Wednesday, January 7, 2009

போர் நிறுத்தம் என்ற பேச்சே இல்லை;இஸ்ரேல் கண்டிப்பு

 
 
"ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தும் வரை,போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என,இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இதற்கிடையே,காசா அருகே நடந்த சண்டையில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 54-பேர் கொல்லப்பட்டனர்.

ஒரு வாரத்திற்கும் மேலாக,ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது,இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. துவக்கத்தில் விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்திய இஸ்ரேல் ராணுவம்,சில நாட்களாக தரை வழி தாக்குதலையும் துவங்கியுள்ளது.

இதுவரை நடந்துள்ள தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்,காசா அருகே உள்ள பகுதிக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் கடும் சண்டை நீடித்தது.இச் சண்டையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் நடத்திய பீரங்கி மற்றும் விமான தாக்குதலில் 12-குழந்தைகள் உட்பட 54-பேர் கொல்லப்பட்டனர்.காசா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குண்டு வீச்சு காரணமாக புகை மூட்டம் காணப்பட்டது.

30-க்கும் அதிமான முறை விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.இதற்கிடையே,உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. "ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என,இஸ்ரேல் கூறியுள்ளது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails