ஆனால், தமிழக நிலைமையை சீர்தூக்கி பார்த்து ஆராய்ந்தால், ஒரு உண்மை மட்டும் நன்றாக புரியும்... மாநிலத்தை ஆண்டவர்களும், ஆள்பவர்களும், தங்களது வீரவசனங்களிலும், வாய்சவடால்களிலும், என்ன தான் பேசினாலும், தலைநகர் சென்னையிலும், சென்னையை சுற்றியும் தான், தொழில்களையும், புதிய முதலீடுகளையும் உருவாக்க வழி செய்கின்றனர். இவை அனைத்தும் சாதகமாக இருந்தும், சென்னையை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுப்பதற்கு ஒரே காரணம், மாநிலத்தின் தலைமைச் செயலகமும், மற்ற அரசுத்துறை தலைமை அலுவலகங்களும், சென்னையில் அமைந்திருப்பது தான்.
முன்பு எம்.ஜி.ஆர்., தொலை நோக்கு திட்டத்தோடு, திருச்சியை தலைநகராக்க முயற்சி செய்தார். ஆனால், எங்கே அவருக்கு பெரும்புகழ் சேர்ந்துவிடுமோ என்ற கேவலமான அரசியலால், அதற்கு முட்டுக் கட்டை போட்டுவிட்டனர். பின் அந்தளவு இல்லை என்றாலும், குறைந்தபட்சம் தலைமைச் செயலகத்தை, தென் சென்னையில் அமைக்க ஜெயலலிதா முயற்சி செய்தார். அதுவும், அரசியல் காரணங்களால் எதிர்க்கப்பட்டு முடக்கப்பட்டுவிட்டது. இப்போது, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இது ஆள்பவர்களுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும், அதிக இடப்புழக்கத்துடன், வசதியான அலுவலகமாக இருக்குமேயன்றி, ஏற்கனவே திக்கிதிணறி சிரமப்படும் சென்னை மக்களுக்கு, எந்த விடிவும் ஏற்படுத்தப் போவதில்லை. அத்துடன், தற்போதுள்ள போக்குவரத்து வசதிகளில், நினைத்த மாத்திரத்தில், எங்கும் சென்றடைந்து விடலாம். தற்சமயம், நீண்டகால தொலைநோக்கு திட்டத்தோடு, தமிழக தலைநகரை, திருச்சிக்கோ, மதுரைக்கோ மாற்ற ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இதில் குறுகிய அரசியல் நலன்களும், சுய நலன்களும் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்; மக்கள் நலன் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும்.
இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பும், ஆனால், அது சென்னையில் செட்டில் ஆகிவிட்ட அரசியல்வாதிகளிடமிருந்தும், முதலீடு செய்து கோடிகளை பார்த்து கொண்டிருக்கும் பணக்காரர்களிடமிருந்தும் தான். அப்படி தலைநகர் இடம் மாறும்போது, சாதாரண மக்கள் சந்தோஷமே அடைவர். ஒரு கட்சித் தலைவர், தென் பகுதிக்கு வருகை தருவது அபூர்வத்திலும், அபூர்வம் என்றுள்ள தற்போதைய நிலைமையும் மாறிவிடும். மத்திய அமைச்சர்கள் , மாநில அமைச்சர்கள் என்றும், ஆளும் பிரதிநிதிகளின் கடைக்கண் பார்வை, தென் மாவட்டங்களின் மீது படிந்து, அவை வளம்பெற வாய்ப்பு கிடைக்கும். இதற்கும் மேல், தலைநகர் தென் தமிழகத்தில் அமைவதால், சென்னையின் பெருமை எந்த விதத்திலும் குறைந்துவிடாது. அது மேலும், சுத்தமான, சுகாதாரமான முறையில் விரிவடைய வழி பிறக்கும். தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாடும், சுற்றுச்சூழல் கேடும் குறைந்து, நகரின் பெருமை மேலோங்கும். இதையெல்லாம் விட, தற்சமயம் பொதுமக்கள் அனுபவித்து வரும் இட நெருக்கடி குறைந்து, நகருக்கு ஒரு நல்ல தோற்றம் ஏற்படும்.
இதற்கு அருமையான உதாரணம், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், நெருக்கடியை சந்தித்தபோது, அதன் முன்னாள் பிரதமர் டத்தோ மாகாதீர், கோலாலம்பூரின் தெற்கே அமைந்துள்ள புத்ராஜெயாவை, புதிய நிர்வாக தலைநகராக உருவாக்கினார்; அதனால், கோலாலம்பூரின் கலாசார பெருமை, எந்த விதத்திலும் குறையவில்லை. இதைப் போல், தமிழக தலைநகரை மாற்றும்பட்சத்தில், தென் பகுதி மக்கள், சிறிய வேலைகளுக்கும், அனுமதிகளுக்கும், நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலைமை மாறும். புதிய முதலீட்டாளர்களும், தென் பகுதியை நோக்கி படையெடுப்பர். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி சீராகவும், அனைவரும் பலன்பெறும் வகையிலும் அமைந்திடும். நம்மை ஆள்பவர்களும், ஆளப்போகிறவர்களும், ஆள நினைப்பவர்களும், ஆள ஆசைப்பட்டு அரசியலில் குதிப்பவர்களும், இது குறித்து சிந்திப்பரா?
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment