வன்னிப் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தை விட இந்தியாவுக்கே அதிக குழப்பத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஏடு ஒன்றில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றின்படி - வன்னிப் போரை நடத்துவதற்கு இந்தியா உதவியதாகவும், உலக நாடுகளின் அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவுக்கு அப்போது இந்தியா பாதுகாப்பு அளித்ததாகவும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கோத்தாபய ராஜபக்ச உரையாற்றினார். அதே நேரத்தில் - சரணடையும் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொல்லும்படி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்னொரு பக்கத்தில் கூறிக் கொண்டிருந்தார். முன்னதாக - போரின் இறுதிக் கட்டத்தில் - போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா முயன்றது; ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடைசி நேரத்தில் - விடுதலைப் புலிகளின் அரசியற்துறைத் தலைவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா முயன்றது; இதனால் அவர்களை வெள்ளைக் கொடியுடன் முன்னே சென்று சரணடையுமாறு நோர்வே ஊடாக அறிவுறுத்தியது. ஆனால், பின்னர் அவர்களின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டன; சரணடைந்த போது அவர்கள் சிறிலங்கா படையினரால் சுடப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்றத் தவறி விட்டதாக அமெரிக்கா மீது தமிழ் மக்கள் குற்றம் சாட்டினர்; அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை அமைதி காத்து வருகிறது. சரணடைய வந்தோரைக் கொலை செய்தது போர்க் குற்றம் என்றும், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்த போது - தனது பிராந்திய எதிரியான சீனாவுடன் கூட்டுச் செர்ந்து அதை இந்தியாவே தடுத்தது. இந்த நிலையில் - சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு இந்தியாவின் South Block எனப்படும் வெளிவிகாரக் கொள்கை வகுப்புப் பீடத்திற்கு அதிருப்தியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும். மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடுவதை இந்த South Block கொள்கை வகுப்புப் பீடம் விரும்பவில்லை. இதே சமயத்தில் - சரத் பொன்சேகா, அமெரிக்க அதிகாரிகளால் - போர்க் குற்றம் தொடர்பான 'கேள்வி-பதில்' ஒன்றுக்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்ட பின்னர் இந்திய ஊடகங்கள் அவருக்கு எதிரான கருத்துகளை வெளியிட ஆரம்பித்தன. அவர் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருக்கமானவர் என்றும் ஆபத்தான ஒரு படைத் தளபதி என்றும் இந்திய ஊடகங்கள் விபரித்தன. ஏற்கெனவே - கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உரையாற்றிய போது - போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரசு மீதான சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட இந்தியா உதவியதாக கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். இந்த நிலையில் - இந்தியாவின் பக்க பலம் இருக்கிற துணிச்சலில் தான், சரணடையும் விடுதலைப் புலிகளைக் கொல்லுமாறு கொத்தாபய உத்தரவிட்டாரா என்ற கேள்வியும் இப்போது எழும்புகின்றது. சரத் பொன்சேகா இதுபற்றி இப்போது அதிகம் பேசுவது இந்தியாவுக்குத் தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது: சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்ற விசாரணை வருமானால், அது இந்தியாவுக்கும் பிரச்சனைகளைக் கொண்டு வரலாம். இது இந்தியாவுக்குப் பெரும் நெருக்கடியாக உருவாகும். அதனால் - மகிந்த ராஜபக்சவை காப்பாற்ற இந்தியா முனையலாம் என்றும் கருதப்படுகின்றது source:puthinappalakai |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment