பெங்களூர், அக்.6-
கர்நாடகத்தில் இனி மதக்கலவரங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கர்நாடகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று பெங்களூர் வந்தார். பின்னர் அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ராமேசுவர் தாகூரை சந்தித்து பேசினார்.
மேலும் கர்நாடக போலீஸ் மந்திரி பி.வி.ஆச்சார்யா, சட்ட மந்திரி சுரேஷ்குமார், தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீகுமார் ஆகியோரையும் அழைத்து சிவராஜ் பட்டீல் பேச்சு நடத்தினார்.
பரபரப்பான இந்த சந்திப்புக்கு பிறகு சிவராஜ் பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கு
கர்நாடக கவர்னர் ராமேசுவர் தாகூர், மாநில போலீஸ் மந்திரி ஆச்சார்யா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி உள்ளேன். இந்த ஆலோசனை கூட்டம் நல்ல பலனை கொடுத்து உள்ளது. இதன் மூலம் ஏராளமான தகவல்களை கேட்டு அறிந்தேன்.
மேலும் கர்நாடகத்தில் இனி மதக்கலவரங்கள் நடக்காமல் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அரசுக்கு எச்சரிக்கை
கர்நாடகத்தில் கடந்த ஜுலை மாதம் முதல் நடந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இனி எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களும், மதக்கலவரங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும்படி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற விஷயங்களில் `மிகவும் கவனமாக'வும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அரசுக்கு சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
சிறப்பு போலீஸ் நிலையங்கள்
நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஒரிசா போன்ற பல்வேறு மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளில் சிறப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் மாநில அரசுகளுக்கு இந்த போலீஸ் நிலையங்கள் சுமையாக இருக்கலாம்.
எனவே மாநில அரசுக்கு சுமையாக இல்லாமல் இருக்க முதல் 3 வருடங்களுக்கு சிறப்பு போலீஸ் நிலையங்களுக்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த போலீஸ் நிலையங்களுக்கு தேவைப்படும் போலீசார், வாகன வசதி, நவீன ஆயுதங்கள் போன்றவற்றையும் மத்திய அரசே வழங்கும்.
இவ்வாறு மத்திய மந்திரி சிவராஜ் பட்டீல் கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=442980&disdate=10/6/2008
No comments:
Post a Comment