இது குறித்து நக்கீரன் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை:-
இரண்டு ஆண்டுகாலம் பதவியில் நீடிக்கச் சட்டப்படி வாய்ப்பிருந்தும் ஆட்சித்தலைவர் மகிந்தா ராசபச்ச ஆட்சித்தலைவருக்கான தேர்தலை முன்கூட்டி நடத்த முடிவு செய்துள்ளார். தேர்தலுக்கான வேட்பு மனு இம் மாதம் 16 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் எதிர்வரும் சனவரி 26 ல் நடைபெற இருக்கிறது.
ஆட்சித்தலைவர் தேர்தலை இரண்டு ஆண்டுகாலம் கழித்து நடத்தாமல் இப்போது ராசபக்ச நடத்துவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை வாக்குகளாக மாற்றி அதனை அறுவடை செய்யலாம் என மகிந்தா ராசபக்ச நினைக்கிறார்.
விடுதலைப் புலிகளைப் போரில் அழித்தொழித்த காரணத்தால் ராசபக்ச சிங்கள மக்களிடம் தான் ஒரு நவீன துட்ட கைமுனு என்ற மிதப்போடு வலம் வருகிறார். அரச சார்பு ஊடகங்களும் அரசு கட்டுப்பாடு ஊடகங்களும் ராசபக்சவை அப்படித்தான் வருணிக்கின்றன. அவர்தான் நாட்டின் அரசன் என்றுகூட சில ஊடகங்கள் புகழாரம் சூட்டி மகிழ்கின்றன. மூன்று சகாப்தங்களுக்கும் மேலான "பயங்கரவாதத்தை" முறியடித்த சிங்கள – பெளத்த வீரர் என்ற முறையில் மகிந்த ராசபக்ச மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் தேர்தலில் வெற்றிவாகை சூட வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணம் நீங்கலாக சிங்கள மாகாணங்களில் மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரு வெற்றி பெற்றிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என ஒரு காலத்தில் கருதப்பட்ட மேல்மாகாணத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ராசபக்சவின் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த வெற்றி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் வருகையால் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போயிருக்கிறது. ராசபக்சவும் சரத் பொன்சேகாவும் ஆளை ஆள் சரமாரியாக விமர்ச்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
"நேற்றைய கதாநாயகர்கள் இன்றைய துரோகிகளாக மாறுகிறார்கள்" ("yesterday's heroes turning today's traitors") என சரத் பொன்சேகாவை ராசபக்ச சாடியுள்ளார். ஒரு இராணுவப் புரட்சி மூலம் தனது ஆட்சியைக் கவிழ்க்க பொன்சேகா திட்டம் தீட்டினார் என்று ராசபச்ச குற்றம் சாட்டினார். இராணுவப் புரட்சியா? அப்படியொன்றும் இல்லை, இது வெறும் புரளி என்றார் பொன்சேகா.
சரத் பொன்சேகா தான் ஒருபோதும் தோல்வியைக் கண்டிராத ஒரு இராணுவ தளபதி என்று மார்தட்டுகிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தன்னை உலகிலேயே சிறந்த இராணுவ தளபதி என்று குறிப்பிட்டிருந்ததாகவும் பொன்சேகா கூறுகிறார். "இல்லை அவர் இதற்கு முன்னர் வி.புலிகளுக்கு எதிரான போரில் பல களமுனைகளில் தோல்வி கண்டவர்" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராசபக்ச ஏளனம் செய்கிறார். முகமாலைப் போர்முனையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மூன்று முறை படையெடுத்து மூன்று முறையும் தோல்வி கண்டவர் என்றும், 500 சிங்கள இராணுவத்தினரைப் பலி கொடுத்தவர் என்றும் அவர் ஒரு இராணுவ மேதாவி என்றோ யுத்த கதாநாயகன் என்றோ உரிமை கோர முடியாது என்று கோத்தபாய ராசபக்ச கூறுகிறார். ஆட்சித்தலைவி சந்திரிகா குமாரதுங்காவுக்கு 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த 40,000 சிங்கள இராணுவத்தினரை திருப்பி எடுக்குமாறு பரிந்துரை செய்தவர்களில் பொன்சேகாவும் ஒருவர் என்ற குற்றசாட்டும் பொன்சேகா மீது வீசப்படுகிறது. இப்படி மாறி மாறி ராசபக்சவும் பொன்சேகாவும் ஆளுக்கு ஆள் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.
மகிந்த ராபக்சவைப் பொறுத்தளவில் தன்பக்கம் நிற்காத அனைவருமே துரோகிகள் என்பது அவரது சிந்தனையாகும்.
போர்க்காலத்தில் தோளோடு தோள் நின்று போர்க்கள வெற்றியை வெடிகொளுத்தி நாடு முழுதும் பறையறைந்து கொண்டாடிய இந்த இரண்டு "போர்க் கதாநாயகர்" களும் எப்படி பரம எதிரிகளாக மாறினார்கள்? எல்லாம் போர்க்கள வெற்றிக்கு யார் காரணம்? அந்தப் பெருமை யாருக்கு உரியது? என்ற சண்டைதான்.
போர் வெற்றிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவா அல்லது அரசியல் தலைவர் மகிந்தா ராசபக்சவா என்பதில்தான் சண்டை! இந்தச் சண்டை குழாயடிச் சண்டையாக இன்று மாறியிருக்கிறது. அது கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கிறது! எது எப்படியிருப்பினும் மகிந்த ராசபக்ச சரி, சரத் பொன்சேகா சரி இருவருமே தமிழ்மக்களைப் பொறுத்தளவில் கொலைகாரர்களே! முன்னவர் வன்னி மக்களை கொல்லச் சொன்னார், பின்னவர் அவர்களைக் கொன்று முடித்தார்.
போர் முடிந்த பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சரத் பொன்சேகா வெளிப்படையாகவே பயமுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் தமிழ்மக்கள் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தவரும் இருந்து வருபவருமான மகிந்த ராசபக்சவுக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. எனவே அவருக்கு எதிராக தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் இருவித கருத்துக்கு இடமில்லை. அப்படியென்றால் தமிழ்மக்கள் அடுத்து யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் முன்னுள்ள தேர்வு என்ன? (1) இரண்டும் பிசாசுகள் அல்லது பாம்புகள் அல்லது கொள்ளிக் கட்டைகள் இதில் நல்லது கெட்டது என்ற ஆராயாமல் தேர்தலைப் புறக்கணிப்பது.
(2) தமிழ்மக்களின் முக்கிய எதிரியான ராசபக்சவை வீழ்த்த பொன்சேகாவுக்கு வாக்களிப்பது. (3) தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தேர்தலில் போட்டியிட வைப்பது.
(4) இரா.சம்பந்தனை ஆதரித்து வாக்களிக்கும் தமிழ் வாக்காளர்கள் விருப்பு வாக்கை ராசபக்ச இரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவதைத் தடுக்கும் பொருட்டு பொன்சேகாவுக்கு அளிப்பது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சம்பந்தனை தேர்தலில் போட்டியிட நிறுத்துவதா இல்லையா என்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. முடிவு அறிவிக்கப்படவில்லை.
தேர்தலில் மகிந்த ராசபக்ச 50 விழுக்காட்டுக்கு மேலான வாக்குகளைப் பெற்றால் தமிழ்மக்கள் பொன்சேகாவுக்குப் போட்டாலும் சரி சம்பந்தனுக்குப் போராட்டாலும் சரி தேர்தல் முடிவில் மாற்றம் இருக்காது. தேர்தலில் ராசபக்சவும் பொன்சேகாவும் 50 விழுக்காட்டுக்குக் குறைவான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே சம்பந்தனுக்குப் போட்ட வாக்குகள் முதல் சுற்றில் பொன்சாகாவின் வெற்றியைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
இந்தத் தேர்தல் 2008 இல் எடுத்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,088,500 ஆகும். இதில் இன்று குறைந்த பட்ச தமிழ் வாக்காளர்களது (வடகிழக்கு, மலையகம், மேல்மாகாணம் உட்பட முழு இலங்கையிலும்) விழுக்காடு 15 என எடுத்துக்கொள்ளலாம். (1981 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணிப்பின் படி இலங்கைத் தமிழர் 12.71 மலையகத்தமிழர் 5.51 (1971 - 9.26) மொத்தம் 18.22 விழுக்காடு).
மொத்தம் 14 மில்லியன் வாக்குகளில் 70 விழுக்காட்டினரே தேர்தலில் கலந்து கொள்வார்கள் என்று எடுத்துக் கொண்டால் 9.8 மில்லியன் வாக்காளர்களே (2005 - 9,717,039) தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 15 விழுக்காடு வாக்குகளின் தொகை 1.47 மில்லியன் (14.7 இலட்சம்) ஆகும். தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமையலாம் என ஒரு எதிர்வு கூறலாம்.
மகிந்த ராசபக்ச - 47 விழுக்காடு
சரத் பொன்சேகா - 45 விழுக்காடு
இரா. சம்பந்தன் - 7 விழுக்காடு
மற்றவர்கள் - 1 விழுக்காடு இப்படியான முடிவு இரா. சம்பந்தனுக்கு போட்ட வாக்குகள் பொன்சேகாவின் வெற்றியைப் பாதித்து விட்டது என்பது சரியாகி விடும். சம்பந்தன் கேட்காது இருந்திருந்தால் பொன்சேகா 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றிருப்பார் என்று எண்ணத் தோன்றும். ஆனால் கதை இதோடு முடிந்து விடாது. எந்த வேட்பாளருக்கும் 50 + விழுக்காடு வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் வெற்றி தோல்வி முதல் இரண்டு வேட்பாளருக்கும் கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையே முடிவு செய்யும். அதாவது தேர்தலில் ஒருவர் இரண்டு வாக்குகளைப் போடமுடியும். இரா. சம்பந்தருக்குப் போட்ட 7 விழுக்காடு (மொத்த தமிழ்வாக்களர்களது வாக்குகளில் பாதி) வாக்காளர் தங்களது விருப்பு வாக்குகளை பொன்சேகாவுக்கு போட்டிருந்தால் அவர் வெற்றிபெறுவார். ஆனால் இதிலும் ஒரு சிக்கல். சிங்கள வாக்காளர்களது விருப்பு வாக்குகள் யாருக்கு அதிகம் என்பதில் இருந்தே இறுதி வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும். இரா.சம்பந்தனை வேட்பாளராக நிறுத்துவதால் தமிழர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
(1) தமிழ்மக்கள் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட இனம் என்பதையம் அவர்களது அரசியல் வேட்கை வேறு என்பதையும் உலகுக்கு எடுத்துக் காட்டலாம். (2) அனைத்துலக நாடுகளுக்கு போர் முடிந்தாலும் தமிழர்களது அரசியல் போராட்டம் தொடர்கிறது என்பதை எடுத்துக் காட்டலாம்.
(3) தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கான எந்தத் திட்டமும் ராசபக்ச சரி, பொன்சேகா சரி இருவரிடமும் இல்லை என்பதை ஊருக்கும் உலகுக்கும் அம்பலப்படுத்தலாம். (4) 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு உட்பட்ட எந்தத் தீர்வையும் தமிழ்மக்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்ற உண்மையை உலகுக்குக் குறிப்பாக இந்தியாவுக்கு உறைப்பாக உணர்த்தலாம்.
(5) தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை மீண்டும் வலியுறுத்தி அதற்கு வலுச் சேர்க்கலாம். ( 6) ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா, புளட் சித்தார்த்தன், கருணா, பிள்ளையான், ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன, ஆனந்தசங்கரி போன்றோரை தமிழ்மக்களை சிங்களவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் அல்லது கூட்டிக் கொடுக்கும் அற்ப சலுகைகளுக்காக முழங்காலில் கையேந்தி நிற்கும் எட்டப்பர்கள், காக்கை வன்னியர்கள் எனச் சித்திரித்துக் காட்டி கொடுங்கோலன் ராசபக்சவுக்கு அவர்கள் வழங்க இருக்கும் நிபந்தனையற்ற ஆதரவை மழுங்கடிக்கலாம். (7) 2010 ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கு இந்தத் தேர்தல் முன்னோடியாக அமையலாம்.
எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதிர்வரும் ஆட்சித்தலைவர் தேர்தலில் தமிழ் வாக்காகளர்கள் தமிழினத்தின் முதல் எதிரியான ராசபக்சவைத் தோற்கடிக்க இரண்டாவது எதிரியான சரத் பொன்சேகாவுக்கு இடது கையால் வாக்களிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் இரா. சம்பந்தன் நிறுத்தப்பட்டால் அவருக்கு முதல் வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை பொன்சேகாவுக்கும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும். நக்கீரன்
|
No comments:
Post a Comment