Saturday, December 26, 2009

டி.வி. நிகழ்ச்சி பார்த்து மண்எண்ணை ஊற்றி தீவைத்த சிறுவன்

டி.வி. நிகழ்ச்சியை பார்த்து வாயில் மண்எண்ணை ஊற்றி தீவைத்த வேலூர் சிறுவன் : சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
 சென்னை, டிச. 26-
 
விளையாடும் நேரங்களை தவிர வீடுகளில் இருக்கும் போதெல்லாம் குழந்தைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொள்வது டி.வி. நிகழ்ச்சிகள்தான்.
 
டி.வி.க்களில் அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகளை விட ஆபத்தான நிகழ்ச்சிகளே தற்போது அதிகம் ஒளி பரப்பாகின்றன.
 
முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் திகைப்பூட்டும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. "டி.வி.யில் வருவது போல யாரும் இதை செய்து பார்க்க வேண்டாம்" என்கிற எச்சரிக்கையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வேலூர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பேரணாம்பட்டை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவரது மகன் வினீத் (வயது 13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
 
இவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து டி.வி.யில் வரும் அந்த குறிப்பிட்ட சாகச நிகழ்ச்சியை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.
 
சம்பவத்தன்று அந்த டி.வி. நிகழ்ச்சியில் சாகசம் நிகழ்த்தியவர் வாயில் மண்எண்ணையை ஊற்றி அதனை வெளியில் கொப்பளித்து தீவைக்கும் சாகசத்தை செய்து காட்டினார்.
 
இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்த வினீத் தனது நண்பர்களுடன் இது பற்றி விவாதித்தான். நாமும் அதுபோல் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் வினீத்துக்கு ஏற்பட்டது. இதையடுத்து அன்று மாலையில் வீட்டில் இருந்த மண்எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வினீத் வெளியில் எடுத்து சென்றான்.
 
பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த "விபரீத விளையாட்டு"க்கு ஆயத்தமானான். இதற்காக காயந்த சறுகுகள் மற்றும் குப்பைகளை கூட்டி அதில் தீவைத்தான்.
 
பின்னர் அதன் அருகில் அமர்ந்து வாயில் மண் எண்ணையை ஊற்றி வினீத் சருகில் பற்றிய தீயை கையில் எடுத்தான். அப்போது அவனது உடலில் திடீரென தீபற்றிக் கொண்டது. இதில் வினீத்தின் முகத்தில் இருந்து வயிறு பகுதிவரை தீயில் கருகியது.
 
இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வினீத் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது, வினீத்தால் சரியாக பேச முடியவில்லை. படுத்த படுக்கையாக இருக்கும் அவனது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
சிறுவர்களின் உயிருக்கு உலைவைக்கும் இது போன்ற டி.வி. நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதற்கு பெற்றோர்கள் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற விபரீதங்களை தடுக்க முடியும்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails