Thursday, December 17, 2009

நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பாக தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடத்த முயல்வோம்

நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பாக தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடத்த முயல்வோம் : திருமாவளவன்

சென்னை, டிச.15,2009: நாடுகடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக பல்வேறு நாடுகளில் தமிழர்களிடையே நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு போன்று தமிழகத்திலும் நடத்துவதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "உலகெங்கும் பரந்து வாழுகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தங்களுக்கான 'நாடுகடந்த தமிழ் ஈழ அரசு' தொடர்பாக ஆங்காங்கே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்திவருகின்றனர். அத்துடன், ஈழத்தந்தை செல்வா காலத்தில் நிறைவேற்றப்பட்ட 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' ஆதரிக்கும் வகையில் இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களின் மனநிலையை அறியும்பொருட்டும் 'பொதுவாக்கெடுப்பு' நடந்து வருகிறது.

அண்மையில் நார்வே மற்றும் ஃபிரான்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வாக்களித்துள்ளனர். நார்வேயில் 98 விழுக்காடு மற்றும் ஃபிரான்சில் 99 விழுக்காடு அளவிலும் பொதுமக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

அதாவது, ஈழத்தமிழர்களுக்கு நிலையான பாதுகாப்பு தமிழ் ஈழ விடுதலை மட்டுமே என்பதை மீண்டும் மக்கள் இத்தகைய வாக்கெடுப்பின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

இலங்கை அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலையளிக்கிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை - நாடுகடந்த தமிழ் ஈழ அரசை விடுதலைச்சிறுத்தைகள் முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது.

அத்துடன், தமிழகத்திலும் அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் முன்முயற்சிகளை மேற்கொள்ளும்," என்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


source:vikatan


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails