடந்த சில வருடங்களில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகள் மற்றும் அவர்களுக்கான மனிதநேய உதவிகள் ஆகியன பற்றிய அக்கறையே மேலோங்கி நின்றது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாதவது: இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது இரு சகோதரர்களான கோத்தபாய, பஷில் ஆகிய மூவரினதும் கடுமையான நிலைப்பாடே இரண்டு தசாப்தகால யுத்தத்தை கடந்த மே மாதத்தில் தோற்கடிக்க உதவியது. சிறுபராய போராளிகள், பெண் தற்கொலைப் படையினர் போன்ற கொடிய தந்திரங்களை எல்லாம் தீவிரவாதிகள் பயன்படுத்தினார்கள்.
1991ஆம் ஆண்டில் மீண்டும் பதவிக்கு வரும் நம்பிக்கையுடன் இருந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் விடுதலைப்புலி இயக்கமே பொறுப்பாகும். யுத்தத்தின் கடைசி வாரங்களில் சுமார் 3 லட்சம் தமிழ்ச் சிவிலியன்களுடன் விடுதலைப்புலிகள் சிக்கியிருந்த ஒடுக்கமான ஒரு கடற்கரைப் பிரதேசத்தை அரசாங்கப் படையினர் சுற்றிவளைத்து கைப்பற்றினர். இந்த இறுதி யுத்தத்தின் போது சிவிலியன்கள் நெருக்கமாக இருந்த பகுதிகளில் அரசாங்கப் படைகள் கனரக ஆயுதங்களை சகட்டுமேனிக்குப் பயன் படுத்தியுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த இறுதியானதும் இரத்தக்களரியை ஏற்படுத்தியதுமான யுத்தம் உட்படாத முன்னைய மோதல்களில் குறைந்தது 7,000 சிவிலியன்கள் இறந்திருக்கலாம் என்று ஐக்கியநாடுகள் கணிப்புகள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவிற்கு வந்ததிலிருந்து மூடப் பட்ட முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறும் அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்களுள் விடுதலைப்புலிகள் மறைந்திருக்கிறார்களா என்று சோதனை செய்யப்பட வேண்டு மென அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் பருவப்பெயர்ச்சி மழை ஆரம் பித்ததும் முகாம்களுக்குள் நிலைமை மோச மடையத் தொடங்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சில கட்டுப் பாடுகளுடன் முகாம் வாசிகளுக்கு நட மாடும் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுத்தம் நடத்தப்பட்ட விதம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. மேலும், பெருமளவு மனிதநேய உதவிகளை வழங்கிய நாடுகளை ஏகாதிபத்திய நாடுகளெனக் கூறி உதாசீனம் செய்துள்ளது. தங்கள் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையில் உறவுகள் வளர்ந்து வருவது அங்கு மேற்கு நாடுகளின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து வருவதற்கான அறி குறியே என்று இலங்கை அரச அதிகாரிகள் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார்கள்.
யுத்த வெற்றியை தமது துரும்பாகப் பயன்படுத்தி, திரும்பவும் ஜனாதிபதியாக வருவதற்கு ஜனவரி மாதத்தில் நடை பெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு உதவி நிறுவனங்களையும் மேற்கு நாடுகளையும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடு வதாக குற்றம் சாட்டி வருகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் வெளிநாடுகளினால் பெருமளவிலான விமர்சனத்துக்குள்ளாவது குறித்து அரசாங்க அதிகாரிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
இந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய யுததத்தின் ஒரு பகுதியே என்று தெரிவிக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, புலிகளை வெற்றிகொண்டமை ஏனைய பகுதிகளிலும் கிளர்ச்சி எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது என்று குறிப்பட்டுள்ளார். பெருர் தொகையான சிவிலியன்கள் அரசாங்கப் படைகளினால் கொல்லப் பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் நிராகரிக்கிறார்கள். இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கென கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் வாக்கெடுப்பின் போது அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி முன்வைத்து அமெரிக்கா இலங்கைக்கான இராணுவ உதவியை குறைத்துள்ளது. எனினும் மேற்கு நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த முடியாத அளவிற்கு இலங்கை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும் என்றும் அமெரிக்க சென்ற வெளியுறவுக் குழுவின் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் ஐரோப்பாவையும் மத்தியக்கிழக்கையும் சீனாவுடனும் ஏனைய ஆசிய நாடுகளுடனும் இணைக்கும் வர்த்தக மார்க்கத்தில் ஒரு கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கடல் மார்க்க வர்த்தகத்தை சீர்குலைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் கடற்கொள்ளைச் சம்பவங்களையும் முறியடிக்கும் அக்கறை அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குமே உண்டு.
நன்றி:வீரகேசரி
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment