அதன் பிறகு (Thereafter):
என் சகோதரி ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைப் பாடுவது வழக்கம்
அவள் சிமோன தி புவோவை விரும்பிப் படிப்பதும் வழக்கம்.
மதிய குளியலை மறந்து அவள் தன்னை மறந்து கார்ல் மார்க்ஸ்,
கார்கி, டால்ஸ்டாய், மற்றும் மாணிக் பந்தோபாத்யாய நாவல்கள் போன்றவற்றில் மூழ்குவாள்.
அவளுடைய பழைய ஞாபகத்தில் மூழ்குவதற்கு லாரா இன்கல்ஸ் வைல்டர்தான் பிடித்தமானவர்
போரைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தால், பாதி ராத்திரிவரை அழுது கொண்டேயிருப்பாள்.
என் சகோதரி அருமையான கவிதைகளை வாசிப்பாள்;
அவளுக்கு விருப்பமான சங்கா கோஷ், நீரேந்திரநாத் சக்கரபாரதி, நெருடா, மற்றும் யெவ்துஜூங்கோ
என் சகோதரி காட்டை நேசித்தாள், தோட்டத்தையல்ல;
அவள் சிலைகளை விரும்புவாள். ஒரு முறை இவற்றிற்காகப் பாரீஸ் போக டிக்கெட் வாங்கினாள்.
இப்போது என் சகோதரியின் கவிதை நோட்டில்
காய்கறி பற்றிய விவரங்களை எழுதி வைத்திருக்கிறாள்,
இப்போது பெருமையோடு சுற்றி வருகிறாள், உடல்நிறைய உலோக ஆபரணங்களை அணிந்து
அவள் பெருமையோடு சொல்கிறாள்
அரசியலைப்பற்றி
எண்ணியதில்லை
கலாச்சாரம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் அதுபற்றி அவள் கவலைப்படுவதில்லை.
அவளின் வீணை மீது தூசி படிந்திருக்கிறது, அவளின் தம்புரா எலி வலையானது
இப்போது அவள் கடை வீதிகளுக்குப் போய் வீட்டிற்கு தேவையான பொருட்களைச் சேகரிப்பதில்
கெட்டிக்காரியாகி விட்டாள்.
—————-
தஸ்லீமாவின் எழுத்துக்களின் மீதான ஈர்ப்பு எப்போது எனக்கு ஏற்பட்டது என்று உறுதியாய்ச் சொல்ல முடியாது. முழுதாய் அவரது புத்தகங்கள் பல இடங்களில் கிடைக்காத நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் படித்துப்பார்த்த அவரது கவிதைகள் சற்றே பிடித்துப் போய் விட தேடித் தேடி மட்டுமே அவரது எழுத்துக்களை படித்து வந்திருக்கிறேன். ஒன்றை என்னால் உறுதியாய்க் கூறிவிடமுடியும். இவர் ஒன்றும் தலை சிறந்த எழுத்தாளர் என்று ஏகமனதாய் எல்லாரும் கூறி விடுமளவுக்கு புலமை பெற்ற எழுத்துக்கு சொந்தக்காரர் இல்லைதான். இவரது சில கவிதைகள் வெகு சாதாரணத் தன்மையைக் கொண்டவையே. அவை ஒட்டு மொத்த கணக்கில் ஒன்றை ஏற்றி வைத்ததைத் தவிர வேறு எந்த விதமான பயன்பாட்டுக்கும் தேவைப்பட்டிருக்க வில்லை. இருப்பினும் இவரது சில கவிதைகளும் அதன் உள்ளே ஒளிந்திருக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒட்டு மொத்த கூக்குரலும், வலிகளின் ஓசைகளும் மெல்லியதாய் பிணைந்திருக்கும் சோகமும், கரணமற்று தங்களுக்கு அணிவித்திருக்கும் விலங்குகள் குறித்தான அறச்சீற்றமும் கலக எழுத்துக்காரர்களில் தவிர்க்க முடியா ஓர் இடத்தை இவருக்கு வழங்கி விட்டுச் சென்றிருக்கிறது.
1971 லிருந்து பங்களாதேஷ் என்று அறிவிக்கப்பட்ட கிழக்கு பாகிஸ்தானில் 1962ல் பிறந்த இவர், தனது முதல் கவிதைத் தொகுப்பான Hunger in Roots ஐ 1986 ல் வெளியிட்டார். தொடர்ந்து கவிதையுலகில் மட்டுமே தன்னை அடையாளப் படுத்திக் கொண்டிருந்த இவர் தனது முதல் நாவலும், பெரிதும் சர்ச்சைக்குரியதுமான லஜ்ஜா (வெட்கம்) எனும் நாவலை முதன் முதலில் வெளியிட்டது 1993ல். இவரது ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்புமுனை என்று இந்த நாவலைச் சொல்லலாம்.
ஒருவேளை இந்த புத்தகத்தை இவர் ஓரிரு வருடங்கள் முன்பே வெளியிட்டிருந்தால் பங்களாதேஷில் "நத்யாஸவ" அவார்டை இவர் பெறாமலே போயிருக்கலாம். 1992ல் ஆனந்த புரஷ்கார் அவார்டில் ஆரம்பித்து பல வெளிநாட்டு அவர்ர்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் பங்களாதேஷில் இவர் வாங்கிய ஒரே அவார்டு "நத்யாஸவ" மட்டுமே. இதில் ஆனந்த புரஷ்கார் ஐ வாங்கிய முதல் பெண்மணி இவரே. இந்த விருதை இவரே 2000 ஆம் ஆண்டு மற்றொரு முறை பெற்றிருக்கிறார். பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா, நார்வே, ஃப்ரான்ஸ், இந்தியா என பல நாடுகளின் விருதுகளை, அங்கீகாரத்தை இவர் பெற்றிருந்தாலும், பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இவர் ஒரு நாடோடியாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
1994ல் பங்களதேசின் கைது உத்தரவைத் தொடர்ந்து ஆரம்பித்த அவரது இந்த நாடோடி வாழ்க்கை ஃப்ரான்சு, ஸ்வீடன், இந்தியா என ஓர் தொடர்ச்சியற்ற பயணமாய் நீண்டுக் கொண்டே இருக்கிறது. மத்ச்சார்பற்ற நாடு என்று தன்னை உலகிற்கு அடையாளப் படுத்திக் கொள்ளுவதில் பெருமை கொள்ளத் துடிக்கும் இந்திய நாட்டில்தான் இவர் அதிகமாய் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். கோல்கத்தாவில் சில காலம், ஜெய்ப்பூர் ஹோட்டலில் கொஞ்சம், டெல்லியில் பாதுக்கப்புக் காரணங்களுக்காக என்று சொல்லி ரகசிய காவலில், இடையில் "திவிகாந்திதோ" (Split up into two) என்ற புத்தகத்திலிருந்து வெகு சர்ச்சைக்குரிய மூன்று பக்கங்களை மட்டும் எடுத்துவிடச் சொல்லி பல தரப்பினரிடமிருந்தும் மிரட்டல்கள், கோரிக்கைகள். ஹைதராபாத்தில் தனது புத்தக வெளியீட்டு விழாவின் போது மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களாலேயே நேரடியான, வெளிப்படையான தாக்குதல்கள், நந்திகிராம் பிரச்சினையின் ஒட்டு மொத்த கவனத்தை திருப்ப மேற்கு வங்க இடதுசாரி என்று சொல்லிக் கொள்ளும் மதச்சார்பற்ற (???) அரசாங்கத்தின் முதுகெலும்பில்லாத செயல்கள், ஃபத்வா, தஸ்லீமாவின் தலைக்கு ஐந்து லட்சம் பரிசு, பங்களாதேஷின் விசா ரத்து, தொடர்ச்சியாய் நீங்கள் "தாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்" பணிபுரிய வேண்டுமானால் எழுதுவதை நிறுத்தி விட வேண்டும் என்ற கட்டளை…
கலகக்காரன்(ரி) என்பது வெறும் வாய் வார்த்தைகளுக்கோ, போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகும் கருத்துக்களுக்காகவோ கொடுக்கப்படுவது அன்று. அது வாழ்தலின் அடிப்படையிலேயே பெறப்படுவது. அந்த வகையில் தஸ்லீமா தான் வாழ்கின்ற காலத்தில் ஒரு பெரும் கலகக்காரியாய் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார் என்பது பெரும் நிதர்சனம். கடைசியாய் மார்ச் 18 2008 அன்று இந்தியாவை விட்டு கிளம்பும் முன்பு கல்கத்தா டெய்லியில் "Need to escape from death chamber" அவர் எழுதிய கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. அந்த கட்டுரை இந்திய அரசாங்கத்தின் கையாலாகாத் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 110 நாட்கள் ரகசிய காவலில், தனிமையில் நான் வெறுமனே நடைபிணமாய் இருந்தேன் என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.
————————————————–
தஸ்லீமாவைப் பொறுத்த வரை அவருக்கு குடியுரிமை வழங்க ப்ரான்சு, ஸ்வீடன் ஆகிய நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்வருகின்றன. ஸ்வீடன் அரசாங்கம் குடியுரிமையோடு மாத வருவாய், தங்க இடம் உள்ளிட்ட பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இருப்பினும் அவரது மனம் இந்தியாவிற்கு வருவதையே விரும்புகின்றது. இந்த உணர்வை புரிந்துக் கொள்வது சற்றே கடினமானது. ஈழத்து சகோதரர்கள் எவ்வளவு வசதிகள் குறைவிருந்தாலும் தமிழகம் வருவதையே ஏன் விரும்புகிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டால் மட்டுமே இதையும் உணர முடியும். ஐந்து மாத கால இடைவெளியில் ஆகஸ்ட் 8 திரும்பவும் இந்தியா திரும்பி இருக்கிறார் என்று சில செய்திகள் சொல்கின்றன. ஆனால் இதுவரை இவருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்திய அரசுக்கு தைரியம் வர வில்லை.
சில விஷயங்கள் நடந்து முடிந்து விட்டிருக்கலாம். அல்லது மீடியாக்கள் தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பி இருக்கலாம். ஆனாலும் ஒரு சில சம்பவங்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மத அடிப்படைவாதம் எனும் கோரைப்பற்களில் ரத்தக் கறை தோய்ந்த, வெறி பிடித்த ஓநாயின் குரூர முகத்தை பிரதிபலிக்கும் வெற்றிச் சின்னங்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
தீபா மேத்தாவின் ஃபயர், வாட்டர், எர்த் உள்ளிட்ட படங்களின் மீதான இந்துத்துவ கும்பலின் எதிர்ப்பு மற்றும் வாரணசியில் நடந்த படப்பிடிப்புக் குழுவினரின் மீதான அராஜகங்கள், வீதி நாடகம் நடத்திய சப்தார் ஹாஸ்மியின் கொலை, அமீர்கானின் படத்திற்கெதிரான குஜராத் மாநிலத் தடை, கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் படுகொலைகள், தஸ்லீமா, ஹூசைன், ரசூலின் மீதான ஃபத்வா ஆகிய அனைத்துமே மத அடிப்படைவாதத்தின் பல்வேறு குரூர முகங்கள்தான்.
தீபா மேத்தாவிற்கும், தஸ்லிமாவிற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் பல்வேறு சமயங்களில் மத அடிப்படைவாதிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகிக் கொண்டிருப்பவர்கள். இருவருமே சில ஆவணங்களை அதன் உண்மைத்தன்மை குலையாமல் பதிவு செய்ய விரும்புபவர்கள். தான் சார்ந்த மதத்தின் போலி புனிதத்தன்மை குறித்தான கிஞ்சித்தும் அக்கறை இல்லாதவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாய் இருவருக்கும் இந்தியாவினுள் சுதந்திரமாய் நடமாட காவல் துணை தேவைப்படுகிறது.
டிசம்பர் 6 1992 - பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக்கலவரத்தினால் வெகுவாய் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பல இருந்தன. இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் முஸ்லீம்களையும், பங்களாதேஷில் பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்துக்களையும் துரத்தி துரத்தி வேட்டையாடிய காலம் அது. தான் பார்த்த, தன்னை பாதித்த சம்பவங்களை, தனது முதல் நாவலான லஜ்ஜாவில் பதிவு செய்ய முயன்றதன் தொடர்ச்சியாய் ஆரம்பித்த தஸ்லீமாவின் மீதான கொலை வெறித்தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது.
உச்சகட்டமாய் ஹைதராபாத்தில் தஸ்லீமாவை தாக்கிவிட்டு பேட்டி கொடுத்த சட்டமனற உறுப்பினர்களின் "முதலில் நாங்கள் முஸ்லிம்கள்.இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்களை எந்த முறை சாத்தியப்படுகிறதோ அந்த முறையில் எதிர்ப்போம்.அது எங்களின் கடமையும்கூட" எனும் பேட்டிகள் இந்தியாவின் மதச்சார்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.
"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய மக்களை அவமதிக்கிறதோ,
எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ,
எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ,
அப்படியானால் அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்."
தஸ்லிமாவின் மீதான தாக்குதல்களின் போது இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் குலைந்து விட்டது என்று கூக்குரலிட்ட பி.ஜே.பி, மோடி, இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவுகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களது தாக்குதலை நியாயப்படுத்தி "நீ என்ன ஒழுங்கா" என்று பதில் குரல் கொடுக்க ஏதுவாய் அமைந்து விட்டது. இந்த கேள்வியின் பின்னே அடிப்படைவாதம் தனது செயல்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மதத்தினடிப்படையில் யார் எது செய்தாலும் அது சரிதான் என்று இங்கே ஒரு பெருங்கூட்டம் உணர்ச்சிவசப்பட்டுக் கத்திக் கொண்டிருக்கிறது. மார்க்கமும், இந்துத்துவமும் தோன்றிய நாட்களுக்கப்புறம் வழி வழியாய் உயர் வகுப்பு ஆண்கள் தொடர்ச்சியாய் தன் சந்ததியினருக்கு கற்றுத்தந்த, உட்புகுத்திய ஓர் நெறிமுறையாய் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது. இப்போதும் அது உயர் சாதி ஆண்களின் கையில் இருக்கும் சாட்டையாய் இருந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே தஸ்லீமா உள்ளிட்ட கலகக்காரர்கள் மதத்திற்கெதிராய் குரல் எழுப்பும் போது இங்கு இரண்டு செயல்கள் நடைபெறுகின்றன.
ஒன்று என் மதத்தை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சூளுரைத்து கையில் வாளுடன் ஒரு கூட்டம் தெருவில் இறங்கி விடுகிறது. இன்னொரு கூட்டம் மார்க்கம் / வேதம் உண்மையில் அப்படிச் சொல்ல வில்லை. அதன் கூற்றுக்கள் வேறு என்று அராபி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மேற்கோள்களுடன் கூடிய வரிகளை எழுதி அதற்குப் பக்கம் பக்கமாய் விளக்கங்களை அளித்துக் கொண்டிருக்கின்றனர். அடிப்படையில் இந்த இரண்டு குழுக்களும் தனது மதத்தை மறு ஆய்வு செய்வதற்குப் பயந்துக் கொண்டு தன் மதம் குறித்தான போலிப் புனிதத் தன்மை குலைந்து விடக்கூடாதே என்று எடுத்துக் கொள்ளும் இருவேறு முயற்சிகளே.
H.G.ரசூலுக்கு ஃபத்வா விதித்த தக்கலை அமைப்பினரையும், வாரணாசியில் தீபா மேத்தாவின் படப்பிடிப்புக் குழுவின் மீது தாக்குதல் நடத்திய காவிக்கும்பலையும் மேற்சொன்ன உயர்சாதி ஆண்களின் கையில் இருக்கும் மதம் எனும் சவுக்கிற்கு சரியான எடுத்துக்காட்டாய்ச் சொல்லலாம். தஸ்லீமாவின் அடிப்படை அறச்சீற்றமும், கலகக் குரலும் கூட தான் சார்ந்த மதத்தை கேள்வி கேட்பதை விட, அந்த மதத்தை கையில் வைத்திருப்பவர்கள் முன்மொழிபவைகளில், வழங்கும் தீர்ப்புகளில், தொடரும் மனித வேட்டைகளில் இருக்கும் குரூரத்தனத்தைதான் கேள்வி கேட்கின்றன. இதைப் புரிந்துக் கொள்ளாதவர்கள் தோப்பில் முகமது மீரான், இன்குலாப், ரசூல், தஸ்லீமா உள்ளிட்டோருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருக்கும் வேட்டையாளர்களாய்தான் இருந்துக் கொண்டிருப்பார்கள். கையாலாகாத அரசாங்கமும் இந்திய இறையாண்மை, மதச்சார்பின்மை என்பது போன்ற வார்த்தைகளின் பின்னே ஒளிந்துக் கொண்டு அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருப்பார்கள்.
எப்போதும் சில விஷயங்களில் காணப்படும் தீவிரத் தன்மை மற்றும் மீடியாக்கள் தரும் வெளிச்சத்தின் கால அளவு என்பது எப்போதும் அடுத்ததாய் கிடைக்கும் வழமையான விஷயத்தைச் சார்ந்ததாகவே அமையும். நந்திகிராம் விஷயம் உச்சத்தில் இருந்த போது திட்டமிட்டே இடதுசாரிகளால் கவனமாய் திசை திருப்பப் பட்ட தஸ்லீமா விவகாரம். தஸ்லீமா விவகாரத்தின் தொடர்ச்சியாய் மற்றொன்று… என்று மீடியாக்களிற்கு எப்போதும் வெகு சூடான விவகாரங்கள் மட்டுமே தேவைப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.
உத்தப்புரத்தில் தீண்டமையின் சின்னமாய் தடுப்புச் சுவர் இன்னமும் இருந்துக் கொண்டிருக்க, மீடியாக்களோ ஏதோ இந்தப் பிரச்சினைக்கு முழுதாய் தீர்வு கண்டு விட்டது போல பாதியிலேயே தனது கவனத்தை அடுத்ததொரு சுவாரஸ்யமான சம்பவத்தை நாடிச் சென்று விட்டது. ஆனால் பிரச்சினை இன்னமும் தீர்ந்த பாடில்லை. அது பாதி அணைந்த நெருப்பாய் உள்ளுக்குள் எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன் விளைவுதான் மூன்று நாட்களுக்கு முன்பு அமலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளும், கைதுக்களும்.
தஸ்லீமாவின் விவகாரத்திலும் இதே நிலைதான். இந்தியாவை விட்டு சென்று விட்டதால் அடிப்படைவாதிகள் மௌனம் காக்கின்றார்களே தவிர, இவர்கள் தங்களது தவறை உணர்ந்தவர்களாயில்லை. இப்போது உள்ளுக்குள் அமைதியாயிருக்கும் இந்த தீவிரவாதிகள் தஸ்லீமாவின் அடுத்த புத்தக வெளியீட்டு விழாவிலோ அல்லது இந்தியாவில் ஏதேனும் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் போதோ தனது ரத்த வெறியை காண்பிக்கக் கூடும். ரசூலோ, தீபா மேத்தாவோ, தீப்பில் முகமது மீரானோ சில சம்பவங்களை ஆவணங்களாக்க முயற்சிக்கும் போதோ அல்லது அடர்த்தியாய் பனி பொழியும் ஓர் அதிகாலைப் பொழுதிலோ கொலை செய்யப்படலாம். அப்போதும் மத்திய அரசு மௌனமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். பிய்ந்து தொங்குவது இந்தியாவின் மதச்சார்பின்மை எனும் முகமூடியாய் இருக்கும்.
தஸ்லீமாவின் புகழ் பெற்ற "அம்மாவின் மரணம்" கவிதை
I
இறுதியில் எனது தாயின் கண்கள்
முட்டையின் மஞ்சள கரு போலாகியது
ஏப்போதும் வெடித்துவிடும் போல
நிரம்பி வழியும் தண்ணீர் தேக்கி போல
அவளது வயிறு உப்பியபடியிருந்தது
இனி அவளால் எழுந்து நிற்கமுடியாது
உட்காரமுடியாது
அவளது விரல்களைக்கூட நகர்த்தமுடியாது
அப்படியே கிடக்கிறாள்
ஓவ்வொரு காலையிலும் உறவினர்கள் வருகிறார்கள்
ஓவ்வொரு மாலையிலும்
வெள்ளிக்கிழமை புனிதத் திருநாளில்
அம்மா மரணிக்க ஏற்பாடு செய்யும்படி சொல்லிச் செல்கிறார்கள்
லா ஏலாஹா இல்லாஹா எனச் சொல்லியபடி
அல்லா ஒருவனே எனச்சொல்லியபடி
முங்கரும் நாகிருமான
இரண்டு தேவதைகள் கேள்விகள் கேட்க வரும்போது
அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிடவேண்டாம்
என எச்சரிக்கை செய்கிறார்கள்
கடைசித் தீர்ப்பின் பொருட்டு அல்லாவிடம்
அவனது பதில்களை எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்
அறையைச் சுத்தமாக வைத்திருக்கும்படி
முற்றத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்படி
வாசனைத் திரவியங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளும்படி
மரணம் இறுதியாக வரும் பொருட்டு தயாராக இருக்கும்படி
பசி கொண்ட நோய் இப்போது
அம்மாவின் உடம்பின் மீது நடனமாடத் தொடங்கிவிட்டது
அவளது எஞ்சிய பலத்தையும் உறிஞ்சத் தொடங்கிவிட்டது
கண்குழியிலிருந்து விழிகள் பீதங்கத் துவங்கிவிட்டது
மார்புக் கூட்டினின்று காற்று களவாடப்பட்டு
நா வரண்டு பொயிற்று
ஆவள்முச்சுக்காகப் போராடும்போது
அவளது நெற்றியும் இமைகளையும் வலியால் நெறிபடுகிறது
முழு வீடும் சத்தம் போடுகிறது
தமது நல்லெண்ணத்தை தீர்க்கதரிசிக்கு தெரிவிக்கும்படி
அவள் சொர்க்கத்துக்குச் செல்வாள் என்பதில்
எவருக்கும் சந்தேகமில்லை
வெகு சீக்கிரமே முகமதுவுடன் கைகோர்த்தபடி
ஒரு அழகான மதியநேரத்தில்
ஒரு தொட்டத்தில் அவள் நடப்பாள்
இருவரும் பறவைக் கறியை உண்பார்கள்
சொர்க்கத்தோட்டத்தில் அவள் முகமதுவுடன் சேர்ந்து நடப்பாள்
ஆனால் இப்போது பூமியைவிட்டுப் பிரியும் நேரமான இப்போது
ஆவள் தயங்குகிறாள்
வெளியேறுவதற்கு மாறாக
ருசிக்கும் அரிசிச் சமையலை எனக்கு ஆக்கிப்போட விரும்புகிறாள்
ஹில்ஸா மீனை வறுக்க தக்காளிக்குழம்பு வைக்க
தோட்டத்தின் தெற்கு மூலையில் இருந்து
முற்றாத இளநீர்காயை எனக்குப் பறித்து வர விரும்புகிறாள்
எனது நெற்றியில் வந்துவிழும் கூந்தல் கற்றைகளை விலக்கும் பொருட்டு
தனது கையினால் காற்று விசிறிவிட விரும்புகிறாள
எனது படுக்கையில் புதியதொருவிரிப்பை விரிக்க அவள் விரும்புகிறாள்
எம்பிராய்டரியுடன் புதிதாக எனக்கு ஒரு ரவிக்கை தைக்க விரும்புகிறாள்
இளம் பப்பாளி மரத்துக்கு
ஒரு கம்பை முட்டுக் கொடுக்க அவள் விரும்புகிறாள்
முற்றவெளியில் வெறும் காலுடன் நடக்க
நிலா இரவில் பாட்டுப்பாட அவள் விரும்புகிறாள்
அவள் முன்னெப்போதும் அப்படிச் செய்ததேயில்லை
மருதாணித் தோட்டத்தில்
முன்னெப்போதும் நிலவின் ஒளி அப்படி பூமிக்கு வந்ததேயில்லை
முன்னெப்போதும் இத்தகைய உணர்ச்சி எனக்கு வந்ததேயில்லை
அவளது முடிவில்லா தாயன்பு
தொடர்ந்து வாழ்வதற்கான அவளது ஆச்சர்யமான அவளது ஆசை
அவள் எனது கைகளை இறகப்பற்றிக் கொண்டள்
II
எனக்கு நிச்சயமாகத்தெரியும் மறுபிறப்பு என்பது இல்லை
இறுதித்தீர்ப்பு நாள் என்பதும் இல்லை
சொர்க்கம் பறவை இறைச்சி திராட்சைரசம்
கருநீலத் தேவதைகள்-
இவையனைத்தும் மதவாதிகளின் வலைகளன்றி வேறில்லை
அம்மா சொர்க்கத்துக்குப் போகப் போவதில்லை
எவரோடும் எந்தத் தோட்டத்திலும் அவள் நடக்கப்போவதில்லை
வஞ்சகம் நிறைந்த ஓநாய்கள் அவளது சவக்குழியில் நுழையும்
அவளது சதையைப்புசிக்கும்
அவளது வெண்ணிற எலும்புகள் காற்றினால் சிதறப்படும்
இருப்பினும்
ஏழ்வானங்களுக்கு அப்பாலோ அல்லது வேறெங்கேயோ இருக்கும்
சொர்க்கத்தை நான் நம்ப வேண்டும்
ஒரு அதி உன்னதமான பிரம்மாண்டமான சொர்க்கம் நோக்கியே
கடினமான பாலத்தை மிகச் சுலபமாக வலியின்றி
எனது அன்னை கடந்து செல்ல முடியும்.
திடகாத்திரமாக ஆண் தீர்க்கதரிசி முகமது அவளை வரவேற்பார்.
அவளைத் தழுவிக் கொள்வார்
அவரது மயிரடர்ந்த மார்பில் அவளைக் கரைந்துபோகுமாறு செய்வார்.
நீருற்றில் குளிக்க அவள் விரும்புவாள் நடனமாட விரும்புவாள்
அவள் முன்னெப்போதும் செய்திராத அனைத்தையும் அவள் செய்வாள்
தங்கத்தட்டில் பறவைக் கறி அவளுக்கு வந்துசேரும்
அல்லாவும் தோட்டத்திற்கு வெற்றுக் கால்களுடன் வருவார்
ஒரு சிவப்புமலரை அவளது கூந்தலில் சூடுவார்
ஆதுரமாக முத்தமொன்று தருவார்
இறகுகளின் மஞ்சத்தில் அவள் உறங்குவாள்
எழுநுாறு விசிறிகள் வீசப்படும்
அழகான இளம் பையன்களால் குளிர்ந்த நீர் பறிமாறப்படும்.
அவள் சிரிப்பாள்.
ஆதி சந்தோஷத்தினால் அவளது முழு உடலும் பூக்கும்.
பூமியில் அவளது துன்பமயமான வாழ்வை அவள் மறந்து போவாள்
III
எனது பிரியமான அன்னையின் சொர்க்கத்தைப் பற்றி
கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பது
எத்துணை பரவசமாக இருக்கிறது
No comments:
Post a Comment