Monday, December 14, 2009

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி?முதல்-மந்திரி ரோசய்யா பதவிக்கு ஆபத்து



தெலுங்கானா விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? முதல்-மந்திரி ரோசய்யா பதவிக்கு ஆபத்து ஐதராபாத், டிச.14- தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதல்-மந்திரி ரோசய்யாவை பதவி விலக வைத்து, சட்டசபையை முடக்கி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருகிறது. 22 மந்திரிகள் ராஜினாமா ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகரராவ் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இதனால் தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து, தெலுங்கானா தவிர, ஆந்திராவின் மற்ற பகுதிகளான கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தெலுங்கானாவை எதிர்த்து, காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 138 எம்.எல்.ஏ.க்களும், 5 எம்.பி.க்களும் ராஜினாமா செய்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், 22 மந்திரிகள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். அவர்களை முதல்-மந்திரி ரோசய்யா சமாதானப்படுத்தினார். ராஜினாமா முடிவு குறித்து நேற்று அந்த மந்திரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி மந்திரிகள் ராஜினாமா செய்தால், தானும் ராஜினாமா செய்யப் போவதாக முதல்-மந்திரி ரோசய்யா கூறியதாக தெரிகிறது. மேலும், தெலுங்கானாவுக்கு எதிராக ஆந்திராவில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு ரோசய்யா தகவல் தெரிவித்துள்ளார். மேலிடத்தின் உத்தரவுக்காக அவர் காத்திருக்கிறார். இந்தப் பிரச்சினை குறித்து காங்கிரஸ் மேலிடம் ஓரிரு நாளில் முக்கிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமையை சமாளிக்க, முதல்-மந்திரி ரோசய்யா பதவி விலக மேலிடம் உத்தரவிடும் என்று தெரிகிறது. பிறகு, மாநில சட்டசபையை முடக்கி (சஸ்பெண்டு) வைத்து, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளை எடுக்க ஓரிரு நாட்கள் ஆகும் நிலையில், இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. சட்டசபையில் அமளி நடப்பதை விரும்பாததால், சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே இன்றே முடித்துக்கொள்ள காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இன்று சட்டசபை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. ஜனாதிபதி ஆட்சி முடிவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:- இது பிராந்திய உணர்வுள்ள பிரச்சினை என்பதால், ரோசய்யாவை நீக்கி விட்டு மற்றொருவரை முதல்-மந்திரியாக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. சட்டசபையை கலைத்து விட்டால், புதிதாக தேர்தலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதற்கும் மேலிடம் தயாராக இல்லை. ஆகவே, சட்டசபையை முடக்கி வைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால், நிலைமை சரி ஆகும்போது, மீண்டும் சட்டசபைக்கு உயிரூட்டி, மீண்டும் அரசை அமைத்துக் கொள்ளலாம் என்று மேலிடம் கணக்குப்போடுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தெலுங்கு தேசம் உண்ணாவிரதம் இதற்கிடையே, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தெலுங்கானா அமைப்பதை எதிர்த்து, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேவினேனி உமாமகேஸ்வரராவ், சின்னம் ராமகோட்டையா, அக்கட்சியைச் சேர்ந்த விஜயவாடா நகர முன்னாள் மேயர் பஞ்சுமர்த்தி அனுராதா, அக்கட்சியின் மூத்த தலைவர் பி.உமாமகேஸ்வரராவ் ஆகியோர் நேற்று விஜயவாடாவில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- தனி மாநிலம் அமைக்கும் முடிவை சோனியா காந்தி திரும்பப் பெறுவதற்காக, இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி இருக்கிறோம். ஆந்திர மக்கள் ஒன்றாக இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால், ஆந்திராவை மூன்றாக பிரித்து, மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்-மந்திரிகளை பதவியில் அமர்த்த பிரதமர் திட்டமிடுகிறார். தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த ப.சிதம்பரமும், வீரப்ப மொய்லியும், சோனியா காந்திக்கு பிறந்தநாள் பரிசாக, ஆந்திரா பிரிவினையை அறிவித்துள்ளனர். அவர்கள், ஆறுகளில் ஆந்திராவுக்குரிய பங்கை தர மறுப்பதுடன், இந்த பிரிவினையின் மூலம் ஆந்திராவைப் பலவீனப்படுத்த சதி செய்கிறார்கள். ஆனால், என்ன விலை கொடுத்தாவது, பிரிவினையை தடுப்போம். இதற்காக உயிரையும் தியாகம் செய்வோம். பிரிவினையைத் தடுக்க, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவைச் சேர்ந்த மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், தெலுங்கானா விவகாரத்தில் தெலுங்குதேசம் கட்சியின் இரட்டை வேடத்தைக் கண்டித்து, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அக்கட்சி எம்.எல்.ஏ. ரமேஷ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகியதுடன், கட்சியில் இருந்தும் விலகினார். காங்கிரஸ் எம்.பி. உண்ணாவிரத மிரட்டல் இதற்கிடையே, விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. எல்.ராஜகோபாலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்கானா மாநிலம் அமைப்பதை ஆந்திர மக்கள் யாரும் விரும்பவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட விரும்பவில்லை. தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அத்தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு எதிராக, 225-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு அத்தீர்மானத்தை தோற்கடிப்பார்கள். அதன்பிறகு, ஆந்திர மக்களின் மனநிலையை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். இதுபற்றி முதல்-மந்திரி ரோசய்யாவை சந்தித்து வற்புறுத்துவேன். ஒருவேளை, தீர்மானத்தை கொண்டுவராவிட்டால், அதைக் கண்டித்து, நான் உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். பஸ் போக்குவரத்து பாதிப்பு இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, ஆந்திராவின் இதர பகுதிகளில் நடத்தப்பட்ட 48 மணி நேர பந்த், நேற்று முன்தினம் இரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இருப்பினும், நேற்றும் வன்முறை நீடித்தது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் ஆந்திர அரசு பஸ்கள் தாக்கப்படுவதால், அப்பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1,420 பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. பஸ்கள் சேதப்படுத்தப்பட்டதால், ரூ.14 லட்சம் இழப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுவதால், தமிழகத்தில் இருந்து அங்கு நேற்று 3-வது நாளாக பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திருப்பதி, சித்தூர் செல்லும் பஸ்கள், வேலூருடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். வெங்காயம், தக்காளி ஏற்றிய லாரிகளும் செல்ல முடியவில்லை. அதுபோல், ஆந்திராவில் இருந்து தமிழகம் வர நினைக்கும் மக்களும் வர முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மொட்டை அடித்தனர் ஆந்திராவை பிரிப்பதை எதிர்த்து, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நேற்று திருப்பதியில் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். திருமலை பாலாஜி கார்டனில் தர்ணா செய்ய முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். ஐதராபாத்தில் பிரபல டாக்டர்கள் ஒரு நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பிரஜா ராஜ்யம் கட்சியினர் ஐதராபாத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். திருப்பதியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகரராவின் உருவ பொம்மையை காங்கிரசார் எரித்தனர். திருப்பதி நகராட்சி அலுவலகம் முன்பு, அனைத்து கட்சியினரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல இடங்களில் சாலை மறியல் மற்றும் பேரணிகளும் நடத்தப்பட்டன. source:dailythanthi


-- 
www.thamilislam.co.cc
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails