Friday, October 3, 2008

இந்து மதம் தமிழர்களுடையதா?

 

தாயகத்து செய்திகளை உடனுக்குடன் தருவதில் முன்னணியில் நிற்கும் இணையத் தளங்களில் "பதிவு" இணையத் தளம் குறிப்பிடத்தக்கது. அதே போன்று "சூரியன்" இணையத்தளமும் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றி வருகின்றது. தேசியத்திற்கான பரப்புரைப் பணியில் இந்த இணையத் தளங்கள் தங்களுடைய பங்களிப்புகளை சிறப்பான வகையில் வழங்கி வருகின்றன

அறிவியல் சார்ந்த பல கட்டுரைகளையும் இந்த இணையத் தளங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மயூரன் என்பவர் எழுதிய ஒரு வெங்காயத்தனமான கட்டுரையை வெளியிட்டு தம்முடைய பெருமைக்கு களங்கம் சேர்த்துள்ளன.

 

(முக்கிய குறிப்பு: பலர் சுட்டிக்காட்டிய பின்பு "பதிவு" இணையத்தளம் குறிப்பிட்ட கட்டுரையை நீக்கிவிட்டது. "பதிவு" இணையத்தளத்திற்கு எம் நன்றிகள்)

அக் கட்டுரை இதுதான்: http://www.sooriyan.com/index.php?option=c…3&Itemid=32

 

கட்டுரையில் "நம் மூதாதையர்களான இந்துக்கள்", "எமது இந்துக்கள்" "எம் இந்துக்களான பழந்தமிழர்" போன்ற வசனங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன. இந்துக்கள்தான் விமானத்திற்கான அறிவை முதலில் உலகத்திற்கு தந்தார்களாம். அந்த இந்துக்கள் எங்களுடைய முதாதையர்களாம். என்னே கட்டுரையாளரின் அறிவு!!

ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவைகள் எல்லாம் தமிழர்களின் இலக்கியங்களா? இவைகளுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? அட, இந்து மதத்திற்கும் தமிழர்களுக்கும்தான் என்ன சம்பந்தம்? கட்டுரை எழுதியவருக்கும், வெளியிட்டவர்களுக்கும் வரலாறே தெரியவில்லை. இதில் "அறிவியல்" மட்டும் எப்படி புரிந்து விடும்?

சங்க இலக்கியங்களில், ஐம்பெருங்காப்பியங்களில் வரும் வானூர்த்தி பற்றிய தகவல்களையும் தந்த கட்டுரையாளர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அங்கும் தன்னுடைய இந்துத்துவ வெறியை வெளிப்படுத்துகிறார்.

மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்றவற்றில் உள்ள வானூர்த்தி பற்றிய தகவல்களை கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். சீவகசிந்தாமணி "மயிற்பொறி" என்ற ஒரு வானூர்த்தி பற்றிய தகவலை தருகின்றது. ஆனால் சீவகசிந்தமாணியின் "மயிற்பொறியை" விட இராமாயணத்தின் "புஸ்பகவிமானம்" உயர்ந்தது என்று கட்டுரையாளர் சொல்கின்றார்.

 

இதில் ஒளிந்திருக்கும் அரசியலை புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை. சீவகசிந்தமாணி சமண சமய தத்துவங்களை சொல்கின்ற ஒரு காப்பியம். ஆனால் "புஸ்பகவிமானத்தை" சொல்கின்ற இராமாயணம் இன்றைக்கு இந்துக்களுடைய காப்பியமாக இருக்கின்றது. சமணம் சொல்கின்ற "மயிற்பொறியை" விட இந்துத்துவம் சொல்கின்ற "புஸ்பகவிமானம்" உயர்ந்தது என்பது மதவெறி மிக்க இந்தக் கட்டுரையாளரின் கருத்து.

இந்தக் கட்டுரையாளருக்கு மதவெறி இல்லையென்றால், "தமிழர்களுடைய முதாதையர்கள் இந்துக்கள்" என்று வரலாற்றையே திரித்திருக்க மாட்டார். தமிழர்களுடைய முதாதையர்களுடைய மதம் இந்து மதம் அல்ல. இந்து மதம் மிகவும் பிற்காலத்தில் தமிழர்களிடம் பரவிய ஒரு மதம்.

தமிழர்களுடைய மூதாதையர்களின் வழிபாடு நடுகல் வழிபாடாகவும் சிற தெய்வ வழிபாடாகவும் இருந்தது. தம்மோடு வாழ்ந்து, தமக்காக சாவடைந்த பெருவீரர்களை போற்றி வழிபட்டார்கள். இந்தச் சிறு தெய்வங்கள் அனைத்தும் பின்பு வந்த இந்து மதத்தால் உள்வாங்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டன. எஞ்சியுள்ள சிறு தெய்வங்கள் கோயிலுக்கு வெளியே நிற்கின்றன.

தமிழர்களுடைய மூதாதையர்களின் காத்திரமான இலக்கியங்களுள் பெரும்பாலானவை சமண, பௌத்த மதத்தவர்களால் உருவாக்கப்பட்டவை. திருக்குறளாக இருக்கட்டும், ஐம்பெரும் காப்பியங்களாக இருக்கட்டும் சமண, பௌத்த மதத்தவர்களால் உருவாக்கப்பட்டவையே.

தமிழர்களுடைய மூதாதையர்களுடைய மதம் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சுட்டிக் காட்டுவது முட்டாள்தனம். அதுவும் தமிழர்களுடைய பல நூல்களையும், நாகரீகத்தையும் அழித்த இந்து மதத்தை சுட்டிக்காட்டுவது பெரும் மோசடியான செயல்.

ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவற்றை எழுதியவர்களுடைய பேரன்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் தேசியத்தை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் ஓடியாடிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்தேசியத்தை அழிக்கத் துடிப்பவர்களின் மூதாதையர்களை தமிழர்களுடைய மூதாதையர்களாக காட்டுகின்ற கேவலமான வேலையை யாரும் செய்ய வேண்டாம். அப்படிச் செய்வது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்கின்ற துரோகம் ஆகும்.

சமஸ்கிருத மொழிக்கும் தமிழுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அறிவியல்ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. பல மொழியியல் வல்லுனர்கள் பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இதை நிறுவியுள்ளார்கள்.

சமஸ்கிருதம் "இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை" சேர்ந்தது. சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கியுள்ள வானூர்த்தி குறித்த நூல்களுக்காக, இந்தியாவில் இருக்கும் ஆரியமொழியினரோ அல்லது ஐரோப்பிய மக்களோ பெருமைப்பட்டுக் கொள்ளலாம். தமிழர்கள் இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

முடிவாக தமிழர்கள் ஒவ்வொரு காலத்திலும் பல வகையான மதங்களை பின்பற்றி வந்திருக்கிறார்கள். நடுகல் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், இந்துத்துவம் என்று பல மதங்களை பல்வேறு காலகட்டங்களில் பின்பற்றியுள்ளார்கள். ஈழத்திலும் ஒரு காலத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் பௌத்தர்களாக வாழ்ந்துள்ளார்கள்.

ஒரு இனத்தின் மதம் என்றோ, அல்லது அந்த இனத்தின் மூதாதையர்களின் மதம் என்றோ ஒன்றை சுட்டிக்காட்ட முடியாது.

தமிழினத்தோடு எவ்விதத்திலும் பொருந்தாத ஒரு இனம் தன்னுடைய மொழியில் உருவாக்கிய ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்ற நூல்களை எங்களுடையவை என்று சொல்வது கையாலாகத்தனமானது.

இந்த நூல்களை எம்முடைய மூதாதையர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது அறிவுகெட்டத்தனமானது. "தமிழர்களின் மூதாதையர்கள் இந்துக்கள்" என்ற கருத்து எந்த விதத்திலும் அறிவியலோடு சம்பந்தப்படாதது. மதவெறியை வெளிப்படுத்துகின்ற கருத்து இது.

தேசியத்திற்கு பணியாற்றும் ஊடகங்கள் இவ்வாறான கட்டுரைகளை வெளியிட்டு தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

- வி.சபேசன்
 

தமிழர்களின் வானூர்த்தி அறிவு குறித்து சரியான வகையில் அலசுகின்ற சில கட்டுரைகள்:

 

http://www.alaikal.com/index.php?option=co…5&Itemid=48

http://www.aaraamthinai.com/sirappuparvai/…pr28sirappu.asp

 

http://www.webeelam.net/?p=229

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails