Saturday, December 26, 2009

தமிழ்மொழி செம்மொழி என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் `ராபர்ட் கால்டுவெல்'

தமிழ்மொழி செம்மொழி என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் `ராபர்ட் கால்டுவெல்' கருணாநிதி தகவல் சென்னை, டிச.26- தமிழ் மொழி செம்மொழி என்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் `ராபர்ட் கால்டுவெல்' ஆவார் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்மொழி செம்மொழி தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால்; தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856-ம் ஆண்டு அறிஞர் கால்டுவெல், தாம் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும். செந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப் பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல்தமிழ், மிக மிகக் குறைந்த சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது. சமஸ்கிருதச் சொற்களையும், எழுத்துக்களையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டு; பழந்திராவிட தனிச்சிறப்பு வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள், ஒலி முறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சியையும் விடாமல் மேற்கொண்டிருப்பதினாலேயே அச்செந்தமிழ், தன் மொழியின் உரைநடை, பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது என்று தமிழ்மொழி செம்மொழியே எனச் சான்றாதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார். நாகரிகம்-பண்பாடு அறிஞர் கால்டுவெல்லின் ஆழ்ந்த ஆராய்ச்சி அடிப்படையிலான நூல்கள் தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்தன. தமிழ், தமிழர்தம் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த பற்றின் அடிப்படையிலேதான், அண்ணா இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, அவரது திருவுருவச் சிலையைச் சென்னை மெரினா கடற்கரையில் நிறுவிடச் செய்தார். தென்னிந்தியத் திருச்சபையினர் வழங்கிய ராபர்ட் கால்டுவெல் திருவுருவச் சிலை, 2.1.1968 அன்று, அன்றைய தமிழக மேலவைத் தலைவர் எம்.ஏ.மாணிக்கவேலர் தலைமையில், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையாரால் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்மொழி செம்மொழியேயென அறுதியிட்டு உறுதியாக சைவ சித்தாந்த மகா சமாஜம் 1918-ம் ஆண்டிலேயே நிறைவேற்றிய தீர்மானம் தமிழ் ஆர்வலர்களாலும், அன்பர்களாலும் மிகுந்த மகிழ்ச்சியோடும், நிறைவோடும் நினைவு கூரத்தக்கதாகும். அஞ்சல் தலை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைப் பற்றி, தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகளார் 12.3.1918-ந் தேதி பற்றிய தமது நாட்குறிப்பில், "தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கத்திற்கு விண்ணப்பம் விடுப்பதற்குப் பச்சையப்பன் கல்லூரியில் 15-ம் நாள் (15.3.1918) நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரையாற்றுமாறு, கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.,எம்.எல்., வேண்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார். தஞ்சை-கரந்தைத் தமிழ்ச் சங்கம், செம்மொழி வரலாற்றிற்கு வழங்கியுள்ள மிகச்சிறப்பான பங்களிப்பு போற்றத்தக்கது மட்டுமல்ல; புவியில் வாழும் நாள்வரை தமிழர்களால் மறக்கவொண்ணாததுமாகும். த.வே.ராதாகிருஷ்ணப் பிள்ளை உள்ளிட்ட தமிழ் ஆர்வமும், தமிழ்ப் பயிற்சியும் உடையோர் சிலரால் 1911-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம்; தொடங்கிய காலம் முதல் தமது வாழ்நாள் இறுதிவரை அதன் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் தமிழறிஞர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை ஆவார். அதனால் தான், 18.2.2006 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற தமிழவேள் உமாமகேசுவரனார் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் நான் உரையாற்றியபோது:- ஆதாரம் "உமாமகேசுவரனார் பெயர் இன்று மற்ற அறிஞர்களைவிட அதிகமாக நினைவுக்கு வரவேண்டிய காலகட்டம் இது. காரணம் தமிழ்ச் செம்மொழி என்று எண்ணினால், பரிதிமாற் கலைஞருக்கு அடுத்து, நம் நினைவுக்கு வருகிற பெயர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்தான். அவர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ், செம்மொழியாக ஆக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியவர். இல்லையேல், தமிழ் செம்மொழியாவதற்கு எந்த ஆதாரத்தை வைத்து நாம் மத்தியிலே இருக்கின்ற அரசோடு பேசமுடிந்தது?'' - என்று கரந்தை உமாமகேசுவரனாரின் அருமைபெருமைகளுக்கு அணி செய்தது எனது நினைவில் அழுத்தமாக அச்சியற்றப் பெற்றிருக்கிறது. தஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு-எட்டாம் ஆண்டுகளுக்கான விழா, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய நாட்களில் திருக்கோவிலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலிïர் திருஞானியார்மடத்தின் தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சார்ய சுவாமிகள் தலைமையில், தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, தமிழறிஞர் வேங்கடசாமி நாட்டார், டி.என்.குருமூர்த்திப் பிள்ளை, டி.கூரத்தாழ்வார் முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அவ்விழாவில், "தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியென உறுதிப்பட பலதிறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும்'' என்று வற்புறுத்தித் தீர்மானம் இயற்றப்பட்டது. தீர்மானம் 22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய நாட்களில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் தலைமையில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரெண்டாவது ஆண்டுவிழாவில், "உலகத்து உயர்தனிச் செம்மொழிகளில், முதல் மொழியெனக் கருதப்படுவதற்குரித் தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாயிருப்பதால், அதனை அத்தகை மொழியாக ஆட்சியாளர் கருதி ஐ.சி.எஸ். பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திய அரசியலாரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது'' எனும் தீர்மானம் இயற்றப்பட்டது. 1938-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவிற்குத் தலைமையேற்ற திருப்பாதிரிப்புலிïர் ஞானியார் அடிகள் தனது உரையில், "இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத்தக்க தாகும்'' என்று தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார். இவ்வாறு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் தொடக்கக் கட்டத்தில்; தமிழ், செம்மொழியென அரசியல் நிலையில் அங்கீகரிக்கப்பட்டு உரிய முறையில் சிறப்பு செய்யப்படவேண்டும் என்பதற்கு ஆற்றிய பணி அளவிடமுடியாததாகும். செம்மொழி வரலாற்றில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆற்றல் மிக்கதோர் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

source:daily thanthi

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails