அன்னை தமிழால், அவள் தந்த தொப்புள் கொடி உறவால்,
தானாடாவிட்டாலும் தசையாடும் எங்கள் தமிழணங்கின் பேறு பெற்ற தலைமைப் பெரியோனே!
சமீபத்திய தேர்தல்க் களத்தில் தாங்கள் சூடிய வாகை தமிழ்க்குலத்திற்கே கிடைத்த பெருவெற்றி.
உங்கள் வெற்றியால் நாமும் வென்றோம் என்று ஒரு பேருவகை எழுந்து நம்பிக்கைச் சிம்மாசனத்தில் எம்மை இருத்தியுள்ளது.
தமிழகம் எங்கள் தாய். அதை ஆளும் நீங்கள் எங்கள் தாய்க்கு ஒப்பானவரே.
அப்படி இருக்கும்போது உங்கள் பிள்ளைகளின் வலிகளை உங்களால் உணராமல் இருக்க முடியுமா?
பழம்பெருமை வாய்ந்த தமிழச் சாதி, பிடி ஆகாரமின்றி,
தாகத்தைத் தீர்க்க நன்னீருமின்றி சேறூறிய குளங்களிலும், குட்டைகளிலும் நீர் மொண்டு
பச்சைக் குழந்தைகளுக்கும் பருக்கும் அவலம், உங்கள் கவனத்தைப் பெறவில்லையா?
பரம்பரைக்குடி நிலங்களெல்லாம் சிங்கள இனவாத அரசின் இராணுவ கொடுங்கரங்களால் பறிக்கப்பட்டு,
வாழ்ந்த மண்ணிலேயே எங்கள் வாழ்வு அகதிகளாகி அல்லல்களுக்கு உள்ளாக்கப்படுவதும்,
உங்கள் தாய்மை நெஞ்சத்திற்குத் கேட்கவில்லையா?
ஆரோக்கியத்தோடு நிமிர்ந்து வாழ்ந்த நாம் கந்தகக் குண்டுகளின் கொஞ்சல்களில்
உடல் சிதறியும், துண்டாகியும், கூன், குருடு, செவிடு, ஊமை பிணம் என்றாகியும்,
மனநலங்குன்றியுமாக பெரு நோயுற்று மாள்வது உங்கள் விழித்திரையில் ஒளிரவில்லையா?
ஈழம் என்ற பொன்பூத்த பூமியிலே பாரம்பரியம் சிதைக்கப்பட்டும்,
பண்பாடு ஒடுக்கப்பட்டும், மானுட வாழ்வின் சுயங்கள் மறுக்கப்பட்டதுமாக எங்கள் வாழ்வு கேட்பாரற்று,
இனவாதியரின் கால்களுக்கிடையில் நசுக்கப்படுகிறது.
எங்கள் மூதாதையர் நிலங்களின் வளங்களைச் சுருட்ட வேற்று நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு
எங்களை ஒடுக்கும் இனவாதியருக்கு ஆயுத தானமும், இராணுவ தானமும் வழங்கி,
ஈழத்தமிழினம் என்ற ஒன்றையே இல்லாதொழிக்கும் மாபாதகச் செயலுக்குக் கண்களை மூடிக் கொண்டு துணை போகின்றன.
மானுட மெய்க்கு மரணதேவன் மாலையிட்டால் ஆறடி நிலம் வேண்டும்.
எரியூட்டுவதென்றாலும் நெஞ்சாங்கட்டை வேண்டும்.
எங்களுக்கான சாவுகள் எல்லாம் ஆறடி நிலத்தையோ அல்லது
தீயெரியும் போது சாந்தப்படுத்தும் நெஞ்சாங்கட்டையையோ வேண்டுவதில்லை.
எங்கள் உறவுகளின் மரணங்களுக்குப் பின்னான நிகழ்வென்பது
சிதறிக் கிடக்கும் உடலின் பாகங்களை கூட்டி அள்ளிப் பொதியாக்கி நெருப்பிடுவதாகவே உள்ளது.
அதுவும் பல சமயங்களில் உயிரற்ற சடலத்தின் பாகங்களை குவித்து அள்ளக் கூட வழியற்று,
சிங்கள அரக்கர்களின் எறிகணைகளில் இருந்தும் , விமானக் கொத்தணிக்குண்டு வீச்சுகளில் இருந்தும் தப்பிக்க
உயிர் காவி ஓடுவது இன்றைய அன்றாட வாழ்வாகிக்கிடக்கிறது.
விமானக் குண்டுவீச்சானாலும், பல்குழல் எறிகணை வீச்சானாலும்,
உயிர்காக்க ஒதுங்கும் பதுங்கு குழிகளுக்குள்,
இயற்கை அழுத கண்ணீரும், ஆலகாலன் ஒருபுறமும்,
"ஒரு புறம் வேடன் ,மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய மான்" என்று கவிஞர்கள் உவமித்ததைக் காட்டிலும்
கடுந்துன்பங்களைக் கொண்டதாகக் கண்ணெதிரே
உடல் சிதறுவதும், அமில எரிகுண்டுகளால் எரிந்து துடிப்பதும்,
நச்சுப் பாம்புகளால் கடியுண்டு மாள்வதுமாக
இன்னுமின்னும் தொடர்கதையாக ஈழத்தில் மரண இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தெற்கிருந்து வந்து உங்கள் மூச்சுத் தொடும் காற்றும்,
கந்தகத்திற்கு இரையாகிப்போன எங்கள் உறவுகளின் உயிர் கலந்தே உங்களை வந்தடையும்.
உங்கள் தாய்மைக் கண்களைத் திறந்து பாருங்கள்.
அந்தக் காற்றில் எங்கள் மரண ஓலங்களும், கடைசிச் சுவாசங்களும் தென்படும்.
எங்கள் வேதனைக் கூப்பாடுகளின் ஒலியை உங்கள் தாய்மைச் சிந்தை தள்ளி ஒதுக்காது என்ற பெருநம்பிக்கை சுமந்தே
இந்தக் காகித வெளியில் எங்கள் கண்ணீரின் காயாத இரணங்களை தாய்ப்பசுவை நாடி அழும் கன்றின் கேவல்களாக்கியுள்ளோம்.
இந்த உலகப்பரப்பில் எங்கள் வேதனையின் கேவல்களை ஆற்ற உங்களால் மட்டுமே முடியும்.
நான்கு இலட்சம் தமிழ்மக்களின் உயிர்காப்பு என்பது சாதாரண மனிதர்கள் எவராலும் முடியாது.
தமிழகம் என்ற பெருந்தாயாலேயே முடியும். இன்று அந்தத் தாயை அரவணைத்து வழிநடத்தும் பெருமகனான
உங்கள் குரலுக்கே வலிமை அதிகம்.
கொத்தணிக்குண்டு கொண்டு எங்கள் பூமியைச் சுடுகாடுகள் ஆக்கும் திட்டமே சிங்களத்தின் கோரமுகமாக இருக்கிறது.
ஊருராய் ஓடியோடி உடலும், மனதும் காயப்பட்டும் கதறித் தோள் சாயும் சொந்தங்களையே பறிகொடுத்தும்,
ஏதுமற்றதாகி, உயிர்மட்டும் உடமையாக, வாழ்வென்னும் வலி எங்களைச் சுமந்தபடி நகர்கிறது.
தாய்த்தமிழே!, கந்தகப்புகையற்ற சுவாசத்திற்காக ஏங்குகிறோம்.
கருணை விழிதிறந்து தாய்மை வேதத்தின் பொருள் உணர்த்துக.
No comments:
Post a Comment