Sunday, December 13, 2009

கருணாநிதியின் பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்

 

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது  "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப்  புதுக் கதை பேசுகிறார்.

வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.

இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.

இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள். 

இந்த ரணில் விக்கிரமசிங்கதான் .  தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை  நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர். 

மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.

இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான்  தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள்.  இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும்  அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.

இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும்  விடுதலையில் (17-11-2009)  வந்த செய்தி.

கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயல-ரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.

எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.

நக்கீரன்

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails