தெலுங்கானா என்றால்? தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் நிலம் (லேண்ட் ஆப் தெலுகுஸ்) என்பது தான், தெலுங்கானா என்ற வார்த்தைக்கான அர்த்தம். ஆந்திர மாநிலத்தில் உள்ள அடிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், வாரங்கல், மேடக், ரங்கா ரெட்டி, ஐதராபாத், கம்மம், மகபூப் நகர் மற்றும் நல்லகொண்டா என, பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப் பரப்பு தான், தெலுங்கானா பகுதி என, அழைக்கப்படுகிறது.
சுதந்திரத்துக்கு முன்: சாதவாகனாஸ், காகடியாஸ் போன்ற மன்னர் பரம்பரையினர், இந்த பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். 14ம் நூற்றாண்டில் தெலுங்கானா பகுதி, டில்லி சுல்தான்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது, ஐதராபாத் என்ற தனி சமாஸ்தானம் உருவானது. இதற்கு பின் பிரிட்டிஷ் ஆட்சி வந்தபோது, ஆந்திராவின் மற்ற பகுதிகள் எல்லாம் அந்த ஆட்சியின் கட்டுப்பாட்டில் வந்தன. ஆனால், தெலுங்கானா பகுதி, பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இல்லை.
சுதந்திரத்துக்கு பின்: நாடு சுதந்திரம் அடைந்ததும், அனைத்து மாகாணங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. தெலுங்கானா பகுதியை ஆட்சி செய்து வந்த ஐதராபாத் நிஜாம், இதற்கு சம்மதிக்கவில்லை. தொடர்ந்து தன்னாட்சி பெற்ற சமஸ்தானமாகவே ஐதராபாத் இருக்க வேண்டும் என, அவர் அடம் பிடித்தார். இருந்தாலும், இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் அப் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
ஆந்திராவுடன் இணைப்பு: மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது, தெலுங்கு பேசும் மக்கள் வசித்த பகுதிகளை, ஆந்திர மாநிலமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, 1953ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மாநில சீரமைப்பு ஆணையத்தை நியமித்தார். மொழி வாரி மாநிலங்களை அமைப்பதில் உள்ள பிரச்னை குறித்து, இந்த ஆணையம் ஆய்வு செய்தது. இந்த ஆணையம், தெலுங்கானா பகுதியை ஆந்திராவுடன் இணைப்பதற்கு ஆதரவாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, தெலுங்கானா மக்கள், இந்த இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கினர். தெலுங்கானா பகுதி, ஆந்திராவின் மற்ற பகுதிகளை விட வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியாக உள்ளது. அதே நேரத்தில், வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த வருமானம் அனைத்தும் ஆந்திராவின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என, தெலுங்கானா பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். கிருஷ்ணா, கோதாவரி ஆற்றில் கட்டப்படும் அணைகளால், தெலுங்கானா பகுதிக்கு எந்த பயனும் கிடைக்காது என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்தது. கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆந்திர மக்களுக்கே முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் அவர்கள் கருதினர்.
மாநில மறு சீரமைப்பு ஆணையமும், "ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, இரண்டையும் தனித் தனி மாநிலங்களாக அமைப்பதே நல்லது'என, மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. 1956 நவம்பர் 1ல், தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. தெலுங்கானா மக்களை சமாதானப் படுத்தும் வகையில், "ஜென்டில்மேன் ஒப்பந்தம்'ஒன்றும் போடப்பட்டது. இதன்படி, வருவாய், நிர்வாகம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என, கூறப்பட்டது.
தனித் தெலுங்கானா கோஷம் உதயம்: ஆந்திர மாநிலம் உருவான அடுத்த சில ஆண்டுகளிலேயே, தெலுங்கானா பகுதி மக்கள், தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தனர். "ஜென்டில்மேன்'ஒப்பந்தத்தில் கூறப்பட்ட உத்தரவாதம் எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என, அவர்கள் ஆவேசப்பட்டனர். தெலுங்கானா பகுதியில், இதை முன்னிறுத்தி 1963ல் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. ஐதராபாத் உஸ்மானியா பல்கலை மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.
360 மாணவர்கள் பலி: மாணவர்களுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள், எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தெலுங்கானா போராட்டம் என, அறிவிக்கப்பட்டது. தெலுங் கானா கோரிக்கைக்காக 360 மாணவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். ஆனால், கூடுதலாக மொழி வாரி மாநிலங்களை உருவாக்குவது இல்லை என்ற விஷயத்தில் காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்தது. சென்னா ரெட்டி, தெலுங்கானா மக்கள் கழகம் என்ற கட்சியை துவக்கினார். பின்னர், இவர் காங்கிரசில் சேர்ந்து, ஆந்திர முதல்வரானார். இதனால், தெலுங்கானா கோஷம் பிசு பிசுத்தது.
பா.ஜ., ஏற்படுத்திய திருப்பம்: இடைப்பட்ட காலங்களில், தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்தாலும், அது பெரிய அளவுக்கு பேசப்படவில்லை. இந்த சூழ்நிலையில் தான்,"நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவோம்' என, 1990ல் பா.ஜ., உறுதி அளித்தது. ஆனால், பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தும், தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு காரணம். இருந்தாலும், பா.ஜ., ஏற்படுத்திய திடீர் திருப்பம் காரணமாக, 2000ல் தெலுங்கானா கோரிக்கைக்கு புது ரத்தம் பாய்ச்சப் பட்டது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி: இந்த சூழ்நிலையில் தான், தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்த சந்திரசேர ராவ், அந்த கட்சியில் இருந்து விலகி, 2001ல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற புதிய கட்சியை துவங்கினார். தெலுங்கானா தனி மாநிலம் பெறுவது தான், இந்த கட்சியின் ஒரே கொள்கை. 2004ல் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் டி.ஆர்.எஸ்., கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அப்போது உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச பொது திட்டத்தில், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, காங்கிரஸ் உறுதி அளித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் இதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை டி.ஆர்.எஸ்., 2006ல் வாபஸ் பெற்றது.
ஒட்டு மொத்த ராஜினாமா: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், 2008 மார்ச்சில், டி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.பி.,க்கள், 16 எம்.எல்.ஏ.,க்கள், மூன்று எம்.எல்.சி.,க்கள், ஒட்டு மொத்தமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, ஆந்திர அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தினர். காலியான இந்த தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், டி.ஆர்.எஸ்., கட்சி ஏழு சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல், நான்கு லோக்சபா தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது. இதனால், தெலுங்கானா கோரிக்கை, மீண்டும் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் டி.ஆர்.எஸ்., கட்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், அந்த கட்சியின் செல்வாக்கு குறையத் துவங்கியது.
மீண்டும் தெலுங்கானா: கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக, மீண்டும் தெலுங்கானா கோஷத்தை தூசு தட்டினார், சந்திரசேகர ராவ். கடந்தவாரம் அதிரடியாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய அவர், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர். இறுதியில், சந்திரசேகர ராவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. "தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்' என, அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஆந்திராவின் ராயலசீமா மற்றும் கடலோர மாவட்டங்களில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் யாருக்கு? தனித் தெலுங்கானா மாநிலம் அமையும் பட்சத்தில், தலைநகர் ஐதராபாத் யாருக்குச் சொந்தம் என்ற மோதல் தற்போதே உருவாகி விட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நகரமாகத் திகழும் ஐதராபாத்தில் ஐ.டி., நிறுவனங்கள் பல முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாக அந் நகரின் மக்கள் தொகை 70 லட்சத்தையும் கடந்து விட்டது. கடற்கரை ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி மக்களை, இந்நகரம் வெகுவாக கவர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். இவர்கள், ஐதராபாத்தை அத்தனை எளிதில் தெலுங்கானாவுக்கு விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் பட்சத்தில், ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என, ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்களும் யூனியன் பிரதேச அந்தஸ்து ஐதராபாத் நகருக்கு கிடைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். காரணம், இப்பகுதியில் மட்டும் 40 சதவீத முஸ்லிம்கள் வசித்து வருவதுதான். எனவே, ஐதராபாத் யாருக்கு சொந்தம் என்ற விவகாரம், தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன? தனி மாநிலம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசு அறிவித்தாலும், அது அத்தனை எளிதாக நடந்து விடாது என்றே, தற்போதைய ஆந்திரா நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. ராயலசீமா மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதையடுத்து, இந்த பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. இந்த பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் பதவிகளையே தூக்கி எறிந்துள்ளனர். ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், கிணறு வெட்டப் போய், பூதம் கிளம்பிய கதையாகி விட்டது மத்திய அரசுக்கு. தெலுங்கானாவுக்கான விடியல் கிடைத்தாலும், அது ஆந்திராவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கசப்பான விடியலாகத் தான் இருக்கும்.
இன்னும் எத்தனை மாநிலங்கள்? தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு மத்திய அரசு பணிந்ததை அடுத்து, மேலும் பல மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோஷம் வலுத்துள்ளது. அது குறித்த விவரம்:
1 மேற்கு வங்கத்தை பிரித்து, கூர்க்காலேண்ட் தனி மாநிலம்.
2. உ.பி.,யின் மேற்கு பகுதியை பிரித்து, ஹரித் பிரதேச தனி மாநிலம்.
3. பீகாரை பிரித்து, மிதிலாஞ்சல்.
4. கர்நாடகாவை பிரித்து, கூர்க் மாநிலம்.
5. குஜராத்தை பிரித்து, சவுராஷ்டிரா மாநிலம்.
6. மகாராஷ்டிராவை பிரித்து, விதர்பா மாநிலம்.
7. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளை இணைத்து, கூச் பெகார் மாநிலம்.
இதுதவிர, புதுச்சேரியில் இருந்து காரைக்காலை பிரித்து, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment