Wednesday, December 23, 2009

சச்சின்-கார்த்திக் "சதம்' ரகசியம்! * கடைசி கட்டத்தில் நடந்தது என்ன?

 

 

புதுடில்லி: கட்டாக் போட்டியில் சச்சின் சதம் அடிக்கும் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் அநியாயமாக பறித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடைசி கட்டத்தில் நிலைமையை புரிந்து கொள்ளாமல் ஆடிய கார்த்திக் ஒரு சிக்சர் அடிக்க, சச்சின் 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 


இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த 3வது போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது.
இப்போட்டியின் 42வது ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. அப்போது சச்சின் சதத்தை எட்ட 10 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இதனை உணர்ந்து சச்சினுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவில்லை தினேஷ் கார்த்திக். 5வது பந்தில் வீணாக ஒரு சிக்சர் அடித்தார். 43வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு ரன் எடுத்த சச்சின் 96 ரன்களை எட்டினார். நான்காவது பந்தில் தினேஷ் கார்த்திக் "வைடாக' வந்த பந்தை தட்டி விட 5 ரன் எடுக்கப்பட, சச்சின் 46வது சதத்தை எட்ட முடியவில்லை. 96 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.


சுமார் 7 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், தனது சதத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று சச்சின் சொன்னதால் தான், கார்த்திக் அதிரடியாக ஆடினாரா என்பது தெரியவில்லை. இதற்கு முன் 17 முறை 90களில் அவுட்டாகியுள்ள சச்சின் நிச்சயமாக சதம் அடித்திருப்பார் என்றும் உறுதியாக கூற முடியாது. இப்பிரச்னை குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் கூறியது:


சையது கிர்மானி: சச்சின் 90 ரன்கள் எடுத்திருந்த போது, கார்த்திக் சிக்சர் அடித்தார். அப்போது கார்த்திக் அருகில் சென்ற சச்சின், ஏதோ கூறினார். சரி, சரி என தலையசைத்து வந்தார் கார்த்திக். அதன் பின் ஒன்று, இரண்டு ரன்களாகத்தான் எடுக்கப்பட்டன. உண்மையில் சச்சின், கார்த்திக்கிடம் என்ன கூறினார் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


 பாபு நட்கர்னி: சச்சின் தனது 46வது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பை, கார்த்திக் ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிக எதிர்பார்ப்பில் இருந்த அவர் சிக்சர் அடிக்கிறார். அந்தநேரத்தில் சிக்சருக்கு என்ன தேவை வந்தது. கார்த்திக் இன்னும் அனுபவம் அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. 
சந்து போர்டே: சச்சினுக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் கார்த்திக் ஒருவித பதட்டத்துடன் இருந்தார் என்பதே உண்மை. அனுபவமின்மை மற்றும் சிந்தனையில்லாமல் செயல்பட்ட கார்த்திக், சச்சின் சதத்தை வீணடித்து விட்டார்.


கவாஸ்கர்: சச்சினின் வயது அதிகமாகிக்கொண்டு வரும் நிலையில் அவர் சதத்தை தவற விட்டிருக்கக் கூடாது. அவர் 80 ரன்னை தாண்டியவுடன் "பேட்டிங் பவர் பிளே'யை எடுத்து இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சற்று அதிக போராட்டத்தை வெளிப்படுத்தி, சச்சின் விரைவில் சதம் கடந்திருக்கலாம். 


சேட்டன் சவுகான்: நிறைய ஓவர்கள் மீதமிருந்த நிலையில் சச்சினுக்கு சதம் அடிக்கும் வாய்ப்பை கார்த்திக் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் கார்த்திக் செயலை விமர்சிப்பது சரியல்ல. ஏனெனில் அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்வார்கள். எல்லா வீரர்களும் தனிப்பட்ட சாதனையை கணக்கில் கொள்ளாமல், வெற்றி பெறுவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் விளையாடுவார்கள். கார்த்திக்கும் அதைத்தான் செய்தார்.
 


அப்பாஸ் அலி பெய்க்: சச்சின் எப்போதும் தனது சொந்த சாதனைக்காக விளையாடுகிறார் என பலதரப்பட்ட மக்களும் கூறிவருகிறார்கள். சதத்தை நெருங்கிய சச்சின், கார்த்திக்கிடம் தனக்கு பேட்டிங் வாய்ப்பு தருமாறு கேட்கவில்லை. சுயநலமில்லாமல் தனது அணிக்காகத்தான் விளையாடுகிறார் என்பது சச்சினின் இந்தச் செயல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
 


source:dinamalar

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails