லண்டன், டிச.20: போரினால் முகாம்களில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழ் பெண்கள் பயங்கரமான கொடுமையை அனுபவித்தனர் என்று மனித உரிமை அமைப்பு ஒன்றின் பிரிட்டன் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிலும், முகாம்களில் இளம்பெண்களை ராணுவ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமைப் படுத்தியதே வேதனையான விஷயம் என்றும் அவர் கூறினார்.
முகாம்களில் இருப்பவர்களுக்கு போதுமான உணவு அளிக்கப்படுவதில்லை. இதனால் பசியால் துடிக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ராணுவ அதிகாரிகள், தமிழ்ப் பெண்களுக்கு உணவு தருவதாகவும், பணம் தருவதாகவும் கூறி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்பதே பரிதாபம் என்றார் அந்த மருத்துவர்.
இலங்கையில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்திருந்த முகாம் ஒன்றை பார்வையிட்டேன். அப்போது என் கண் முன் அரங்கேறிய கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த முகாமில் ஈழத்தமிழர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்பட்டனர். முகாம்களில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முகாமின் முள்வேலிக்கு அருகில் நெருங்கவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது.
முகாம்களில் உள்ளவர்களை பார்வையாளர்கள் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தே பார்க்க முடிந்தது. அதுவும் சிறிது நேரமே பார்க்க முடிந்தது. உடனையே ராணுவ அதிகாரிகள் வந்து ஈழத்தமிழர்களை முகாமுக்குள் செல்லுமாறு எச்சரித்தார்கள். அப்போது பெண்களின் தேகத்தை தொட்டு அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். அதை பார்க்கவே கண்கூசியது. வேதனையாக இருந்தது.
ராணுவ அதிகாரிகள் அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாய் தமிழ்ப் பெண்கள் நடந்து சென்றனர். அப்படி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு எதுவும் நிகழலாம். அதை உணர்ந்துதான் அவர்கள் கொடுமையை சகித்துக்கொண்டு, தங்களது நிலைமையை நினைத்து மெüனமாக சென்றனர்.
மற்றொரு முகாம் ஒன்றில் போருக்குப் பயந்து தஞ்சம் அடைந்த வாணி குமார் (25) என்ற பெண்ணை இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 மாதங்கள் அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளனர். சில நேரங்களில் அந்த பெண்ணை நீண்ட நேரம் வெயிலிலும் நிறுத்தி வைத்து கொடுமை செய்துள்ளனர். இப்படி இலங்கை முகாம்களில் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான கொடுமையை சொல்லி மாளாது என்றார் அந்த மருத்துவர்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment