Tuesday, December 29, 2009

தமிழர்களை மிரட்டி பணம் வாங்கியதாக பத்மநாதன் மூலம் சொல்ல வைக்க சிங்கள அரசு திட்டம்

பத்மநாதன் விரைவில் பேட்டி கொடுக்க திட்டம்: விடுதலைப்புலிகளுக்கு பணம் திரட்டப்பட்டதை வெளியிடுகிறார்
 
கொழும்பு, டிச. 28-
 
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மே மாதம் போரில் கொல்லப்பட்டதும், இனி நான்தான் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தலைவர் என்று கே.பத்மநாதன் தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார்.
 
விடுதலைப்புலிகளுக்கு திரட்டப்பட்ட நிதியில் பெரும் பகுதி இவர் வசம்தான் இருந்தது. விடுதலைப்புலிகளுக்கு எந்தெந்த நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டது என்ற முழு விவரமும் இவருக்கு மட்டுமே தெரியும்.
 
பத்மநாதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்திய உளவு அமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் இலங்கை அரசு ஒருபடி மேலே சென்று கடந்த ஆகஸ்டு மாதம் இந்தோனேசியாவில் இருந்த அவரை கைது செய்து கொழும்பு கொண்டு சென்றது.
 
பத்மநாதன் மூலம் எல்லா தகவல்களையும் பெற்ற சிங்கள அரசு விடுதலைப்புலிகளின் 600 வங்கி கணக்குகளை முடக்கியது. அதோடு விடுதலைப்புலிகளின் கப்பல்கள் உள்பட பல்வேறு சொத்துக்களையும் முடக்கி தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டது.
 
அடுத்தக் கட்டமாக பத்மநாதனை பேட்டி கொடுக்க வைக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றுக்கு சிங்கள பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.
 
விடுதலைப்புலிகளுக்கு உலகம் முழுக்க எப்படி நிதி திரட்டப்பட்டது என்பதை அப்போது பத்மநாதன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போல விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கப்பட்ட தகவல்களையும் அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது.
 
ஈழத்தில் இருந்து வெளியேறி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு என தனி ஈழநாடு உருவாகும் என்ற நம்பிக்கையில்தான் ஏராளமான பணத்தை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வாரி, வாரி வழங்கினார்கள்.
 
ஆனால் தமிழர்களை மிரட்டி பணம் வாங்கியதாக பத்மநாதன் மூலம் சொல்ல வைக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்மநாதன் பேட்டி மூலம் விடுதலைப்புலிகளுக்கு கெட்டப்பெயர் உண்டாக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails