Friday, December 18, 2009

''பிரபாகரன் கொலை?... மூன்று சதிகள்!'

''பிரபாகரன் கொலை?... மூன்று சதிகள்!''
வைகோ வெளியிடும் 'திடுக்' உண்மை!

கொடி ஏற்றும் குமரனாக உலா வருகிறார் வைகோ! ஊர் ஊராக மறுமலர்ச்சி தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இன்னும் பல மாதங்களுக்கு அவரால் தாயகத்தில் தங்க முடியாது.

''புதுப் புது மனிதர்களைக் கிராமங்களில் சந்திக்கும்போது எனக்கே உற்சாகமாக இருக்கிறது. அவர்களது மனதில் எத்தனையோ வேதனைகள் இருக்கின்றன. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைச் சொல்கிறார்கள். ஆட்சிக்கு எதிரான கோபம் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டு இருப்பது தெரிகிறது'' என்றபடி பேட்டிக்குத் தயார்ஆகிறார்.

''உங்களது பேச்சுக்காகத் திடீரென்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுஉள்ளதே?''

''சென்னை அண்ணாமலை மன்றத்தில் 'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் பேசினேன். இருள் சூழ்ந்த ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற, தேவைப்பட்டால் நானே அங்கு வந்து போராடத் தயாராக இருக்கிறேன்' என்று பேசினேன். என்னையும் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த கண்ணப்பனையும் கைது செய்தார்கள். காவல் நீட்டிப்பு தேவையில்லை என்று இப்போது திடீரென்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். என்னோடு கைதான கண்ணப்பன் கட்சி மாறியதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்திருக்கிறார்கள். கருணாநிதி தன் வசதிக்கு எல்லாச் சட்டங்களையும் வளைப்பார் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு. இந்த வழக்குகள், கைதுகள், குற்றப்பத்திரிகைகள் எதற்கும் நான் அஞ்சுபவன் அல்ல!''

''இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மௌவுனமாக அழுவது யாருக்குத் தெரியும்... என்கிறாரே கருணாநிதி?''

''கருணாநிதியின் மனதுக்குள் எத்தனை வன்மம் இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இந்த அறிக்கை. நான் விமான நிலையத்தில் நின்றிருந்தபோது, ஒரு தொழிலதிபர் என் பக்கமாக வந்து கையைப் பிடித்தார். 'இன்னிக்கு சி.எம். விட்டிருக்கிற அறிக்கையைப் படிச்சீங்களா? அவரு திருந்தவே மாட்டாரா?' என்று கேட்டார். அந்த இளைஞன் யாரென்று தெரியாது. ஆனால், அவர் மனதில் இருப்பதுதான் எல்லார் எண்ணத்திலும் உள்ளது. இழவு வீட்டில் வட்டி வசூல் பண்ண வந்தது மாதிரி, புகார் பத்திரம் வாசிக்கிற நேரமா இது? கொத்துக் கொத்தாக குண்டுகள் வீசி 80 ஆயிரம் பேர் செத்து விழுந்த ரத்தம் காயவில்லை. மூன்று லட்சம் தமிழர்கள் தங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை எப்போது என்ற கேள்வியுடன் எழுப்பும் அழுகைச் சத்தம் நிற்கவில்லை. அதற்குள், பக்கம் பக்கமாக பிரேதப் பரிசோதனை செய்யக் கிளம்பிஇருக்கிறார் கருணாநிதி. இவர் இன்னும் லட்சம் கடிதங்கள் எழுதினாலும் பிரபாகரன் புகழை அழிக்க முடியாது! வள்ளுவனும், கம்பனும், இளங்கோவனும் அடைந்த புகழை, கரிகாலனும் ராசராசனும் அடைந்த அழியாப் புகழை அடைந்துவிட்ட மாவீரன் பிரபாகரன். இதை உண்மைத் தமிழன் ஒப்புக்கொள்வான். பார்க்கும் தமிழனைக் கொன்று, வீதியில் நடக்கும் தமிழச்சியைக் கற்பழித்து, சொல்ல முடியாத சித்ரவதைகளைச் செய்த சிங்கள இனவாதத்துக்கு எதிராக பிரபாகரன் ஆயுதம் தூக்கிய பிறகுதான் அராஜகங்கள் நின்றன. தட்டிக் கேட்க யாரும் இல்லை என்று கொக்கரித்த கொலைகாரக் கூட்டம் அதன் பிறகுதான் மெள்ள அடங்கியது. பெரும்பான்மைத் தமிழர் வாழும் வடகிழக்கு மாகாணத்தைத் தன்னுடைய படைபலத்தால் கைப்பற்றி, அங்கு அமைதியான அரசாட்சியை நடத்தியவர் பிரபாகரன். இதை அவர் செய்யாமல் போயிருந்தால் தமிழன் வாழ்ந்ததற்கான சுவடுகளே இல்லாமல் போயிருக்கும். 30 ஆண்டு கால நம்பிக்கையான பிரபாகரனால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று கருணாநிதி சொல்கிறார் என்றால், அவர் சிங்கள அரசாங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறிவிட்டதையே இது காட்டுகிறது!''

''சகோதர யுத்தம் நடத்தியதால்தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?''

''தான் சொல்வது எத்தனை பெரிய பொய் என்பது அவருக்கே தெரியும். 1990-ம் ஆண்டு மே மாதம் 8-ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஒரு கருத்தைப் பகிரங்கமாகச் சொன்னார். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் குழப்பம் ஏற்படுத்த ரா உளவுத் துறைதான் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 'அன்றைக்கு இலங்கைத் தமிழர்களிடத்திலே வேற்றுமையை வளர்ப்பதற்கு எப்படி ரா காரணமாக இருந்ததோ, அதே ரா குழுவினர்தான் இன்றைக்கும் இந்தக் காரியங்களிலே ஈடுபட்டு இருக்கிறார்கள்' என்று சொன்னவர் கருணாநிதிதான்.

இந்தக் கேள்விக்கான பதிலை 19 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி சொல்லிவிட்டார். அதுதான் என்னுடைய பதிலும். சகோதர யுத்தம்பற்றி கருணாநிதி பேசக் கூடாது. தா.கிருஷ்ணன் ஆவியே அதற்குப் பதில் சொல்லும்!''

''மாத்தையா, கருணா போன்று உடன் இருந்தவர்களையே பழிவாங்கியது பிரபாகரனின் பின்னடைவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறதே?''

''மாவீரன் மாத்தையா என்று கருணாநிதி எழுதியிருக்கிறார். அவரது அகராதியில் துரோகிகளுக்குப் பெயர்தான் மாவீரன். மிகப் பெரிய நயவஞ்சகத்தின் வெளிப்பாடுதான் மாத்தையா. பிரபாகரனைக் கொல்வதற்குச் சிலர் முடிவெடுக்கிறார்கள். சென்னை சிறையில் இருந்த கிருபனைத் தப்பிக்கவைக்கிறார்கள். சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகிற வழியில் கிருபன் தப்பியதாகச் செய்தி பரவியது. இங்கிருந்து தப்பி வந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பொட்டு அம்மான்தான் முதலாவது சந்தேகப்பட்டார். அவர் ரகசிய விசாரணைகள் நடத்தினார். அதிரடிப் படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது, பிரபாகரன் படுத்திருக்கும் அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டைவைத்து ரிமோட் மூலம் வெடிக்கவைத்துக் கொல்வது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது கொல்வது என மூன்று திட்டங்களை மாத்தையாவும் கிருபனும் வைத்திருந்தார்கள். இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான், பிரபாகரனிடம் சொல்ல ஓடினார். அப்போது பிரபாகரனுக்குப் பக்கத்தில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கியும் இருந்தது. பாய்ந்து சென்று கிருபனை மடக்கி வெளியில் கொண்டுவந்தார். சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபாகரனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதை மாத்தையா ஒப்புக்கொண்டார். அந்த வாக்குமூலம் அனைவருக்கும் போட்டுக் காண்பிக்கப்பட்டது. உலகில் புரட்சிகர இயக்கம் எதுவாக இருந்தாலும், அங்கு துரோகத்துக்கு என்ன தண்டனை வழங்கப்படுமோ, அதைத்தான் பிரபாகரன் வழங்கினார்.

துரோகி கருணா குறித்தும் கருணாநிதிக்கு அளவு கடந்த பாசம் இருக்கிறது. அவர் மனதுக்குள் துரோகிகள்தான் நிறைந்திருக்கிறார்கள். எனவேதான் வீரர்களை விமர்சனம் செய்கிறார்!''

''விடுதலைப் புலிகளின் தவறான நிலைப்பாடுகள் காரணமாகத்தான் இந்தப் பின்னடைவுகள் ஏற்பட்டன என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சொல்லியிருக்கிறாரே?''

''மகிந்தாவின் சுதந்திரா கட்சியும், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறிக் கடித்துக் குதறியதால்தான் தமிழீழ மண் சிதைக்கப்பட்டது. இன்றைக்கு ஏதோ புத்தர்போலப் புலம்ப ஆரம்பித்திருக்கிறார் ரணில். அவரை ஏதோ ஆபத்பாந்தவன் மாதிரி கருணாநிதியும் மேற்கோள் காட்டுகிறார். முந்தைய ரணில் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்துக் காலத்தைக் கடத்தியது. பேச்சுவார்த்தை மேஜையில் இருந்துகொண்டே புலிகள் அமைப்பை வீழ்த்துவதற்கான திரைமறைவு வேலைகளைப் பார்த்தார் ரணில். இன்று துரோகியாக அலையும் கருணாவை உருவாக்கியதே ரணில்தான். அவரது கட்சி எம்.பி. ஒருவர்தான் இதற்கான திரைமறைவுக் காரியங்கள் அனைத்தையும் பார்த்தவர். கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலின்போது, 'இதோ பார், புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்' என்று ரணில் கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை... ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவும் இல்லை.''

''வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டது என்று வேதனைப்படுகிறாரே கருணாநிதி?''

''வீரத்தைப்பற்றியும் விவேகத்தைப்பற்றியும் பிரபாகரனுக்கு கருணாநிதி கற்றுத்தர வேண்டியதுஇல்லை. வன்னி மாநிலத்தை மீட்டெடுத்து, ஆனையிறவுப் படைத்தளத்தைத் துவம்சம் செய்து, சிங்கள ராணுவத்துக்கு இணையான படை வலுச் சமநிலையை நிலைநிறுத்திவிட்டுத்தான் பேச்சுவார்த்தை நாற்காலியில் பிரபாகரன் அமர்ந்தார். 'ரணில் விக்கிரமசிங்கேவின் இன்றைய அரசாங்கம் நேர்மையுடன், துணிவுடன் தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல்கிறது' என்று வெளிப்படையாக பிரபாகரன் அறிவித்தார். இவர்கள் ஏதாவது ஒரு தீர்வை எட்டிவிடக் கூடாது என்று தடங்கல் போட்டார் ஜனாதிபதி சந்திரிகா. உடனேயே பாதுகாப்பு, உள்துறை அமைச்சர் பதவிகளைப் பறித்தார். புலிகளின் வர்த்தகக் கப்பலை சிங்களக் கடற்படை தகர்த்தது. இதன்பிறகும் ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகளை பிரபாகரன் பின்வாங்காமல் நடத்தினார். சமாதானத்தைக் காரணமாகக் காட்டி, பணம் வசூல் செய்ய வாஷிங்டனில் கூட்டிய மாநாட்டுக்குப் புலிகளை அழைக்கவில்லை.

இடைக்கால அதிகார சபைக்கான திட்டத்தை பிரபாகரன் கொடுத்தார். இதையும் சிங்களக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. உடனே, நாடாளுமன்றத்தைக் கலைத்தார் சந்திரிகா. ரணில் ஆட்சியே கவிழ்ந்தது. 2004-ம் ஆண்டு சுனாமி நிவாரண வேலைகளில் அரசாங்கத்துடன் அனுசரித்துக் காரியங்கள் செய்யத் தயாராக இருந் தார்கள். ஆனால், அதையும் சிங்களக் கட்சிகள் எதிர்த்து வழக்கு போட்டு நிறுத்தின. அடுத்து நடந்த தேர்தலில் மகிந்தா ஆட்சிக்கு வந்தார். சமாதானத்துக்குத் தயார் என்றார். அதை ஏற்று ஜெனிவாவில் பேச்சுவார்த்தைக்குப் புலிகள் சென்றார்கள். யாழ் - கண்டி சாலையைத் திறக்க வேண்டும், கண்காணிப்புக் குழுவைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற சாதாரணக் கோரிக்கை களைக்கூட மகிந்தா ஏற்கவில்லை. போரை அறிவித்தார். கொன்று குவித்தார். இதுதான் வரலாறு.

திம்புவில், டெல்லியில், கொழும்புவில், யாழ்ப்பாணத்தில், தாய்லாந்தில், ஜெனிவாவில் புலிகள் பேசினார்கள். எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. பிரபாகரன் கேட்ட சுயநிர்ணய உரிமையானது ஐ.நா. ஏற்றுக்கொண்ட கோட்பாடுதான். பேச்சுவார்த்தைகள் தோல்வியே அடைந்தாலும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தார். எனவே, வரலாற்றைத் தன்னுடைய விருப்பத்துக்கு கருணாநிதி திரிக்க வேண்டாம்.''

''திடீரென்று பிரபாகரனைக் கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?''

''சிங்களவன் படைபலத்தைப் பெருக்க ஆயுதங்கள், ரேடார்கள், விமானத்தில் இருந்து குண்டுகள் வீச பலாலி விமான நிலையம் புதுப்பிப்பு ஆகியவற்றைச் செய்துகொடுத்தது இந்திய அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டு, புலிகளின் 14 கப்பல்களை மூழ்கடித்தது இந்தியா. இந்த அழிவுக்கு காங்கிரஸ் அரசாங்கமும் கருணாநிதியின் அரசும் பொறுப்பேற்க வேண்டும். அதை மறைப்பதற்காக கதைகள், கப்சாக்களை கருணாநிதி அள்ளிவிடுகிறார். பெரியார் அதைச் சொன்னார், அண்ணா இதைச் சொன்னார் என்பது போன்ற கதைகளை இலங்கை விவகாரத்திலும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். புலிகளுக்குத் தோல்வியும் பின்னடைவும் ஏற்பட்டதை நினைத்து மௌனமாகக் குதூகலித்தவர் அவர். அவராவது... அழுவதாவது?''

''சரத் ஃபொன்சேகா, ராணுவ உடையைக் கழற்றிவிட்டு அரசியலுக்கு வருவதாகத் தெரிகிறதே?''

''பாம்பு தனது சட்டையைக் கழற்றுவதால், நச்சுத்தன்மையை இழந்துவிடாது!''

''புலிகளின் மாவீரர் தினம் இம்மாதம் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது... பல்வேறு மர்மங்களுக்கு விடை கிடைக்குமா?''

''மாவீரன் சங்கர் மறைந்த தினத்தைப் புலிகள் மாவீரர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். கடந்த ஆண்டு வரை 22 ஆயிரத்து 355 பேர் மாவீரர்கள் ஆனார்கள். மே மாதம் நடந்த படுகொலைகளையும் இணைத்தால் தொகை இன்னும் கூடுதலாக ஆகும். இத்தனை பேரின் தியாகம் வீண் போகாது. அவர்களது உடல்கள் அழிந்திருக்கலாம். கல்லறைகளில் இருந்து ஆவிகளாக அவர்கள் யுத்தங்களை நடத்துவார்கள். அடுத்தகட்ட யுத்தம் எப்படி என்பதை அறிவிக்கும் நாளாக 27-ம் தேதி இருக்கும்!'' 

 

source:vikatan
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails