ஐ.நா., மற்றும் மனித உரிமை அமைப்புகள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச அளவில் கடுமையான சட்டங்கள் இயற்றி, அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறி வருகிறோம். ஆனால், பல்வேறு நாடுகளில் வீட்டு வேலைகள் செய்வோர், தங்கள் எஜமானர்களால் அடிமைகளைப் போல் நடத்தப்படுகின்றனர். எனவே, அடிமை முறை ஒழிக்கப் பட்டு விட்டதாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. குறிப்பாக, வீடுகளில் வேலை செய்யும் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஐ.நா., சிறப்பு அதிகாரி குல்னரா ஷாகினியான் கூறியதாவது:வீட்டு வேலை செய்வோர், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அங்கு அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. மனித நேயத் துக்கு எதிரான செயல்கள் அரங்கேற்றப் படுகின்றன.இதுபோன்ற அடிமை முறை பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, குழந்தை தொழிலாளர்கள், தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு, எஜமானர்களிடம் நிரந்தரமாக வேலை பார்க்கும் அவலம் உள்ளது.
இதனால், அவர்கள் எந்த ஒரு சிறிய விஷயத்திற்கும் எஜமானர்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.வீடுகளில் வேலை பார்க்கும் ஆண்களை அடிப்பது, வீட்டை விட்டு வெளியேற முடியாமல், வீட்டுக்குள்ளேயே தங்க வைப்பது, மற்றவர்களிடம் பேசுவதற்கு அனுமதி மறுப்பது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள், உடல் ரீதியான பாதிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். குடும்ப சூழ்நிலை, கடன், வேலை போய்விடுமோ என்ற பயம் போன்ற காரணங்களால், இவர்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை வெளியில் கூறுவது இல்லை.ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு சென்று, வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தான், அதிகபட்ச கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
மொழி தெரியாதது, வெளிநாட்டு சட்ட திட்டங்கள் தெரியாதது போன்றவற்றால் இவர்கள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, தொழிலாளர்களின் பாஸ்போர்ட்களை, எஜமானர்கள் கைப்பற்றி வைத்துக் கொள்வதால், அவர்களால் நாடு திரும்ப முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.இவ்வாறு குல்னரா கூறினார்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment