Monday, December 28, 2009

ருச்சிகா பலாத்கார வழக்கு நீதி பெற்றுத் தந்த நட்பு!

  

'அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு அத்தனை சீக்கிரம் தண்டனை வாங்கிக் கொடுத்து விட முடியாது...' என்பது நம் தேசத்தில் இன்னொரு முறை நிரூபணமாகி உள்ளது! ஹரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி-யான ராத்தோர் மீது பாய்ந்த பலாத்கார வழக்குக்கு, ஆணித்தரமான சாட்சிகள் இருந்தும், 19 வருடங்களுக்குப் பிறகே அவருக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட அப்பாவி டீன் ஏஜ் பெண்ணான ருச்சிகா அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ள... அவரது தோழியின் குடும்பத்தினர் தொடர்ந்து போராடி... நீண்ட காலத்துக்குப் பிறகு ஜெயித் துள்ளனர்!

ஹரியானாவின் சண்டிகர் நகரில் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயதான ருச்சிகா கிரோத்ரா. டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் அங்கிருந்த சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரது தோழியான ஆராதனா குப்தாவும் அதில் உறுப்பினர். சங்கத்தின் தலைவர் அப்போது ஐ.ஜி. அந்தஸ்தில் இருந்த எஸ்.பி.எஸ்.ராத்தோர்! இவர் தினமும் மாலையில் டென்னிஸை ரசிக்க வருவார்.

அப்படி விளையாட்டை ரசித்த அந்த அதிகார அரக்கன், 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி ருச்சிகாவை ருசிக்கத் திட்டமிட்டு, அவரை மதியம் 12 மணிக்கு சங்க அலுவலகத்துக்கு வரவழைத்திருக் கிறார். அப்பாவியாக வந்த சின்னப் பெண்ணை திடீரென கட்டிப்பிடித்து... மிருகமாக தன் இச்சையைத் தீர்க்க முயற்சி செய்திருக்கிறார். ஆராதனாவும் இந்த அசிங்கத்தைப் பார்த்துவிட்டார். இரு பெண் களுமே அங்கிருந்து அதிர்ச்சியும் அவமான முமாக வெளியேறினர். ராத்தோர் பெரிய அதிகாரி என்பதால், அவர்கள் பயந்துபோய் போலீஸில் புகார் கொடுக்கவே இல்லை. இதற்கு மறுநாளும் மைதானத்தில் விளையாடிக் கொண் டிருந்தவர்களை அந்த ரத்தோர், மீண்டும் பாலுறவுக்கு வற்புறுத்த... அவர்கள் மறுத்து ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து ருச்சிகா அந்த சங்கத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

அதன் பிறகுதான், ருச்சிகாவின் பெற்றோருக்கு இந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது. ஆராதனாவின் பெற்றோரும் சங்கத்தின் மற்ற சில உறுப்பினர்களும் இணைந்து, ஹரியானாவின் அப்போதைய முதல் அமைச்சர் ஹ§க்கும் சிங்கிடம் புகார் அளித்தனர். அப்போதைய டி.ஜி.பி-யான ஆர்.ஆர்.சிங் தலைமையில் விசாரணை நடந்தது. அவரது அறிக்கை, ஆகஸ்ட் 12, 1992-ல் தயாராக... அது அப்படியே கிடப்பில் போடப் பட்டது.

இன்னொருபுறம் முதல்வரிடம் புகார் கொடுத்த ருச்சி காவுக்கு பயமுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன! சண்டிகரின் பிரபல கான்வென்ட் ஸ்கூலிலிருந்து ருச்சிகா நீக்கப்பட்டார். மற்ற பள்ளிகளும் அட்மிஷன் தர மறுத்தன. ருச்சி காவின் சகோதரர் ராகுல் மீது பொய்யான மூன்று கார் திருட்டு வழக்குகள் போடப்பட்டு, கைது செய்தனர் போலீஸார். ருச்சிகா மற்றும் அவரது தந்தை மீது பொய்யான சிவில் வழக்குகளும் போடப்பட்டன. இதனால், ருச்சிகாவின் தந்தை மிரண்டுபோய் தனது வீட்டை, ராத்தோரின் வழக்கறிஞரின் மிரட்டல் தாங்க முடியாமல் விற்று விட்டார்.

மூன்று வருடங்கள் இப்படியே தொடர்ந்த டார்ச்ச ரால் மனம் உடைந்த தாயில்லாப் பிள்ளையான ருச்சிகா, டிசம்பர் 28, 1993-ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்! ருச்சிகா தந்தை வாயடைத்து நிற்க... இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டு நீதி பெற்றே தீருவது என முடிவு செய்தனர், ருச்சிகாவின் தோழி ஆராதனாவின் பெற்றோர்களான பிரகாஷ் தம்பதி.

இதற்கிடையே, ஐ.ஜி-யான ராத்தோர் அடிஷனல் டி.ஜி.பி-யாகி... ஹரியானா மாநில டி.ஜி.பி-யாகவும் பதவி உயர்வு பெற்றார். இருந்தும், பிரகாஷ் தம்பதியின் மனம் தளராத போராட்டத்தால், ஏழு வருடங் களுக்குப் பின் டி.ஜி.பி-யான ஆர்.ஆர்.சிங்கின் அறிக்கை, கைகளுக்கு எட்டியது. இதை வைத்து அவர்கள் ஹரியானா நீதிமன்றத்தை அணுக, வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது நீதிமன்றம். நவம்பர் 17, 2000-ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு... அம்பாலா, பாட்டியாலா மற்றும் சண்டிகரிலுள்ள சி.பி.ஐ-யின் சிறப்பு நீதிமன்றங்களில் தொடர்ந்தது. இதன் மீதான தீர்ப்புதான் கடந்த டிசம்பரில் 21-ம் தேதி வெளியானது.

இதன்படி, ஜூலை 2002-ல் ஓய்வு பெற்றுவிட்ட ராத்தோர் ஒரு குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆறு மாதம் சிறையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கைதான ராத்தோர், அடுத்த பத்து நிமிடங்களிலேயே ஜாமீன் பெற்றுச் சிரித்த படியே நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்..!

ஆராதனாவின் தாய் மது பிரகாஷிடம் பேசினோம். "குரூரமான ராத்தோர் இதற்காக வருந்தவில்லை. எனினும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே எங்களுக்கு முதல் ஆறுதல். இந்த நீதியைப் பெறுவதற்கே, பலரும் பட்ட கஷ்டங்கள் எத்தனை தெரியுமா? பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட ராகுல் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார். ரோலர் வைத்து அவரது கால்கள் நசுக்கப்பட்டன. புகாரை வாபஸ் வாங்கும்படி நாங்களும் பயமுறுத்தப்பட்டோம். என் கணவரை அலுவலகத்தில் சஸ்பெண்ட் செய்தனர். ஆராதனா பள்ளிக்குச் செல்லும்போது, ரவுடிகள் அவளைத் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தனர். எங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் மீதும் பொய் வழக்குகள் பாய்ந்தன. எங்கள் உயிருக்கும் மிரட்டல் இருந்த தால், நீதிமன்றத்துக்கு வரும்போதெல்லாம் எங்களை யாரும் பின்தொடர்ந்து ஊறு செய்துவிடாதபடி பல்வேறு வாகனங்களில் மாறி மாறிப் பயணித்தோம். இப்படி நீதிமன்றத்துக்கு சுமார் 400 முறை வந்துதான் இந்தத் தீர்ப்பை வாங்கியிருக்கிறோம்!" எனக் கூறி மது பிரகாஷ் நிறுத்த... அவர் கணவர் ஆனந்த் பிரகாஷ் தொடர்ந்தார் -

"இந்தத் தீர்ப்பினால் நாங்கள் முழுத் திருப்தி அடையவில்லை. இப்படிப்பட்டவருக்கு அரசு பதவி உயர்வு தந்ததுடன் 2002-ல் எந்தக் கண்டனமும் இன்றி நிம்மதியாக ஓய்வும் கொடுத்து, முழு நிதி பலன்களையும் கொடுத்துவிட்டனர். ராத்தோர் மீது ஐ.பி.சி. 306 பிரிவின்படி போடப்பட்ட தற்கொலைக்குத் தூண்டும் வழக்கு உட்பட சில வழக்குகள் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் 2001-ல் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இதை பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் உயர் நீதிமன்றம் 2003-ல் நீக்கிவிட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன். மேலும், ருச்சிகா வழக்கை மூடி மறைக்க ராத்தோருக்கு உதவிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப் போராட்டத்தைத் தொடர்வோம்!" எனத் தெரிவித்தார்.

ருச்சிகாவின் பெற்றோருக்கு இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் வெளி உலகுக்கு வர தைரியம் இன்றி பத்திரிகை யாளர்களிடம் பேச மறுத்தனர்.

இந்நிலையில், ருச்சிகா வழக்கில் 19 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு வந்தது குறித்து சி.பி.ஐ(எம்.). கட்சியின் உறுப்பினர் பிருந்தா காரத், ராஜ்யசபையில் குரல் எழுப்பி இருக்கிறார். "இது போன்ற வழக்குகள் 'ஃபாஸ்ட் டிராக்' நீதிமன்றங்களில் விசாரித்து விரைந்து முடிக்கும் பொருட்டு சட்டத்தில் திருத்தங்கள் தேவை!" எனச் சொல்லியிருக்கிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் கிரிஜா வியாசும், ராத்தோர் வழக்கு இப்படித் தாமதமானது குறித்து வேதனை தெரி வித்துள் ளார். காங்கிரஸ் தலைவர் களில்ஒருவரும் மத்திய அமைச்சருமான அம்பிகா சோனியும், வழக்கின் போது ராத்தோர் பதவி உயர்வு பெற்றதைக் கண்டித்துள்ளார்.

ருச்சிகா விவகாரத்தில் வெகு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அவரது தற்கொலையைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். 'தாமதிக்கப்படும் தீர்ப்பு, மறுக்கப்படும் நீதிக்குச் சமமாகும்' என்பதும் இங்கே இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

ஆனால், அதிகாரச் செருக்கு மிக்கவர்களை அடக்கி வைப்பது இந்த நாட்டில் அத்தனை சுலபமா என்ன?

-ஆர்.ஷஃபிமுன்னா   
 

source:vikatan

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails