குஷ்பு பேசியும் அழியாத தமிழ்..!' |
சென்னை, டிச.9,2009 : மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, தமிழ் சொற்களை பிழைகளுடன் உச்சரித்து, பார்வையாளர்களை குரலெழுப்பச் செய்துவிட்டார். அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார், முதலமைச்சர் கருணாநிதி. 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, 'வள்ளுவர்' என்று சொல்வதற்கு பதிலாக 'வலுவர்' என்றும், 'குத்தகைதாரர்' என்பதற்கு பதிலாக 'குத்துகைகாரர்'' என்றும் கூறினார். 'உளியின் ஓசை' என்பதற்கு 'ஒளியின் ஓசை' என்றார். பார்வையாளர்களிடம் இருந்து கூச்சல் எழவே, "இது தமிழுங்க. 30 பேஜ் இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க," என்று கெஞ்சினார் குஷ்பு. இதற்கெல்லாம் மேலாக, "பெரியாரின் கொள்கைகளை" என்று சொல்வதற்கு பதிலாக "பெரியாரின் கொள்ளைகளை" என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. அப்போது, சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்காக முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கும் நேரத்தில், சற்றே உஷாரான அமைச்சர் பரிதிஇளம்வழுதி, அவசரம் அவசரமாக குஷ்புவின் பேச்சை இடைமறித்து, முதலமைச்சர் பற்றிய முன்னுரையை தானே அறிவித்தார். அப்போது மேடையில் இருந்து குஷ்பு சென்றுவிட்டார். அதன்பிறகு, நிகழ்ச்சியின் இறுதிவரை அமைச்சரே தொகுத்து வழங்கினார். இந்த தமிழ் குளறுபடியை தனது உரையில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கருணாநிதி, "நான் எழுதிய வசனங்களை வைத்துக் கொண்டே ஒரு கற்பனை நாடகத்தை இங்கே நடத்தினார்கள். அதில் வசந்த சேனைக்கு பதிலாக இப்போது ஆங்கிலம் வந்து அமர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி, தமிழைக் காப்பாற்றியே தீருவோம் என்றனர். தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழின் அந்த மொழி வல்லமை எத்தகையது என்பதை நாம் உணரலாம். தமிழுக்கு அத்தகைய சக்தி உண்டு. அதனால் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கின்றது," என்றார் முதலமைச்சர் கருணாநிதி. source:vikatan |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment