'திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என்று அண்மையில் தமிழக அரசின் பதிவுத் துறை ஓர் உத்தரவு போட்டது. இது தொடர்பாக யாரும் எவ்விதப் பிரச்னையும் கிளப்பா மல் இருந்த நிலையில்... 'அரசின் உத்தரவு தங்களையும் தங்களது மதத்தையும் அவமதிப்பதாக உள்ளது!' என்று இஸ்லாமியர் தரப்பிலிருந்து இப்போது கொந்தளிப்புக் கிளம்பி இருக்கிறது! 'தமிழக முற்போக்கு உலமாக்கள் பேரவை' மாநில அமைப்பாளர் முகமது ரஃபீக் மிஸ்பாகி நம்மிடம், ''கடந்த நவம்பர் 24-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்திருக்கும் கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் பிற மதத்தவருக்கு வேண்டுமானால், பொருத் தமாக இருக்கலாம். ஆனால், இஸ்லாமிய சமூகத்தினருக்கு இது சரிப்பட்டு வராது. எங்களுக்கென்று திருமணம், விவாகரத்து உள்ளிட்டவற்றுக்கு தனியாக இஸ்லாமியர் பர்சனல் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்துக்கு தமிழக அரசின் இந்த உத்தரவு முற்றிலும் முரண்பாடானது. குர்-ஆனை அடிப்படையாகக் கொண்டு - இறைத் தூதர் நபிகள் நாயகம் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ள ஷரியத் சட்டப்படிதான் திருமணம் உள்ளிட்ட சடங்குகளை ஒவ்வொரு ஜமாத்தும் செயல்படுத்தி வருகின்றன. அந்த சட்டப்படி இஸ்லாமிய ஆணோ, பெண்ணோ... பருவ வயது அடைந்தாலே திருமணம் செய்துகொள்ளத் தகுதி பெற்றவர்கள். எங்கள் சமுதாயத்தில் அவரவர் குடும்பச் சூழலைப் பொறுத்து 15 வயதிலிருந்தே திருமணம் செய்து விடுகின்றனர். இந்தத் திருமணம்கூட இரு பால் சம்மதத்தைப் பெற்று ஜமாத் முன்னிலையிலேயே நடக்கும். இந்தத் திருமணத்தை, ஜமாத் எழுத்துபூர்வமாக பதிவு செய்யும். தவிர, பெண்ணுக்கு அளிக்கப்படும் சீர்வரிசை மற்றும் மஹர் (திருமண கட்டணம்) உள்ளிட்ட அனைத்து கொடுங்கல் - வாங்கல் விஷயங்களும் பதிவு செய்யப்பட்டுவிடும். இப்படி இருக்கையில் தமிழக அரசின் கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் மதத்தை இழிவு படுத்துவதாகவும் இருக்கிறது. எங்கள் சமூகத்தினர் மேஜருக்கான வயதை எட்டுமுன் கட்டாயத் திருமணப் பதிவு சட்டப்படி திருமணம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் பதிவு செய்ய முடியாது. மீறி செய்தால் அது சட்ட விரோதமாகிவிடும்!'' என்றவர், ''இஸ்லாத்தை பொறுத்த வரை திருமணம் என்கிற சடங்கு இறை வணக்க வழிபாட்டுக்கு சமமான ஒன்று. இறைவனை வணங்குவது எப்படியோ... அப்படித்தான் நிக்காஹ்வும். திருமணப் பதிவு என்று வரும்போது ஜமாத் என்கிற கூட்டமைப்பு செல்லாக்காசாகி விடும். 'அதுதான் அரசாங்கத்தில் பதிவு செய்துவிட்டோமே உங்களுக்கு எதுக்கு பதில் சொல்ல வேண்டும்...' என்று பிரச்னைகளைக் கிளப்பு வார்கள். அதன் மூலம் ஓர் இஸ்லாமியர் எந்த மதத் தைச் சேர்ந்தவரை வேண்டுமென்றாலும் மதம் மாற்றாமலேயே திருமணம் செய்து கொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும்!'' என்றார் கவலை யுடன். அந்த அமைப்பின் மாநில செயலாளர் சதக்கத் துல்லா, ''கட்டாயப் பதிவுத் திருமணத்தில் வயது மட்டுமே பிரச்னையில்லை. திருமணத்துக்குப் பிறகு விவாகரத்திலும் சிக்கல்கள் எழுகிறது. ஷரியத் சட்டப்படி தம்பதியருக்குள் சரிப்பட்டு வரவில்லை என்றால் விவாகரத்துக்கு வலுவான காரணம் இருக்கும் சூழலில் ஜமாத் முன்னிலையில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, 'தலாக்' சொன்னாலே போதுமானது; விவாகரத்து கிடைத்துவிடும். நீதிமன்றப் படிகளில் ஏறியலைந்து குடும்ப கௌரவம் தொலைக்க வேண்டியதில்லை. அதேசமயம், ஷரியத் சட்டப்படி ஓர் இஸ்லாமிய ஆண் நான்கு திருமணம் வரை செய்து கொள்ளலாம். இது உச்ச நீதிமன்றம் வரை செல்லுபடியாகிறது. ஆனால், கட்டாயப்பதிவு என்று வரும்போது பெண் தரப்பில் செல்வாக்கு படைத்தவர்கள் வேண்டுமென்றே அரசு இயந்திரத்தை பயன்படுத்தி மாப்பிள்ளை வீட்டாரை அலைக் கழிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படியெல்லாம் சிக்கல்கள் இருக்கையில், தமிழக அரசு அவசரகதியில் எந்த இஸ்லாமிய அமைப்பிடமும் ஆலோசனை செய்யாமல் இந்த சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு இணக்க மாக இருக்கிற முதல்வர் கருணாநிதி எப்படி இதை அனுமதித்தார் என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மத்திய அரசே கொண்டு வரத் தயங்கும் சட்டம் இது. சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு இஸ்லாமியர்களின் கண்ட னத்துக்குப் பிறகு, வாபஸ் பெறப்பட்டு விட்டது. எங் களைப் பொறுத்த வரை பி.ஜே.பி. ஆர்வம் காட் டிய பொது சிவில் சட் டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான முன்னோடி சட்டமாகத்தான் இதைப் பார்க்கிறோம். உண்மையான இஸ்லாமியன் என்றுமே அதற்கு இடம் கொடுக்க மாட்டான். அதை உயிரைக் கொடுத்தாவது தடுப்பான். இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு தொடர்ந்து மாநிலம் முழுவதும் நாங்கள் போராட்டங்களை நடத்துவோம்...'' என்றார் உணர்ச்சிவசப்பட்டு! பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் பேசினோம். ''இஸ்லாமியர்கள் மனதையோ மத உணர்வுகளையோ புண்படுத்தும் நோக்கம் இந்தச் சட்டத்தில் துளியும் இல்லை. தனிமனிதப் பாதுகாப்பு கருதியே நல்ல நோக்கத்தோடு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுவுமில்லாமல், பதிவைப் பொறுத்த வரை வயது விஷயத்தை நாங்கள் பார்ப்பதில்லை. திருமண வயது என்பதை அறிவுரை அடிப்படையில்தான் பதிவுத் துறை அணுகுகிறது. மற்றபடி பதிவுக்கு வயது சான்றிதழ் தேவையும் இல்லை. ஆனால், மைனர் பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு திருமணம் செய்து விட்டார்கள் என்று யாராவது வயதைக் காட்டி நீதிமன்றத்துக்குச் சென்றால் சம்பந்தப்பட்டவர்கள்தான் அதை எதிர் கொள்ள வேண்டும்...'' என்றார். | ||||
|
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment