செலவைக் குறைத்து, பல்வேறு வசதிகளை எங்கும், எப்போதும் தரக்கூடிய கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இந்தியாவில் தொடங்கிவிட்டது. இன்டர்நெட் வழியாகத் தரப்படும் எந்த சேவையையும் கிளவுட் கம்ப்யூட்டிங் என அழைக்கலாம் என்றாலும், இன்டர்நெட் வழி கம்ப்யூட்டிங் பணிகளுக்குத் தேவையான கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் வசதிகளைத் தருவதே கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகும். அடிப்படைக் கட்டமைப்பு சேவை, கம்ப்யூட்டர் இயக்க மேடை சேவை மற்றும் சாப்ட்வேர் தொகுப்பு பயன்பாடு வழங்கும் சேவை என கிளவ்ட் கம்ப்யூட்டிங் மூன்று பிரிவுகளாக இயங்குகிறது.
அடிப்படைக் கட்டமைப்பு(InfrastructureasaService):சேவையில் நிறுவனம் ஒன்று மற்ற நிறுவனங்களுக்குத் தேவையான சர்வர்களை நிறுவி, கட்டணம் பெற்றுக் கொண்டு அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கும். இதனை சேவைக் கட்டணம் செலுத்தி எடுக்கும் நிறுவனம் இதில் தனக்குத் தேவையான புரோகிராம்களை அந்த சர்வர்களில் பதிந்து இயக்கிக் கொள்கிறது. நாம் மின்சாரம், குழாய் வழி கேஸ், தண்ணீர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைப் போன்றது. இயக்க மேடை சேவை (Platformasaservice) என்பது கட்டணம் செலுத்தும் நிறுவனத்திற்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களையும், சாப்ட்வேர் உருவாக்கிப் பயன்படுத்தத் தேவையான டூல்களையும், சேவை வழங்குபவர் தன் சர்வர்களில் நிறுவி வழங்குவது. இன்டர்நெட் வழியாக இந்த சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் தொகுப்புகளை இந்த மேடை அமைப்பில் உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ளும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சாதனங்களையும் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துவது போன்றது இந்த சேவை.
சாப்ட்வேர் தொகுப்பு (Softwareasaservice) பயன்பாடு வழங்கும் சேவை என்பது, இந்த சேவையை வழங்குபவர் கம்ப்யூட்டர் கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைத் தன் சர்வரில் அமைத்து, அவர்களுக்குத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அனைத்து உதவிகளையும் தருவது. ஒரு நிறுவனத்திற்கான இமெயில் சேவை, ஸ்டாக் இயக்கம், டேட்டா கணிப்பு போன்ற சேவைகள் அனைத்தும் இதில் அடக்கம்.
இவற்றில் என்ன வசதி என்றால், ஒரு வாடிக்கையாளர் கட்டணம் செலுத்தியபின் எந்த நேரத்திலும் சேவையைப் பெற முடியும். கம்ப்யூட்டர் கிராஷ் அல்லது டவுண் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. அது சேவையைத் தருபவர் பொறுப்பு. வாடிக்கையாளருக்கு சர்வர், கம்ப்யூட்டர், சாப்ட்வேர் போன்றவற்றிற்கான முதலீட்டுச் செலவு இல்லை. தேவையான அளவிற்கு சேவையைக் கேட்டுப் பெறலாம். எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திப் பின் விட்டுவிடலாம்.
தற்போது இத்தகைய கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மாதக் கட்டணம் பெற்றுக் கொண்டு அந்த காலத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்கி வரும் பழக்கத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சேவையை வழங்குபவரும் ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேரினைப் பதிந்து அதனைப் பல வாடிக்கையாளருக்கு வழங்க முடியும். எனவே இங்கு குறைவான செலவில் இரு தரப்பினரும் பயனடைய முடிகிறது. இன்றைய இன்டர்நெட் வசதி இதற்கு ஆதாரமாகவும், அடிப்படை இயக்கத்தைத் தருவதாகவும் அமைகிறது. இரு தரப்பினரும் எந்த நேரத்திலும் தங்கள் ஒப்பந்தத்தினை முடிவிற்குக் கொண்டு வர முடியும். இதனால் இருவருக்கும் நஷ்டம் ஏற்படப் போவதில்லை.
பயன்படுத்துபவருக்கென எந்த கம்ப்யூட்டரும் சாப்ட்வேரும் தேவையில்லை. அதனை இயக்கும் அறிவு மற்றும் தொழில் நுட்பம் தேவையில்லை. சிஸ்டம் என்னவாகுமோ என்ற பயம் தேவையில்லை. எங்கு சென்றாலும் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் சேவையைப் பயன்படுத்தித் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும். இத்தகைய சேவை சிறிய அளவில் இயங்கும் அனைத்து பிரிவு நிறுவனங்களுக்கும் உகந்ததாகும். இந்த வகையில் இதுவரை மேற்கொண்டு வந்த முதலீட்டுச் செலவு, தேய்மானச் செலவு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையைப் பயன்படுத்தும் ஒரு விற்பனை நிறுவனம், தான் விற்பனை செய்த பொருளுக்கான பில்லைக் கூட இந்த சேவை மூலம் தயாரித்து வழங்க முடியும். அதே நேரத்தில் வாடிக்கையாளரின் முகவரியைத் தன் விற்பனைப் பொருள் சேமிப்புக் கிடங்கிற்கு அனுப்பி குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி செய்திடவும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். பொருள்கள் விற்பனையாவதை மொத்தமாக அறிந்து, காலியாகும் பொருட்களைக் கொள்முதல் செய்திட நினைவூட்டும் செய்தியையும் இந்த சேவை மூலம் பெறலாம்.
தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிபவர்களின் வேலை நாட்கள், ஊதியம், வேலைத் திறன், தொடர்புடைய உற்பத்தித் திறன் என அனைத்தையும் இன்டர்நெட் இணைந்த ஒரு கம்ப்யூட்டர் மூலம் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வழி பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை இந்தியாவில் தற்போது கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணையுடன் இந்தியாவில் கிளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் டேட்டா சென்டர், "ரிலையன்ஸ் கிளவ்ட் கம்ப்யூட்டிங் சர்வீசஸ்" என்ற பெயரில் இந்த சேவையை வழங்குகிறது.
இன்றைய அளவில் இந்தியாவில் மூன்றரைக் கோடி வர்த்தகர்களும், உற்பத்தியாளர்களும் தங்கள் வருமானத்தில் 0.5 முதல் 4 சதவிகிதம் வரை தகவல் தொழில் நுட்ப சாதனங்களில் முதலீடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிதியை அவர்களின் தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுத்த கிளவுட் கம்ப்யூட்டிங் உதவுகிறது. அண்மையில் எடுத்த ஆய்வில் வரும் 2011 ஆம் ஆண்டில் 40 சதவிகித தகவல் தொழில் நுட்ப வேலைகள், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் தான் மேற்கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் கட்டமைப்பு மற்றும் சாப்ட்வேர் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. இதற்கென மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஏன், இந்த சேவைக்கு கிளவ்ட் கம்ப்யூட்டிங் எனப் பெயர் வந்தது? அனைத்து சேவைகளும் இன்டர்நெட் வழியே மேற் கொள்ளப்படுவதால், இணைய வைய வெளியில் மேகமே பிரதானமாக உள்ளதால் இது கிளவ்ட் கம்ப்யூட்டிங் எனப் பெயர் பெற்றது
No comments:
Post a Comment