Thursday, December 31, 2009

புலிகள் இடத்தில் புதிய படையா?

 

''இலங்கையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லாப் போராளிக் குழுக் களும் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டன. இனிமேல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் யாரும் ஈடுபட முடி யாது!'' - இது வடக்கே போர் முடிவடைந்ததும் நாட்டு மக்களுக்கு ராஜபக்ஷே அளித்த வெற்றி உரை!

ஆனால், புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு சந்தடியே இல்லாமல் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு, அதே விடுதலைப் போராட்டத்தைத் தொடரும் முடிவோடு ஆயுங்களை உயர்த்தி இலங்கை அரசை அதிர வைத்துள்ளது 'மக்கள் விடுதலை ராணுவம்'.

பிரபாகரனுக்குப் பிறகு புலிகள் அமைப்பின் எதிர்காலம் குறித்து பலவித சர்ச்சைகள் அரங்கேறும் நிலையில், இலங் கையின் சரித்திரப் போக்கை மறுபடி மாற்றி அமைக்கும் வலிவு கொண்டதா இந்த அமைப்பு என்று அவசர ஆராய்ச்சி தொடங்கியுள்ளது அங்கே!

'கோணேஸ்' என்னும் புனைபெயரைக் கொண்டவர்தான் இந்த புதிய இயக்கத்தின் தளபதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே, புலிகள் அமைப்பில் இருந்த கோணேஸ், 1983-ம் வருட வாக்கில் உத்தரப் பிரதேசக் காடுகளில் புலிகளுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டபோது, பயிற்சி பெற்றவர். பின்னாளில் புலிகள் அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அமைப்பிலிருந்து விலகி, தனியாகச் செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து கிழக்கில் அரசுக்கெதிரான போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட கோணேஸ், பிறகு சிறையிலிருந்து தப்பி ஐரோப்பிய நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார். அங்கிருந்து பாலஸ்தீனம் மற்றும் கியூபா சென்றவர் அங்கிருக்கும் போராளிக் குழுக்களிடம் சிறப்புப் பயிற்சியையும், கெரில்லா போர் முறையையும் கற்றுக்கொண்டு, தற்போது இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார்.

புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து, தனியாக இருந்து தன்னுடன் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட சிலரை இணைத்து, 10 பேர் கொண்ட செயற்குழுவை உருவாக்கி இருக்கிறார் கோணேஸ். இறுதிக்கட்டப் போரின்போது தப்பித்த விடுதலைப் புலிகளில் 300 பேர் இந்த இயக்கத்தில் தற்போது உறுப்பினர்களாக இருப்பதாகவும்... இது தவிர, வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த... 16 வயதிலிருந்து 20 வயதுக்கு உட்பட்ட 500 தமிழ் இளைஞர்களைத் தேர்ந் தெடுத்து அவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக கிழக்குப் பகுதியின் அடர்ந்த வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை ராணுவ உளவுப் பிரிவு குறிப்பு அனுப்பியுள்ளதாம். ராஜபக்ஷே மறுபடி தூக்கம் இழந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது!

கடந்த 2004-ல் புலிகள் அமைப்பிலிருந்து கேணல் கருணா தலைமையில் 6,000 புலிகள் பிரிந்தனர். தற்போது அவர்களில் பாதிப்பேர் கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசத்துரை பிள்ளையானிடம் இருக்க... மீதிப் பேரை கருணா கண்டுகொள்ளவில்லை. இவர்களில் பலரும் தற்போது என்ன செய்வதென்று திகைத்து நிற்கும் நிலையில் அவர்களையும் மக்கள் விடுதலை ராணுவத்தில் படிப்படியாக இணைத்து வருவதாகக் கூறியிருக்கிறார் கோணேஸ். அதோடு, முகாம்களில் இருக்கும் இரண்டரை லட்சம் தமிழர்களில் இருந்து 10,000 பேர் இயக்கத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கோணேஸ் தெரிவித்திருக்கிறார். தற்போது இயக்கத்தைச் சேர்ந்த 50 பேர் பாலஸ்தீன விடுதலை இயக்கம், கியூபா கெரில்லா குழுக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள மாவோயிஸ்ட்களிடம் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கோணேஸ், ''இலங்கையில் இன்னும் யுத்தம் முடியவில்லை...'' என அழுத்தமாக அறிவித்திருக்கிறார்.

கடந்த வாரத்தில் லண்டனில் இருந்து வெளிவரும் 'த டைம்ஸ்' பத்திரிகையின் நிருபரை கிழக்குப் பகுதியின் ஒரு மறைவிடத்தில் சந்தித்திருக்கிறார் கோணேஸ்.

''மே மாதத்தில் இலங்கையில் புலிகள் வீழ்ந்த பிறகு தமிழர்களுக்கான எந்தவிதத் தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் மக்கள் விடுதலை ராணுவத்தைக் கட்டியெழுப்பி யுத்த களத்தில் இறங்குவதற்கான ஆரம்ப வேலைகளில் இறங்கியிருக்கிறோம். தனி ஈழம் என்ற வடகிழக்கு சோஷலிச உரிமையே எங்களது குறிக்கோளாக இருக்கும். இதற்கு தென்னிலங்கை சம்மதிக்காத பட்சத்தில், ராணுவம் மற்றும் அரசு தரப்புகளின் மீது எங்களது ஆயுதத் தாக்குதல்கள் இருக்கும். புலிகள் அமைப்பு கடைப்பிடித்த யுத்த தந்திரங்களை நாங்கள் எந்தக் கட்டத்திலும் கடைப்பிடிக்க மாட்டோம். அதே நேரத்தில் புலிகளைவிட பல மடங்கு அழிவுகளை இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் உண்டாக்குவோம்!'' என டைம்ஸ் பத்திரிகையிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் கோணேஸ்.

தற்போது இந்த இயக்கத்தின் வரவு, ஈழத் தமிழ் ஆர்வலர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. ''விடுதலைப் புலிகளது வீழ்ச்சியின்போது எஞ்சி இருந்த சுமார் 4,000-க்கும் அதிகமான பயிற்சி பெற்ற போராளிகளை கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைத்து விட்டார் பிரபாகரன். தற்போது, எந்தப் புகலிடமும் இல்லாமல் காட்டுப்பகுதியில் இருக்கும் அவர்கள், அரசாங் கத்திடமும் சரணடைய முடியாமல் சாப்பாட்டுக்கே திண்டாடி வருகின்றனர். சரணடைந்தாலும் இவர்களை ராணுவம் கொன்று விடும். இவர்களே நினைத்தாலும்கூட ஆயுதங்களைக் கீழே போட முடியாது. இவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கேணல் ராமு ராணுவத்திடம் சிக்கித் தற்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்தச் சூழலில்தான் பழைய புலித் தளபதியாக இருந்த கோணேஸ் இவ்வாறு அறிவித்திருக்கிறார். கடந்த வாரத்தில் நடந்த இந்த இயக்கத்தின் முதல் சந்திப்புக் கூட்டத்தில் ஜனவரி முதல் வாரத்திலிருந்து தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வருகிறது. மரபு வழி ராணுவப் போராக இல்லாமல் கெரில்லா தாக்குதல் களையே தொடுப்பார்களாம். முதல் கட்டமாக, தமிழ் துரோகத் தலைவர்களான கருணா, டக்ளஸ் தேவானந்தா, சரத் ஃபொன்சேகா என நீளும் இந்தப் பட்டியலில் நிறைய தமிழ் மற்றும் சிங்களத் தலைவர்கள் பெயர்களும் இருக்கிறதாம். மொத்தத்தில் இந்த இயக்கத்தின் வரவு இலங்கையில் இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ?'' எனப் பேசுகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

'அரசாங்கம் போராளிக் குழுக்களை முற்றிலும் ஒழித்து விட்டதாகக் கூறி வந்த நிலையில், தற்போது மக்கள் விடுதலை ராணுவம் என்ற பெயரில் மீண்டும் போராளிக் குழுக்கள் கிளம்பியிருக்கின்றன!' என இந்த விஷயத்தை வைத்து அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகின்றன எதிர்க்கட்சிகள். உடனே அவசர அவசரமாக மீடியாக்களை சந்தித்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கேகெலிய ரக்புக்வெல, ''கிழக்கில் மக்கள் விடுதலை ராணுவம் உதயமானது அரசுக்கும் தெரியும். விரைவில் அவர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!'' என பேசியிருக்கிறார். இதற்கிடையில், ''எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் ஃபொன்சேகா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை போட்டுத் தள்ளுவதற்காக அரசாங்கமே உருவாக்கியுள்ள அமைப்புதான் மக்கள் விடுதலை ராணுவம்'' என கொழும்பில் கருத்து தெரிவித்து பல புருவங்களை உயரச் செய்துள்ளார் தமிழ் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன். ''விடுதலை வேட்கையைத் தொடரும் ஒரு அமைப்பை கூலிப்படை ரேஞ்சுக்கு கொச்சைப் படுத்துவதா?'' என்று இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

புலிகளின் பணம், ராஜபக்ஷேவின் வெற்றி!

இலங்கை பொன்னம்பல ஆனேஸ்வரர் கோயிலில் தொடங்கி முள்ளிவாய்க்கால், வாகரை, தோணி தாண்டமடுவில் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலிகளின் டன் கணக்கிலான தங்கம் மற்றும் பணத்தை ராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருவதாக ஜூ.வி. ஏற்கெனவே சொல்லியிருந்தது. இன்னொரு பக்கம் கே.பி-யிடம் நடத்திய விசாரணையில் புலிகளுக்கு சொந்தமான ஐந்து கப்பல்கள், ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் இருக்கும் 183 பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட சொத்துகள், உலகம் முழுவதும் கே.பி-க்கு இருக்கும் 147 வங்கிக் கணக்குகள் தொடர்பாகவும் வெளியில் தெரியாமல் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது அரசுத் தரப்பு. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரம சிங்கே, ''2005-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற ராஜபக்ஷே, இம்முறை தேர்தலில் விடுதலைப் புலிகளிட மிருந்து கைப்பற்றப்பட்ட பெரும் பணத்தைக் கொண்டு வெற்றி பெற முயற்சிக்கிறார். இவரது விளையாட்டுக்கு நாங்கள் பயப்படப் போவதில்லை. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும். அது தொடர்பான முறையான கணக்குகளும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்!'' என மீடியாக்களிடம் கொதித் திருக்கிறார்.

அதோடு, இந்த விவகாரம் அடங்காமல் உஷ்ணத்தைக் கிளப்ப... நாடாளுமன்றத்திலேயே விளக்கம் அளித்தார் பிரதமர் ரட்சணசிறி விக்கிரமநாயக்க. ''2008 மே 18-ம் தேதிக்கு பிறகு புலிகளிடமிருந்து ஏராளமான சொத்து கள், தங்கம், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது உண்மைதான். தொடர்ந்து அது பற்றிய விசாரணைகள் நடந்து வருகிறது. கே.பி-யின் வெளிநாட்டு சொத்துகள் தொடர்பாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. 3 கப்பல்கள் நாட்டை நோக்கி இழுத்து வரப்படுகின்றன. சில கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. விரைவில் எல்லா விவரங்களும் சபைக்கு தெரிவிக்கப்படும். இந்த பணம் மற்றும் சொத்துகள், எமது மக்களின் சொத்துகள். அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்!'' என விளக்க மளித்திருக்கிறார். இருந்தும், ''கிட்டத்தட்ட 2,000 கோடி வரை புலிகளின் பணத்தை ராஜபக்ஷே சகோதரர்கள் தனதாக்கிக் கொண்டுள்ளனர். அதை வைத்துதான் தாராளமாக அதிபர் தேர்தலை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்!'' என தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன எதிர்க் கட்சிகள்.

சவால் ராஜபக்ஷே, தயார் ஃபொன்சேகா!

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வலிமையாக நிற்கும் ஃபொன்சேகாவை பலமிழக்கச் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ராஜபக்ஷே தரப்பு. முதல் கட்டமாக யுத்த காலத்தில் ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் கூறி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. அதிபரின் நண்பரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, ''யுத்தம் முடிந்த பிறகும் நாட்டில் அமைதி வருவதை ஃபொன்சேகா விரும்பவில்லை. அதனால்தான் யுத்தம் முடிந்த பிறகும் செக்கோஸ்லேவக்கியாவில் இருந்து 30 ஆயிரம் பல்குழல் பீரங்கி ராக்கெட்டுகளை ராணுவத்துக்காக ஆர்டர் செய்திருந்தார். இந்த ஆயுதங்களும் அவரது மருமகன் கம்பெனியின் மூலமாக கப்பலில் வந்தபோது பாதுகாப்பு செயலர் அதைத் திருப்பி அனுப்பி விட்டார். அதோடு, சீனாவிலிருந்தும் பெருமளவு ஆயுதங்களுடன் ஒரு யுத்தக் கப்பல் இலங்கைக்கு வந்தது. இதையும் கோத்தபய திருப்பி அனுப்பி விட்டார். இதன் பிறகு ஏற்கெனவே நடந்த சில ஆயுதப் பரிவர்த்தனைகளைப் பார்த்தபோது பெரிய அளவில் ஊழல் நடந்தது தெரிய வந்தது. தற்போது இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அதிபர்!'' என நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாகப் பேசியிருக்கிறார்.

இதையே இன்னும் வெளிப்படையாகச் சொன்ன அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, ''இதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதால் ஃபொன்சேகாவை கைது செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது!'' என அவரை மிரட்டியிருக்கிறார். ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாத ஃபொன்சேகா, ''ராஜபக்ஷே சகோதரர்கள் தேவையில்லாத பொய் பரப்புரையில் ஈடுபடுகிறார்கள். பதிலுக்கு நானும் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த சில விவரங்களை பற்றிப் பேச வேண்டியிருக்கும். அந்த விவரங்கள் வெளியே வந்தாலும் அவர்களின் நிலை என்னவென்பது அவர்களுக்கே தெரியும்!'' என பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் அமெரிக்க விசிட் சென்றி ருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஃபொன்சேகாவுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி யிருக்கிறார் அதிபர் ஒபாமா. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் அவசர அழைப்பின் பேரில் கடந்த 3-ம் தேதி டெல்லி வந்த ஃபொன்சேகா, பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, தான் அதிபராகும் பட்சத்தில் சீனாவுடனான இலங்கையின் தொடர்பை முற்றிலும் உதறுவதாக வாக்களித்திருக்கிறாராம். தொடர்ந்து நாடு திரும்பிய ஃபொன்சேகா இனி இந்தியாவின் ஆதரவு எனக்குத்தான் என கூட்டணியினரிடம் பேசி வருகிறாராம்.

இதற்கிடையில் திடீர் திருப்பமாக, இலங்கையில் உள்ள ஐ.தே. கட்சியின் முக்கியஸ்தரும், மத்திய மாகாண அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்க, எதிர்க்கட்சியிலிருந்து விலகி ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு செல்வதாக அறிவித்திருக்கிறார். கடந்த வாரத்தில் ஒரு நாள் இவரது வீட்டுக்கு திடீரென ஹெலிகாப்டரில் கிளம்பிப் போன ராஜபக்ஷே, தேர்தல் முடிந்து, தான் அதிபரானதும் இவரை பிரதமராக்குவதாக உறுதியளித்து மசிய வைத்தாராம். இதன் தொடர்ச்சியாக எஸ்.பி.திசாநாயக்க ஆளுங்கட்சிக்குத் தாவியதில் ரணிலுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.

தமிழ் கட்சிகளின் நிலை!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப். (பத்மநாபா அணி), ரி.எம்.வி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய தமிழ் கட்சிகள் அதிபர் ராஜபக்ஷேவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டன. மலையகத்தைச் சேர்ந்த மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி மட்டும் ஃபொன்சேகாவுக்கு ஆதரவு தந்திருக்கிறது. ஆனால், 22 எம்.பி-க்களை வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் ஆசி பெற்ற, தமிழ் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது வரை தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பிடம் இரண்டு தரப்புமே ஆதரவைக் கோரி வரும் நிலையில்... கடந்த வாரம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருவரையும் சந்தித்தார். அதன் பின் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்த சம்பந்தன், ''ராஜபக்ஷே தமிழர்களுக்கு ஆதரவான எந்த உறுதி மொழியும் வழங்க மறுக்கிறார், ஃபொன்சேகா தமிழர் களுக்குச் செய்வதாக நிறைய உறுதி மொழிகளைக் கூறுகிறார். அவற்றை நிறைவேற்றுவாரா என்பது சந்தேகம்தான்!'' என சில விஷயங்களை தமிழ் எம்.பி-க்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், கூட்டமைப்பிலேயே சிவநாதன் கிஷோர் போன்ற தமிழ் எம்.பி-க்கள் சிலர் ராஜபக்ஷேவுக்கு ஆதர வளிக்க வேண்டும் என வெளிப்படையாகப் போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள்.

பிறக்கப் போகும் புத்தாண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எப்படி அமையுமோ... ஆனால், சிங்கள தலைவர்களைப் பொறுத்தவரை தலைவலி வருடமாகவே அமையும் போல..!

- மு. தாமரைக்கண்ணன்   
 

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails