ஒலிபரப்பு கூடம்
""தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்...' என்றர் மகாகவி பாரதி. இந்த வரிகளை நனவாக்கும் வகையில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவின் சிற்றலை வானொலியில் முதன் முறையாக தமிழில் அறிவிப்புகள் ஒலிபரப்பாகின. இப்படி ஒரு தீவு இருப்பதே நம்மில் பலருக்கும் தெரியாத நிலையில் நமது தாய்மொழியில் அங்கு அறிவிப்புகள் ஒலிபரப்பான விதத்தை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்...
உலக வரைபடத்தில் ஆப்பிரிக்காவுக்கும் - தென் அமெரிக்காவுக்கும் நடுவில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் புள்ளிகளில் ஒன்றாக செயின்ட் ஹெலினா தீவு அடையாளம் காணப்படுகிறது. பூகோள ரீதியாக பார்த்தால் நிலநடு கோட்டுக்கு 15 டிகிரி தெற்கில் ஆப்பிரிக்க நாடான
அங்கோலாவுக்கு மேற்கில் அமைந்துள்ளது இந்தத்தீவு. தெற்கு அட்லாண்டிக் கடலில் இருந்த எரிமலை ஒன்றில் இருந்து வெளியான லாவா உள்ளிட்டபொருள்களால் உருவான தீவுகளில் ஒன்றாக பூர்வீகத்தைக் கொண்டது செயின்ட் ஹெலினா தீவு. ஐரோப்பிய நாடுகளின் நிலபரப்பில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் நீண்ட தூர கப்பல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், இளைப்பாறும் இடமாகவும் இத்தீவு முக்கியத்துவம் பெற்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷார் கி.பி. 1,500-ம் ஆண்டுகளிலேயே இதனை தங்களது காலனி நாடாக்கிக் கொண்டனர். ஆனால் மற்ற காலனி நாடுகளைவிட இது இங்கிலாந்து அரசுக்கு செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்தது.
சில ஆயிரம் மக்களே வசிக்கும் இந்தத் தீவு உலகின் இப்போதைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சுமார் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்றால் அது மிகையல்ல. வெளிஉலகத் தொடர்புக்கு கப்பல் போக்குவரத்தை மட்டுமே இத்தீவு மக்கள் நம்பியுள்ளனர். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டால் அது இந்தத் தீவை சென்றடைய 6 மாதம் ஆகும் என்பதே இவர்களின் தகவல் தொடர்பின் தற்போதைய நிலை.
வளர்ந்த பல நாடுகள் விண்வெளிக்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான பூர்வாங்கப் பணிகளே இப்போதுதான் செயின்ட் ஹெலினா தீவில் தொடங்கியுள்ளது என்பதன் மூலம் இதன் வளர்ச்சி வேகத்தை நாம் உணர முடியும். உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஆட்சியாளர்களில் ஒருவரான நெப்போலியன் போனபார்ட் இங்கிலாந்து அரசால் 1815-ம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, அவர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டார். 1821 மே மாதம் 5-ம் தேதி இந்தத் தீவிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனை குறிக்கும் விதத்தில் அவரது நினைவிடமும் இங்கு அமைந்துள்ளது. இதன் காரணமாக உலக வரலாற்றில் தன க்குறிய முக்கியத்துவத்தை பெறுகிறது செயின்ட் ஹெலினா தீவு. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை கடந்து 1967-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் இங்கு வானொலி லிபரப்பு தொடங்கப்பட்டது. 1548 கிலோஹெட்ஸ், 194 மீட்டர் மத்திய அலை ஒலிபரப்பாக இந்த வானொலி நிலையம் தொடக்கம்முதல் செயல்படுகிறது. இருப்பினும், 11092.5 கிலோஹெட்ஸில் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டும் கேட்கும் வகையில் சிற்றலை ஒலிபரப்பும் செயின் ஹெலினா வானொலியில் தொடங்கப்பட்-டது.
இங்கிலாந்து அரசு மத்திய அலை ஒலிபரப்புக்கு மட்டுமே நிதி உதவி அளித்ததால், எப்போதாவது சில சமயங்களில் மட்டுமே நடைபெற்று வந்த சிற்றலை வானொலி ஒலிபரப்பு 80-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், இங்கு ஒலிபரப்பு பணியில் இருந்த சிலர் உலகின் மற்ற பகுதிகளை சேர்ந்த சிற்றலை வானெôலி நேயர்களின் உதவியுடன் ஒலிபரப்பை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். 1993-ம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த முயற்சிகளின் பலனாக, 2000-ம் ஆண்டு முதல் செயின்ட் ஹெலினா வானெ ôலியின் சிற்றலை ஒலிபரப்பு மீண்டும் தொடங்கியது.
சிற்றலை வானொலி நேயர் குழுக்களின் நிதி உதவியை பெற்று மிகக்குறைந்த அளவான ஒரு கிலோவாட் திறனில் இதன் ஒலிபரப்பு தொடங்கியது. இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக ஆண்டு ஒரு நாள் அதாவது நவம்பர் 14 அல்லது 15-ம் தேதியில் மட்டும் கண்டத்துக்கு ஒரு மணி நேரம் தம் 4 மணி நேரம் இதில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஒரு மணி நேரம், ஜப்பான் மற்றும் எஞ்சிய ஆசிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு மணி நேரம், அமெரிக்கா, கரிபியன் நாடுகளுக்கு ஒரு மணி நேரம் என இதன் ஒலிபரப்பு அமைந்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி 15-ம் தேதி அதிகாலை 1.30மணிக்கு) இந்த ஒலிபரப்பு நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அந்தந்த பிராந்தியத்தில்
உள்ள முக்கியமான 2 மொழிகளில் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு ஒலிபரப்பாகும். இந்த முறை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கானஒலிபரப்பில் அறிவிப்புகள் தமிழில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னையை சேர்ந்த, சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் தங்க. ஜெயசக்திவேல் குரலில் தமிழ் அறிவிப்புகள் ஒலிபரப்பானது. ""இது செயின்ட் ஹெலினா வானொலி. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் இருந்து நாங்கள் ஒலிபரப்பு கிறோம்...'' என அந்த அறிவிப்பை நினைவுக் கூர்கிறார் தங்க. ஜெயசக்திவேல்.
இந்த வானொலியில் முதன்முதலாக ஒலிபரப்பான தமிழ் அறிவிப்புக்கு குரல் கொடுத்த பெருமை அவருக்கு இருந்தாலும், தமிழர்கள் அனை வருக்குமே இது பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழின் அருமை பெருமைகளை கெüரவப்படுத்தும் விதத்தில் தமிழ் அறிவிப்பு வழி வகுத்ததில் செயின்ட் ஹெலினா வானொலி நிலையத்தின் மேலாளர் கேரிவால்டர்ஸ் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாராட்டுக்குரியவராகிற ôர். ஜப்பானில் உள்ள சிற்றலை வானொலி நேயர் குழுவின் நிதி உதவியின் பேரில் இந்த ஆண்டு ஒலிபரப்பு நடைபெற்றது.
சிற்றலை வானொலி ஒலிபரப்பு மட்டுமல்லாது செயின்ட் ஹெலினா தீவின் அஞ்சல் தலையை பெறுவது என்பதும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்களிடம் பிரபலமானதாகும்.பல்வேறு காரணங்களால் சிற்றலை வானொலி ஒலிபரப்பின் வீச்சு குறைந்து வரும் வேளையில் சிற்ற லை நேயர்களை ஊக்குவித்து ஒருங்கிணைக்கும்
வகையில் அமைந்ததால் இதன் ஒலிபரப்பு உலகம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரைப்படத்தில் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும் தனது சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் உலகின் பார்வையை செயின் ஹெலினா தீவு தன்பக்கம் திருப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source:dinamanikathir
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment