Monday, October 6, 2008

பஜ்ரங் தளத்தை தடை செய்க வ்

மதக் கலவரத்துக்கு வழிவகுக்கும் பஜ்ரங் தள அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பாஜக ஆளும் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள மதக் கலவரத்துக்கு பஜ்ரங் தளம் மிக முக்கிய காரணமாகும் என்று பிரதமரிடம் அளித்த பரிந்துரையில் ஆணையத்தின் தலைவர் முகமது ஷபி குரேஷி சுட்டிக் காட்டியுள்ளார்.

மாநிலத்தில் செயல்படும் அனைத்து மத ரீதியான அமைப்புகளை கண்காணிப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தை பேண முடியும். மதக் கலவரத்துக்கு வித்திடும் அமைப்புகளுக்குத் தடை விதிப்பதன் மூலம்தான் மத நல்லிணக்கம் சாத்தியமாகும்.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் இக்குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கலவரம் பாதித்த மங்களூரில் மூன்று நாள் தங்கி நிலைமையை ஆய்வு செய்தது.

மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமான 17 பேர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

பஜ்ரங் தள மாநில அமைப்பாளர் மகேந்திர குமாரே, அங்குள்ள கிறிஸ்தவ வழிபாட்டு அறையை சேதப்படுத்தியதாக அறிக்கை விட்டுள்ளார் என்றும் குரேஷி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெங்களூரில் 83 பேர் நீதிமன்றக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 36 பேர் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். மங்களூரில் 25 கன்னியாஸ்திரிகளை தாக்கிய போலீஸர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

அதிக அளவில் மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும், அவ்விதம் நடைபெற்றதற்கான ஒரு ஆதாரமும் இல்லை. இந்துக் கடவுள் அவமதிக்கப்பட்டு வெளியான துண்டு பிரசுரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். புலனாய்வு அமைப்புகளை சிறப்பாக செயல்படச் செய்வதன் மூலம் இதுபோன்ற மதக் கலவரங்களை தடுக்க முடியும் என்றும் தேசிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஒரிசா: ஒரிசாவில் வன்முறையால் பாதித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாராளமாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. வன்முறையில் உயிரிழந்தவர்களின் சடலத்தை காண்பித்தால் மட்டுமே மாநில அரசு நிவாரணம் வழங்குகிறது. இதற்கு பதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை பதிவான 203 வழக்குகளை விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223284919&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails