ஊடக வெளியிட்டாளர்களை மிரட்டிய சிறிலங்காவின் அரச தலைவர் |
|
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும் படையினருக்கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊடக நிறுவனங்களின் வெளியீட்டாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். |
குறிப்பாக போர் நடவடிக்கைகளில் படைத்தரப்புக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் சேதங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்ற தகவல்களை கூட வெளியிட வேண்டாம் எனவும் அவ்வாறான செய்திகள் வெளியிடப்படுமனால் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் மகிந்த ராஜபக்ச முன்னறிவித்தல் கொடுத்துள்ளார். இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்களையும் வெளியீட்டாளர்களை அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த எச்சரிக்கையையும் முன்னறிவிப்பையும் அவர் வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் அல்லது பாதுகாப்பு அமைச்சின் தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரின் உறுதிப்படுத்தலின் அடிப்படையிலேயே போர் தொடர்பிலான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் பணிப்புரை வழங்கிய மகிந்த ராஜபக்ச, படையினரின் வெற்றி குறித்த செய்திகளுக்கு மாத்திரமே ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தார். மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்தும் கருத்து கூறிய மகிந்த ராஜபக்ச, அரசாங்கத்திற்கும் படையினருக்கும் ஏற்படக்கூடிய சிக்கல் நிலைமைகளை தவிர்க்க வேண்டியது ஊடகவியலாளர்களின் எழுத்தில் தங்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். சந்திப்பில் கலந்து கொண்ட இலத்திரனியல், அச்சு ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் ஆகியோரின் கேள்விகளுக்கும் கடுமையான எச்சரிக்கை தொனியில் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தேச பக்தியை கட்டி எழுப்புவதுதான் ஊடகங்களின் தலையாய கடமை என்றும் நீண்ட விளக்கமளித்தார். தமிழீழ விடுதலை புலிகள் மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்த மகிந்த ராஜபக்ச, தற்போது புலிகள் ஒரு காணித்துண்டுக்குள் ஒடுங்கிவிட்டார்கள் எனவும் கூறி பெருமைப்பட்டார். இக்கலந்துரையாடலின்போது அதிபர் மகிந்த ராஜபக்ச ஊடக செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல் விடுத்ததார் என்று சந்திப்பில் கலந்து கொண்ட வெளியீட்டாளர்கள் கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. |
http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYA0ecAA4S3b4C6DN4d2f1e2cc2AmS3d434OO2a030Mt3e
No comments:
Post a Comment