|
|
சிறிலங்கா அரச படைகளின் ஆயுதத்தாக்குதலை நிறுத்தி, வன்னிக்குப் போதுமான அளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை வழங்கி, வன்னியில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாப்புப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தும்படி மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையாரை சுவிஸ் தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. |
இது தொடர்பாக சுவிற்சர்லாந்து பேர்ணை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சுவிஸ் தமிழர் பேரவையின் தலைவர் சண். தவராஜா, செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டு மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை அம்மையாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கலாநிதி. நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் ஆணையாளர் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தேசங்களின் மாளிகை ஜெனீவா அன்பான அம்மணி, வன்னியில் நிகழும் அவலத்தை நிறுத்துங்கள் இலங்கையில் வன்னிப் போர்க்களங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சகோதரங்களின் பாதுகாப்பு தொடர்பாக சுவிசில் வாழும் தமிழ் அகதிகளாகிய நாம் பெரிதும் கவலையடைகிறோம். சிறிலங்கா அரசாங்கத்தின் ஆயுதப் படைகள் எடுத்து வரும் கண்மூடித்தனமான படை நடவடிக்கைகளால், வன்னிப் பகுதியில் வாழும் ஏறக்குறைய முழுச் சனத் தொகையுமான 4 லட்சம் பேர் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்பதைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இடங்களைப் பிடிப்பதில் மட்டுமே கருத்தாக உள்ள அவர்கள் மக்களின் பாதுகாப்பை உதாசீனம் செய்து மிக அதிக அளவிலான பலத்தைப் பயன்படுத்துகின்றனர். குடிமக்களின் வாழ்விடங்களின் மீது வகை தொகையற்ற வானூர்தி குண்டு வீச்சுக்கள், கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள், பல்குழல் எறிகணைச் செலுத்திகளின் பாவனை, கிளைமோர்த் தாக்குதல்கள் என்பன நாளாந்த நிகழ்வுகளாக உள்ளன. அண்மைக்காலமாக சிறிலங்கா வான் படையானது, அனைத்துலக அமைப்புக்களால் தடை செய்யப்படக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள கொத்துக்குண்டுகளை பாவித்து வருகிறது. இதன் காரணமா பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயப்பட்டும் உறுப்புகளை இழந்தும் உள்ளனர். அரசின் பொருளாதாரத் தடைகளால் பொதுமக்களுக்கான உணவு, மருந்து வாழ்விடம் மற்றும் அத்தியாவசிய தேவைகளின் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களுக்கான அவசர தேவைகளை அரசு தானும் செய்யாது இருப்பதோடு, அவற்றை உள்ளுர் மற்றும் அனைத்துலக அரசு சார்பற்ற உதவி நிறுவனங்களையும் செய்யவிடாது தடை செய்துள்ளது. அரச படையும் உணவு மற்றும் பொருட்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துப் போக விடாது தடை செய்கிறது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகள் கல்வி வசதிகளை இழந்துள்ளனர். தற்பொழுது மக்கள் மிகக் குறுகிய பகுதியில் போதுமான வசதிகள் அற்று வாழ வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சுமார் 40 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 4 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாளாந்தம் மக்களின் வாழ்விடம் சுருங்கி வருகின்றது. அரச நிர்வாகக் கட்டமைப்பு இவர்களுக்குப் போதுமான அளவு உணவு மற்றும் பொருட்களை வழங்க முடியாது சிரமப்படுகிறது. சிறிலங்கா அரசு வன்னிக்குப் போதுமான அளவு உணவு ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டாலும், முடிவில் அவை போகும் வழித் தடங்களில் வேண்டும் என்றே தாக்குதல்களைச் செய்து சாக்குப் போக்குச் சொல்லி நிறுத்தி விடுகிறது. மிக அதிக அளவில் துன்பத்துக்கு உள்ளான நிலையிலும் மக்கள் பழி வாங்கல்களுக்குப் பயந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் போக விரும்புகிறார்கள் இல்லை. ஏற்கனவே மருந்து மற்றும் வசதிகள் இல்லாது தத்தளிக்கும் மருத்துவமனைகள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின்றன. மருத்துவப் பணியாளர்கள் அதிகரித்து வரும் காயக்காரர்களின் தொகையால் சிகிச்சை அளிக்க முடியாது மாபெரும் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர். சிறிலங்கா அரசு மருந்துகள் மற்றும் உபகரணங்களை தடை செய்ததன் மூலம் மக்களின் உயிருக்கு மிகப் பெரும் அச்சுறுத்தைலை ஏற்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகள் தற்காலிக இடங்களுக்கு ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன. இத்தகைய தற்காலிக மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகி விடுகின்றன. இருக்கும் மருத்துவமனைகளில் ஆபத்தான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால், அவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு மேலதிக சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. எனினும் சிறிலங்கா இராணுவத்தின் தடைகள் காரணமாகப் பல ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் கொண்டு செல்லப்பட முடியாது இறந்துள்ளனர். பொருளாதாரத் தடை காரணமாக ஏற்கனவே போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு பிள்ளைகள் பட்டினிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அந்தப் பகுதிக்கு உப உணவுகள் மீது தடை போடப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளன. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் யாவருக்கும் அறிந்த விடயமாகும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல் காரணமாக கடந்த மனித உரிமை சபைத் தேர்தலில் அது தனது அங்கத்துவத்தை இழக்க நேர்ந்தது. கடத்தல்கள், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள், பாலியல் வல்லுறவுகள், காணாமற் போக்கடித்தல்கள், ஊடகச் சுதந்திர மறுப்பு, போன்றவை இலங்கைக்குப் புதியன அல்ல. சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான மேற்குறித்த செயற்பாடுகள் ஒரு இனச் சுத்திகரிப்பு அல்லாது வேறு எதுவும் அல்ல. உலகில் உள்ள ஜனநாயகச் சக்திகள் இவை போன்ற செயற்பாடுகள் கட்டுப்பாடின்றி தொடர்வதை அனுமதிக்க முடியாது. வன்னியில் வாழும் மக்கள் ஏற்கனவே ஐ.நா. உட்பட அனைத்துலக சமூகத்திடம் பல தடவைகள் தம்மை இந்த இன அழிப்புப் போரிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இதுவரை இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த எந்தவித காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சுவிஸ் தமிழர் பேரவையும் தனது பங்குக்கு பல தடவைகள் அனைத்துலக சமூகத்திடம் விண்ணப்பங்களைச் செய்துள்ளது. காசா நிலப் பரப்பில் வாழும் மக்களின் அவல நிலை பற்றிய அனைத்துலக சமூகத்தின் செயற்பாடும் நல்லெண்ணமும் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஓவ்வொரு ஜனநாயக நாடும் மனிதாபிமான அமைப்பும் ஆயுத மோதலைத் தவிர்த்து காசா மக்களின் உணவுக்கும் உணர்வுக்கும் பரிந்துரை செய்கின்றன. சிறிலங்கா அரசின் ஆயுதப் படைகளால் வன்னி மக்களும் அதேபோன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு மனித அவலத்தின் விளிம்பில் உள்ளனர். எனவே காசா மக்களின் நலனுக்காகப் பாடுபடும் அனைவரையும் தலையிட்டு இனப் படுகொலையில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மனித உரிமைகள் ஆணையாளரை நாம் தயவாகக் கேட்டுக்கொள்வது: சிறிலங்கா அரச படைகளின் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதத் தாக்குதலை உடனே நிறுத்த அழுத்தம் கொடுக்க வன்னிக்குப் போதுமான அளவு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பு உறுதிப்படுத்த வன்னியில் உள்ள மருத்துவ மனைகளுக்கு மருந்து மற்றும் உபகரணங்களை வழங்க வன்னியில் உள்ள மருத்துவமனைகளைப் பாதுகாப்பு பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்த சிறிலங்கா அரசைத் தூண்ட உள்ளுர் மற்றும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளை வன்னிக்குள் அனுமதிக்க சிறிலங்கா அரசை தூண்ட தங்களின் மேலான பதவி மூலம் தாங்கள் இதுவிடயத்தில் மேலும் காலம் தாழ்த்தாது தலையிட்டு ஜனநாயக நாடுகளும், மனிதநேய அமைப்புகளும் தமிழ் மக்களை இன அழிப்பிலிருந்து காப்பாற்றுமாறு, தங்களைத் தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. தலைவர், ஐரோப்பிய ஒன்றியம் 2. தலைவர், சுவிஸ் ஒன்றியம் 3. அனைத்துலக அரச சார்பற்ற அமைப்புக்கள் ஆகியோருக்கும் கடிதத்தின் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன. |
No comments:
Post a Comment